Published : 17 Apr 2014 11:06 AM
Last Updated : 17 Apr 2014 11:06 AM

அம்மா பிரதமரானால் எதிர்க்கட்சி மாப்ளைங்க வாலைச் சுருட்டிக்கணும்: திண்டுக்கல் ஐ.லியோனி பேட்டி

ஐ.லியோனி கலைஞர் டி.வி-யின் நையாண்டி சொத்து. சிரிக்கச் சொல்லி சிந்திக்க வைக்கும் லியோனி ‘தி இந்து-வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

கோயில் திருவிழாக்களுக்கு பட்டிமன்றத்துக்கு போகும் நேரத்தில் பிரச்சாரத்துக்கு வந்திருக்கீங்க. தேர்தல் களம் எப்படி இருக்கு?

ஆளாளுக்கு ஒண்ணைச் சொல்றதால, யாரை ஆதரிக்கிறதுனு மக்களுக்கு இன்னும் க்ளியர் பிக்சர் கிடைக்கலை. ஆனாலும் மதச்சார்பின்மைக்கு நல்ல வரவேற்பு. திமுக ஆட்சியில நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும் புண்ணியவதி ஆட்சியில பூட்டுப் போட்ட திட்டங்களையும் எடுத்து வைக்கிறப்ப, மக்கள் ஆர்வமா கேக்குறாய்ங்க.

பாஜக-வை ஜெயலலிதா திடீர்னு தாக்கிப் பேச ஆரம்பித்திருப்பதன் சூட்சுமம் என்ன?

பாஜக-வை அந்தம்மா விமர்சிக்கா தது ஏன்னு நாங்க மேடைக்கு மேடை கேட்டோம். அதனால, பேருக்கு ஏதோ தாக்கிப் பேசியிருக்காங்க. இப்போ அவங்க சாடியிருக்கிறது கூட கண்துடைப்பு நாடகம்தான்.

சந்தியாவின் மகள்தான் இந்தியாவின் பிரதமர் என அதிமுக-வினர் சொல் கிறார்கள். ஒருவேளை, ஜெயலலிதா பிரதமரானால் என்ன நடக்கும்னு உங்க பாணியில சொல்லுங்க?

நூத்துக்கு 99 சதவீதம் அதுக்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை(?) அம்மா பிரதமரானா, இந்தியா முழுக்க ஒரு ரூபாய்க்கு இட்லி, ரெண்டு ரூபாய்க்கு புளி சாதம்னு குடுத்து மக்களை சோம்பேறியாக்கிட்டு சுரண்ட ஆரம்பிச்சிருவாங்க. பாஜக-வை விட ஒருபடி மேலாகவே மதவாத குணம் கொண்டவங்க அம்மா. அதனால, மோசமான விளைவுகளை நாடு சந்திக்கும்.

இந்திய நாடாளுமன்றத்தை இப்போ எதிர்க்கட்சிகள்தான் நடத்துகின்றன. அம்மா வந்துட்டாங்கன்னா எதிர்க்கட்சி மாப்ளைங்க எல்லாரும் வாலைச் சுருட்டிக்கணும். இல்லாட்டி, அத்தனை பேரையும் வெளியில தூக்கி வீசிருவாங்க. டெல்லியில உக்காந்துட்டா வருஷத்துக்கு 7 தடவ ராணுவ அமைச்சரை மாத்துவாங்க. அப்புறம் என்ன... பக்கத்து நாட்டுப் பங்காளிங்க ஈஸியா இந்தியா மேல படை எடுத்துருவாய்ங்க. அம்மா பிரதமரானால் இதுதாங்க நடக்கும்.

திமுக-வினர் சதிசெய்து செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்துவதாக ஜெயலலிதா பழிபோடுகிறாரே?

ஒரு முதலமைச்சர் இப்படிப் பேசலாமா? திமுக சதின்னு சொன்னா, கலைஞரா ராத்திரியோட ராத்திரியா எண்ணூர் அனல்மின் நிலையத்துக்குள்ள போயி கேபிள்களை வெட்டிவிட்டுட்டு வந்தாரு?

தேர்தல் வந்துவிட்டால் அரசியல் கட்சிகளுக்கு ஊறுகாய் மாதிரி ஆகிவிடுகிறாரே ரஜினி?

ரஜினி என்னோட நண்பர்னு இப்போ சொல்ற மோடி, இதுக்கு முந்தி ரெண்டு தடவ சென்னைக்கு வந்தப்ப அந்த நண்பரைத் தெரியலியா? நண்பர்னா பெங்களூருல ரஜினியோட ஒண்ணா படிச்சாரா… பம்பரம் சுத்துனாரா? இவங்க ரஜினிய ஊறுகாய் மாதிரி நினைக்கிறாங்க. ஆனா, ரஜினி எல்லாருக்கும் கிலோ கணக்குல அல்வா கிண்டி குடுத்துருவாரு.

விஜயகாந்த் பிரச்சாரத்தை எல்லோரும் கிண்டல் பண்றாங்க… நீங்க எப்படிப் பாக்குறீங்க?

மோடி என்னமோ வித்தைக்காரர் மாதிரி, ‘மோடி ஜீம் பூம்பானு சொன்னா தமிழ்நாட்டுல கரண்ட் கட்டே இல்லாம போயி, பளிச்சின்னு ஆகிரும்’னு விஜயகாந்த் சொல்றாரு. ’மோடி கூட ஏன் சேர்ந்தீங்க?’னு கூட்டத்துல ஒருத்தர் கேட்டதுக்கு, ‘ஏய் நான் சொல்றத கேளு… ஓட்டுப் போடுன்னு சொன்னா போடணும்னு சொல்றாரு.

திண்டுக்கல் கூட்டத்துல வாரியார் ஸ்டைல்ல கேள்விகளுக்கு பதில் சொல்றேன்னு கிளம்பிருக்காரு. முன் வரிசையில ஃபுல் மப்புல இருந்த ஒருத்தன், ‘தலைவா சாயந்தரம் என்ன சரக்கு போட்டே?’னு கேட்டுத் தொலைச்சிட்டான். ’ஏய் அதெல்லாம் கேட்கக் கூடாது’னு குதிச்சாரு. அதுக்குள்ள கேப்டன் டி.வி-யில சிக்னல் கட்டாகிருச்சு. விஜயகாந்த் நல்ல நடிகர்; நான்கூட அவரோட ரசிகன்தான். ஆனா, அரசியல்ல அவரு படுற பாட்டைப் பார்த்தா பாவமா இருக்குங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x