Published : 26 Apr 2017 04:14 PM
Last Updated : 26 Apr 2017 04:14 PM

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''01.01.2016 முதல் திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 01.01.2017 முதல் அகவிலைப்படியினை நான்கு சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 01.01.2017 முதல் நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப்படி உயர்வினால் அரசு ஊழியர்களுக்கு ரூ.244/- முதல் ரூ.3080/- வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.122/- முதல் ரூ.1540/- வரை ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். இந்த கூடுதல் தவணை அகவிலைப்படி ஜனவரி, 2017 முதல் ஏப்ரல், 2017 வரையிலான காலத்திற்கு நிலுவையாகவும், மே, 2017 மாதம் முதல் சம்பளத்துடனும் வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் பதினெட்டு லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவர். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ஆண்டொன்றுக்கு தோராயமாக ரூ.986.77 கோடியாக இருக்கும்'' என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் 64 துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் தங்களது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மிகப் பெரும் போராட்டத்தை நடத்திவரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x