Published : 27 Jan 2015 09:00 AM
Last Updated : 27 Jan 2015 09:00 AM

அணுசக்தி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு: அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன் பெருமிதம்

அணுசக்தி தொழில்நுட்பத்தில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளதாக, அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில், இந்திய அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசனுக்கு, 1984-ம் ஆண்டு பத்ம, 1990-ல் பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. தற்போது நாட்டின் 2-வது உயரிய விருதான பத்மவிபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உதகையில் வசித்துவரும் அவர் நேற்று கூறியது: இதுபோன்ற விருதுகள் பெரு நகரங்களில் வசிப்பவர் களுக்குதான் அதிகம் கிடைக் கிறது; ஊரகப் பகுதியில் உள்ள வர்களுக்கு கிடைப்பது அரிது. ஆட்களின் திறனுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், பல நேரங்களில் அரசியல் பரிந்துரைப்படியே வழங்கப் படுகின்றன. அணுசக்தித் துறையில் ஆயுதப் பிரிவு விஞ்ஞானிகள் 5 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், முதல்முறையாக அணுசக்தி உற்பத்திப் பிரிவைச் சேர்ந்த எனக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சோவியத் யூனியனுடன் ஒப்பந்தம்

நாட்டில் நிலவும் மின் தேவைக்கு, அணுசக்தி மட்டுமே தீர்வாக முடியும். அதனால்தான், 1990-ல் அப்போதைய சோவியத் யூனியனிடம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சோவியத் யூனியனில் ஏற்பட்ட உள்நாட்டு பிரச்சினைகளால், ரஷ்யா பல நாடுகளாகப் பிரிந்தது. மேலும், இந்தியாவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 1998-ல் 2-வது முறையாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அணு உலை அமைக்கும் பணிகள் தொடங்கின.

6,000 மெகாவாட் இலக்கு

கூடங்குளத்தில் தற்போது 450 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, 2-வது யூனிட்டில் உற்பத்தி தொடங்கும். 3, 4-வது யூனிட்களின் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளன. 2025-ல் 5, 6-வது யூனிட்கள் நிறுவப்பட்டு, 6,000 மெகா வாட் மின் உற்பத்தி என்ற இலக்கு எட்டப்பட்டும்.

அணு உலை பாதுகாப்பு

ஜப்பான் நாட்டின் புகுஷிமா நகரில் இருக்கும் அணு உலைகள், பழைய முறையில் அமைக்கப்பட்டவை; பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்தது. அந்த அணு உலைகள் அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட இடங்களும் தவறானவை. சுனாமி மற்றும் பூகம்பம் நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்டதால்தான் பாதிக் கப்பட்டது. கூடங்குளத்தில் அமைக்கப் பட்டுள்ள அணு உலைகள், `3-ம் தலைமுறை பிளஸ்’ முறையில் நிறுவப்பட்டுள்ளன. இதனால், பாதுகாப்புக்கு உத்தரவாதம் உள்ளது. மேலும், அங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள், ஊழியர்களுக்குப் போதுமான பயிற்சி அளிக்கப்படுகிறது.

அணுசக்தியில் தன்னிறைவு

அணுசக்தி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளையே இந்தியா சார்ந்திருந்தது. தற்போது, இந்தியா அதில் தன்னிறைவு பெற்றுள்ளது. எந்த ஒரு நாட்டின் உதவி இல்லா மலும், தன்னிச்சையாக அணு உலைகளை அமைக்க முடியும். சென்னை, கல்பாக்கத்தில் உள்ள அணு உலை, முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய-அமெரிக்க உறவில் நெருக்கம்

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையால், இந்திய - அமெரிக்க உறவில் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், 2008-ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தற்போது நிறைவேறியுள்ளதுடன், அணுசக்தி தொழில்நுட்பம் இன்னும் மேம்படும். இன்றைய தலை முறையினர் அறிவியல் துறையில், குறிப்பாக ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். அதன்மூலமே இந்தியா வல்லரசாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x