Last Updated : 06 Nov, 2016 01:15 PM

 

Published : 06 Nov 2016 01:15 PM
Last Updated : 06 Nov 2016 01:15 PM

உடற்கூறு, மரபு அமைப்பில் தனித்துவம்: சர்வதேச அங்கீகாரம் பெற்ற திருநெல்வேலி ‘செவ்வாடு’

தமிழகத்தில் கால்நடை வளர்ப்பில் ஆடுகளுக்கு தனி முக்கியத்துவம் இருந்து வருகிறது. அந்த வகையில், மண் சார்ந்த அடையாளங்களைக் கொண்டதாக சென்னையின் சிவப்பு ஆடு, திருச்சியின் கருப்பு ஆடு, சேலத்தின் மேச்சேரி ஆடு, கோவை குரும்பை ஆடு, நீலகிரி ஆடு, ராமநாதபுரத்தின் வெள்ளை ஆடு, வெம்பூர் ஆடு, கீழக்கரிசல் ஆடு என 8 வகையான பாரம்பரிய செம்மறி ஆடு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, திருநெல் வேலியின் ‘செவ்வாடு’ என்ற பாரம் பரிய ஆடு இனத்தை நாகர் கோவில் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத் தியது. அதை அங்கீகரித்துள்ள தேசிய கால்நடை மரபு வள அமைப்பு, செவ்வாடு இனத்துக்கு சர்வதேச அங்கீகாரத்தையும், அதை ஆய்வுப்பூர்வமாக முன்னெடுத்துச் சென்ற ஆராய்ச்சி மையத்தின் தலைவர் த.ரவிமுருகன் பெயரில் செவ்வாடு இன பதிவுக்கான சான்றையும் வழங்கியுள்ளது.

ஆய்வு மேற்கொண்ட த.ரவி முருகன் கூறியதாவது: 1989-ல் கணேஷ்கலே என்பவர் தமிழகத்தில் 8 வகை பாரம்பரிய செம்மறி ஆடுகளை பதிவு செய்துள்ளார். அதன் தொடர்ச்சியாக 2001 முதல் 2005 வரை தகவல்களைத் திரட்டி, 2013 வரை ஆய்வு நடத்தினோம். அதில் திருநெல்வேலி மாவட்டத்தின் செவ்வாடு, ராமநாதபுரம், புதுக் கோட்டையில் உள்ள பட்டணம் இனம், மதுரையில் உள்ள கச்ச கத்தி ஆகிய 3 இனங்களுக்கு பாரம்பரிய பெருமை இருப்பது தெரியவந்தது. இதில் கச்சகத்தி ஆடு இனத்தை ஒரு தொண்டு நிறுவனம் பதிவு செய்துள்ளது. எனவே செவ்வாடு இனம் குறித்து விரிவான ஆய்வு நடத்தினோம்.

10-வதாக அறியப்பட்டுள்ள செவ்வாடு, கலாச்சார, பொருளா தார முக்கியத்துவம் உடையதும், பாரம்பரிய ஆடு இனங்களிலேயே அதிக தனித்துவம் இருப்பதும் தெரியவந்தது. 50 ரத்த, டிஎன்ஏ மாதிரிகளை எடுத்து செவ்வாடு இனம் குறித்து ஆய்வு செய்தோம். அதன் உடற்கூறியலும், மரபு அமைப்பும் மற்ற ஆடுகளைவிட தனித்துவம் பெற்றிருந்தது தெரிய வந்தது. ஆய்வு முடிவுகளை, தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக தேசிய கால்நடை மரபு வள அமைப்புக்கு சமர்ப்பித் தோம். அதை நேரில் ஆய்வு செய்த வல்லுநர் குழு, கடந்த செப்டம்பர் மாதம், செவ்வாடு இனத்தை தனி இனமாக அங்கீகரித்தது.

பாரம்பரிய விழாக்களில்

செவ்வாடு இனத்தில் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இரு வகைகள் உள்ளன. தென்மாவட்டங்களில் மாமன்கிடா, கிடா வெட்டு என்ற இரண்டு பாரம்பரிய விழாக்களில் இந்த ஆடுகள் பயன்படுகின்றன. பெண் பூப்படையும்போதும், திருமணத் தின்போதும் தாய்மாமன் சீர்வரிசை யாக கொடுக்கவும், பெண் தெய்வங் களுக்கு கிடாவெட்டவும் செவ்வாடு கள் காலம்காலமாக பயன்படுத் தப்படுகின்றன. மற்ற இன ஆடு களைவிட, செவ்வாடு பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாக வும், இனக் கலப்பு இன்றியும் தனித்துவத்துடனும் இருந்ததால், சர்வதேச அங்கீகாரம் கிடைத் திருக்கிறது. மேலும் அதற்காக 25 வருடத்துக்கான பதிவுச் சான்றும் கிடைத்திருக்கிறது (பதிவு எண் INDIA_SHEEP_1800_CHEVAADU_14041). அடுத்ததாக ராமநாதபுரம், புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள பட்டணம் இன ஆடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

செவ்வாடுகள், திருநெல்வேலி மாவட்டத்தில் மேலநீலிதநல்லூர், மானூர், பாப்பாகுடி, ஆலங்குளம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் உள்ளன. தமிழகத்தில் இந்த இன ஆடுகள் மொத்தமாகவே 1.5 லட்சம் மட்டுமே உள்ளன. இதர இனங்களுடன் சேர்த்து கலப்பினங்கள் உருவாக்கப்படு வதால் இதுபோன்ற மண் சார்ந்த அடையாள இனங்கள் அழிவைச் சந்திக்கின்றன. அழிவுப்பாதையில் இருந்து செவ்வாடு போன்ற பாரம்பரியம் மிக்க கால்நடை இனங்களைக் காக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x