Published : 23 Sep 2014 06:19 PM
Last Updated : 23 Sep 2014 06:19 PM

அதிமுகவுக்கு கிடைத்தது அலங்கோல வெற்றி: விஜயகாந்த்

'உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக பெற்றிருப்பது அமோக வெற்றியல்ல, அராஜகத்தால் பெறப்பட்ட அலங்கோல வெற்றி" என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நடைபெற்று‌ முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறவில்லை என நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். முறைகேடாக பெற்ற வெற்றிக்கு விழா கொண்டாடும் ஆளும்கட்சியினரைப் பார்த்து‌ தமிழகமே சிரிக்கின்றது‌.

இந்த இடைத்தேர்தலில் 45 சதவீதம் 50 சதவீதம் என வாக்குப்பதிவு குறைவாக நடந்து‌ள்ளது‌. பெரும்பாலான மக்கள் ஆளும்கட்சியின் மீது‌ நம்பிக்கை இல்லாமல், அதிமுகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதால்தான் வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வரவில்லை.

எப்படியும் தில்லு‌ முல்லு‌களை செய்து‌ ஆளும்கட்சி வெற்றி பெற்றதாக அறிவித்து‌ விடுவார்கள், எதற்காக நாம் சென்று‌ வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலை மக்களிடையே ஏற்பட்டதன் விளைவுதான், வாக்கு சதவிகிதம் வெகுவாக குறைந்து‌ போனதற்கு காரணம்.

ராமநாதபுரம் நகராட்சியின் முன்னாள் தலைவர் சேகர் இறந்ததால்தான் அங்கு தேர்தல் நடைபெற்றது‌. ஆனால், வாக்காளர் பட்டியலில் அவரது‌ பெயர் அப்படியே உள்ளது‌. அந்த வாக்கைக்கூட வேறு‌ நபர் அளித்து‌ள்ளதாகவும் புகார் எழுந்து‌ள்ளது‌. இப்படி, பல முறைகேடுகளை செய்து‌ ஆளும் அதிமுக வெற்றி பெற்றது‌ என்று‌ அறிவித்துள்ளீர்களே, எதற்காக தேர்தல் நடத்த வேண்டும்.

சென்னை மாநகராட்சியின் மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது‌, சட்டத்திருத்தத்தின் மூலம் அவரை ராஜினாமா செய்ய வைத்து‌ அதன்பின் அதிமுகவில் துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜனுக்கு மேயர் பொறு‌ப்பு வழங்கி, சென்னை மாநகராட்சியின் தேர்தலை நடத்தாமல் அவரையே மேயராக செயல்பட வைத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றை தமிழக மக்கள் யாரும் மறக்கவில்லை.

அதே பாணியில் தேர்தலையே நடத்தாமல் ஆளும்கட்சியைச் சார்ந்த நபர்களையே நியமனம் செய்து‌, வெற்றி பெற்றவர்களாக அறிவித்திருக்கலாமே, இதன் மூலம் மக்களின் வரிப்பணம், காலநேரம் என எது‌வுமே வீணடிக்கப்படாமல் இருந்திருக்கும்.

நாடு முழுவது‌ம் சமீபத்தில் நடந்து‌ முடிந்த பாராளுமன்ற மற்று‌ம் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர்கள் சில இடங்களில் தோல்வியுற்றது‌ம் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையும் நாடு அறியும். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் எந்த இடைத்தேர்தல் நடந்தாலு‌ம், அப்போது‌ யார் ஆளும்கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களே முறைகேட்டின் மூலம் வெற்றி பெறு‌வது‌ என்பது‌ வாடிக்கையாக உள்ளது‌.

இதன் மூலம் தமிழ்நாட்டில் ஜனநாயகம் மடிந்து‌போய், பணநாயகமும், அதிகார பலமும்தான் வெற்றி பெறுகின்றன. இந்த நிலை நிச்சயம் தமிழகத்தில் மாற வேண்டும், மாறு‌ம்காலம் வெகுதொலைவில் இல்லை.

இது‌ ஆளும் அதிமுகவின் அமோக வெற்றியல்ல, அராஜகத்தால் பெறப்பட்ட அலங்கோல வெற்றி என்று‌ தமிழக மக்கள் பேசுகிறார்கள்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x