Published : 29 Mar 2015 02:10 PM
Last Updated : 29 Mar 2015 02:10 PM

அரசு செய்தித் துறை இணையதளத்தில் முதல்வர் பெயரை மாற்றாது ஏன்?- கருணாநிதி

"தமிழக அரசின் செய்தித் துறை இணையதளத்திலேயே முதல்வர் பெயர் மாற்றப்படவில்லையா?" என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி, தமிழக பட்ஜெட் தயாரித்தாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டது, ரகசியக் காப்பு உறுதி மொழியை மீறிய செயல்" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதி மன்றம் நான்காண்டு சிறை தண்டனையும், நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறிய பிறகு, தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென்று உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அப்போது, ஜெயலலிதாவுக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பாலி நாரிமன், நீதிமன்றம் எந்த நிபந்தனை விதித்தாலும் ஏற்கத் தயார் என்றும், ஜாமீனில் விடுவித்தால் போதும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் உறுதி கொடுத்ததோடு, ஜாமீன் கிடைத்த பிறகு, நாரிமன் ஜெய லலிதாவை நேரில் சந்திக்க முயன்று பார்க்க நேரம் கிடைக்காத நிலையில், ஜெயலலிதா என்னென்ன நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டுமென்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அந்த எட்டு கண்டிஷன்களில் ஐந்தாவது கண்டிஷன் தான் "ஜெ.வின் வழி காட்டுதலில்தான் தமிழக அரசு இயங்குகிறதுங்கிற தோற்றத்தை உருவாக்கக் கூடாது" என்பதாகும்.

ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் காரியங்கள் என்ன? 28-3-2015 தேதியில் வெளியான நாளிதழ் ஒன்றின் செய்தியில், தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்புத் துறையின் இணைய தளத்தில் இன்றைய தினத்தில் தமிழக அமைச்சரவையில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதில் தமிழக முதல்வர் யார் என்பதற்கு "செல்வி ஜெ. ஜெயலலிதா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்" என்றும்; "திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்" என்றும் தான் இன்றளவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தமிழகஅரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்படக் கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் படம் மருந்துக்குக் கூடக் கிடையாது. மாறாக ஜெயலலிதா படம்தான் நிறைந்திருந்தது.

தமிழக அரசின் முக்கியமான துறை களில் ஒன்றான செய்தி, மக்கள் தொடர்புத் துறை சார்பிலே வெளியிடப்படம் இணைய தளத்திலேயே இந்தத் தவறு களையப்படாததற்குக் காரணம், அந்தத் துறையின் அமைச்சரா? அதிகாரிகளா? நம்மைக் கேள்விக் கேட்க யார் இருக்கிறார்கள் என்ற இறுமாப்பு தான் இந்தத் தவறுக்குக் காரணமா?

இன்னும் சொல்ல வேண்டுமேயானால், இந்த ஆண்டு முதலமைச்சர், பன்னீர்செல்வம் 25-3-2015 அன்று சட்டப் பேரவையில் படித்த நிதி நிலை அறிக்கையில் பத்தி 129இல் "போற்றுதலுக்குரிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி வழிகாட்டுதலின்படி இந்த நிதிநிலை அறிக்கையின் ஒவ்வொரு சொல்லும், அதற்கு அடிப்படையாக ஒவ்வொரு சிந்தனையும் அமைக்கப்பட்டுள்ளது" என்று எழுதப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சார்பில் வைக்கப்படும் நிதி நிலை அறிக்கை, குற்றம் புரிந்தவர் என்று நீதி மன்றத்தினால் தண்டிக்கப்பட்ட ஒருவருடைய வழி காட்டுதலின்படி தயாரிக்கப்படலாமா? நிதி நிலை அறிக்கை என்பது அரசுப் பொறுப்பிலே இருப்பவர்கள் ரகசியமாக வெளியார் யாருக்கும் தெரியாமல் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அந்த அறிக்கையினை ஜெயலலிதாவின் வழிகாட்டுதல்படி தயாரித்ததாக, தமிழக முதல்வர் பன்னீர்செல்வமே நிதி நிலை அறிக்கையில் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், இவர் ஏற்றுக் கொண்ட ரகசியக் காப்பு உறுதி மொழியை மீறியிருக்கிறார் என்று தானே பொருள்?

ஜெ.வின் வழி காட்டுதலில்தான் தமிழக அரசு இயங்குகிறது என்னும் தோற்றத்தை உருவாக்கக் கூடாது என்று உச்ச நீதி மன்ற விசாரணையின் போது, ஜெயலலிதா வின் வழக்கறிஞரே ஒப்புக் கொண்ட நிலையில், தற்போது அந்த நிபந்தனைக்கு முற்றிலும் மாறாக நிலைமை செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது சரியானது தானா?

எனவே இந்தப் பிரச்சினைகள் குறித்து ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கொடுத்த உச்ச நீதி மன்றமும், சட்டம் பயின்றோரும்,சட்டத்தை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்போரும் தான் முடிவுக்கு வர வேண்டும்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x