Published : 22 Oct 2016 12:37 PM
Last Updated : 22 Oct 2016 12:37 PM

அக்.25-ல் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஸ்டாலின் அழைப்பு

காவிரி தொடர்பாக விவாதிக்க வரும் 25-ம் தேதி அன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த சில வாரங்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவில்லை.

இந்நிலையில் திமுக தலைமையில் சென்னை அறிவாலயத்தில் வரும் 25-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும், அனைத்து விவசாய சங்கங்களுக்கும் ஸ்டாலின் தனித்தனியே கடிதம் எழுதி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ள கலைஞர் அரங்கத்தை ஸ்டாலின் இன்று பார்வையிட்டு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கடந்த 14-ம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென சந்தித்துப் பேசினார். அப்போது அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும், தமிழகத்தில் இருக்கக் கூடிய அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் என அத்தனைபேரையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்து, அவர்களுக்கு அழுத்தம் தர வேண்டும் ஆகிய மூன்று தீர்மானங்களை வலியுறுத்தி, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிதியமைச்சரிடம் ஸ்டாலின் வழங்கினார்.

கடந்த 15-ம் தேதி திமுக எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மனு அளித்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்டோபர் 17, 18 தேதிகளில் தமிழக அனைத்து விவசாயிகள் கூட்டியக்கம் சார்பில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், ''காவிரி பிரச்சினைக்காக கர்நாடகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடுகின்றன. அமைச்சரவைக் கூட்டம், அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப்பேரவைக் கூட்டம் என இணைந்து செயல்படுகின்றனர். அதுபோல தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தையும், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தையும் கூட்ட வேண்டும். இல்லையெனில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும்'' என்றார்.

இந்நிலையில் தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாத நிலையில் ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x