Published : 27 Sep 2016 08:29 PM
Last Updated : 27 Sep 2016 08:29 PM

அதிமுக அரசின் விருப்பத்துக்கேற்ப மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுக அரசின் விருப்பத்துக்கேற்ப, மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி கடந்த 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்று அது அக்டோபர் 3-ம் தேதி நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வது, கூட்டணி கட்சிகளுடன் பேசுவது போன்ற நடவடிக்கைகளுக்கு கொஞ்சம் கூட அவகாசம் அளிக்காமல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகளை அதிர்ச்சியடைய வைக்க வேண்டுமென ஆளுங்கட்சியுடன் இணைந்து உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் தாமதமாக அறிவித்துள்ளது. தற்போது, தேர்தல் அறிவிப்பு வெளிவந்த சில மணி நேரத்திலேயே அதிமுக. தனது வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்திருக்கிறது. அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்த பிறகு, மற்ற எதிர்க்கட்சிகளுக்கு நேரம் கொடுக்காமல் தேர்தல் தேதியை மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதிலிருந்தே அதிமுக அரசின் விருப்பத்துக்கேற்ப, மாநிலத் தேர்தல் ஆணையம் செயல்படுவதை புரிந்து கொள்ளலாம்.

மாநிலத் தேர்தல் ஆணையம் தனது, சுதந்திரமான சுயாட்சி நிலையை விட்டுக்கொடுத்ததையும், நடுநிலை தவறியதையும் தொடக்க அறிவிப்பிலேயே தெரிந்து கொள்ளலாம். 2011-ல் ஆட்சியிலிருந்து அதிமுக, உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல கோடி ரூபாய்க்கான திட்டங்களை வெளியிட்டது. தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளை குறிப்பிட்ட சில இடங்களுக்கு உள்நோக்கத்துடன் மாறுதல் செய்தது. வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் வழங்கவில்லை.

அதே மாதிரியான சம்பவங்கள் தற்போதும் நடக்கின்றன. திருவாரூர் நகராட்சி ஆணையராக இருந்து வரும் நாராயணன் வலுக்கட்டாயமாக விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் திமுக தொழிற்சங்க அமைப்பாளர் ஒருவர் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதிமுகவினரின் தேர்தல் கால அணுகுமுறை திமுகவினருக்கு புதிதல்ல. உள்ளாட்சித் தேர்தலில் தாராளமான கறுப்புப் பண விநியோகம், காவல் துறையினரின் வெளிப்படையான ஆதரவு, மாநிலத்தேர்தல் ஆணையத்தின் நடுநிலை தவறிய நடவடிக்கை, அரசு நிர்வாகத்தின் மறைமுக ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் அதிமுகவினர் தேர்தல் களத்தில் உள்ளனர். இதனை நினைவில் கொண்டு, திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றியடைய செய்யவும், ஜனநாயகத்தை வென்றெடுக்கவும், அறம், ஆர்வம் ஆகியவற்றை துணை கொண்டு எதற்கும் அஞ்சாமல் திமுகவினர் பாடுபட வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x