Published : 23 Apr 2014 09:40 AM
Last Updated : 23 Apr 2014 09:40 AM

அமைச்சர், எம்.எல்.ஏக்கள், எம்.பி அதிருப்தி அலையில் பொள்ளாச்சி

அ.தி.மு.கவுக்கு சாதகமாக மடத்துக்குளம், தொண்டாமுத்தூர், தி.மு.கவுக்கு ஆதரவாக உடுமலை, கிணத்துக்கடவு மற்றும் வால்பாறை, பொள்ளாச்சி இரண்டுக்கும் மத்திமமான நிலை தெரிகிறது.

இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் கவுண்டர்கள் சமூக ஓட்டுக்கள் கிட்டத்தட்ட 5 லட்சம். அதில் சென்ற 2009 தேர்தலில் கவுண்டர் கட்சி வேட்பாளர் பெஸ்ட் ராமசாமி 1 லட்சத்து 3 ஆயிரம் வாக்குகளை பெற்றார். அச் சமூகத்தின் மீதி ஓட்டுக்கள் எங்கே சென்றது.

அ.தி.மு.க கவுண்டர் சுகுமாரனுக்கும், தி.மு.க கவுண்டர் சண்முக சுந்தரத்திற்கும்தான் என்று பொள்ளாச்சிக்காரர்கள் சாவதானமாக சொல்கிறார்கள்.

இப்போது கொ.ம.தே.க. ஈ.ஆர்.ஈஸ்வரன் பா.ஜ.க.,வின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் கவுண்டர்கள் ஒட்டுமொத்தமாக அவருக்கே வாக்களிப்பார்களா? அல்லது அ.தி.மு.க மகேந்திரனுக்கும், தி.மு.க பொங்கலூர் பழனிச்சாமிக்கும் (இருவரும் கவுண்டர்கள்தான்) மாற்றி மாற்றி போட்டு விடுவார்களா? என்பதுதான் அரசியல் நோக்கர்கள் மத்தியில் கடைசிகட்ட பிரச்சாரம் வரை இருந்த கேள்வி. மலர்ந்த முகத்தோடு, பட்டி தொட்டியெங்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இருக்கும் காலனிகளில் எல்லாம் புகுந்து புகுந்து ஓட்டுக்கேட்டு வந்துள்ளார் ஈஸ்வரன்.

ஏற்கனவே இருந்த இந்த தொகுதி எம்.பி சுகுமார் என்னதான் செய்தார்? தொகுதிக்குள்ளேயாவது வந்தாரா? என கேள்விகள் வாக்காளர்களிடம் கேட்டுவிட்டே பேசியிருக்கிறார். தொகுதியில் மிகுந்துள்ள தென்னை விவசாயிகளின் பிரச்சினை, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் பெற்றுத்தராத எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின், மந்திரி (தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன் கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ) மீது சாடல், கிடப்பில் கிடக்கும் ஆனைமலையாறு- நல்லாறு திட்டம், பாதியில் நிற்கும் நீலம்பூர்- வாளையாறு சாலை, முறைப்பாசனம் என்ற பெயரில் அரைகுறையாக நடக்கும் பி.ஏ.பி. பாசனத் திட்டம் என எல்லாவற்றையும் போட்டுத் தாக்குகிறார். இதுதவிர ஜாதி, மதமாச்சர்யங்களை கடந்து நான் உங்களுக்கானவனாக இருந்து பாடுபடுவேன் என்றும் உறுதி கொடுத்துள்ளார்.

இருப்பினும் ஈஸ்வரன் பாடு தொகுதிக்குள் திண்டாட்டமாகத்தான் இருந்து வருகிறது.

ஏனெனில் இங்கே உள்ள பிரச்சனைகளைக் காட்டிலும் மக்கள் கட்சி மாச்சர்யம், ஜாதி மாச்சர்யங்களுக்குட்பட்டே வாக்களிக்க முடிவு செய்திருப்பதை காணமுடிகிறது. மற்ற தொகுதிகளில் தி.மு.க என்ற கட்சி இருக்கிறதோ, இல்லையோ என்றிருக்கும் நிலையை இங்கே மாற்றி தி.மு.கதான் இங்கு இருக்கிறது என்ற நிலைக்கு கொண்டு வந்துள்ளார் பொங்கலூர் பழனிச்சாமி. அவர் அமைச்சராகவும், கோவையில் எம்.எல்.ஏவாகவும் இருந்த போதெல்லாம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, உடுமலை, பொங்கலூர், சுல்தான் பேட்டைக்கு துக்கம், திருமணம் என்று சென்று வந்த சொந்த பந்தங்கள் மட்டும் பல லட்சம் இருக்கும். அதுவே இவருக்கு வெற்றி வாய்ப்பை தந்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார்கள் இவரின் ஆதரவாளர்கள்.

அதேசமயம் அ.தி.மு.கவின் கோட்டை, மகேந்திரன் புதிய முகம், பொருளாதார வசதியுள்ள இளைஞர், இவருக்காக தொகுதி முழுக்க வாரியிறைக்கப்படும் செலவு தொகை அ.தி.மு.கவினரை உற்சாகமாக வேலை பார்க்க வைத்துள்ளது. சிறுபான்மையினரை, அதிருப்தியில் உள்ள மாற்றுக் கட்சியினரை வளைக்கும் விஷயத்தில் பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலையில் உள்ளார் என்றால் தலித் சமூகத்தவர் ஓட்டுக்களை, தோட்டத் தொழிலாளர்களை, விவசாயக் கூலிகளை ஈர்ப்பதில் அ.தி.மு.கவே முன்னிலை வகிக்கிறது.

கட்சி பலம், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் உழைப்பு, இவை அ.தி.மு.கவின் பலம். பலஹீனம் என்றால் ஆளுங்கட்சி, கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர் மீதான அதிருப்தி, மிக்ஸி, கிரைண்டர் போன்ற நலத்திட்டங்கள் சென்று சேராத மக்களின் கோபம்.

தி.மு.க வேட்பாளரின் பலம் தொகுதிக்குள் இருக்கும் அறிமுகம், தனித்துவ பிரச்சாரம், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, பலஹீனம் கட்சி நிர்வாகிகளின் உள்ளடி. பா.ஜ.க வேட்பாளர் ஈஸ்வரனுக்கு பலம் மோடி பிரதமர் ஈர்ப்பில் உள்ள இளைஞர்கள், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி, தே.மு.தி.க தொண்டர்களின் பணி, பிரச்சார சாதுர்யம்.

இவரின் மிக முக்கியமான பலமும் பலஹீனமும் கவுண்டர் ஜாதிக் கட்சி தலைவர் என்பது மட்டுமே.

இந்த வகையில் வெற்றி வாய்ப்பு என்று பார்த்தால் பா.ஜ.கவின் ஈஸ்வரன், தி.மு.கவின் பொங்கலூர் பழனிச்சாமி, அ.தி.மு.கவின் மகேந்திரன் ஆகியோர் வெற்றிக்கான போட்டி களத்தில் உள்ளதாகத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x