Published : 14 Oct 2016 12:07 PM
Last Updated : 14 Oct 2016 12:07 PM

காவிரி பிரச்சினை: அமைச்சர் ஓ.பி.எஸ். உடன் மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென சந்தித்துப் பேசினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், எம்எல்ஏக்கள் பொன்முடி, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் வந்திருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின், "நேற்றைய தினம் (வியாழக்கிழமை) தமிழகத்தை சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகளை அழைத்து காவிரி விவகாரம் குறித்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தி, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், இன்று நிதியமைச்சர் அவர்களை சந்தித்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க நிர்வாகிகளின் கையெழுத்துகள் அடங்கிய தீர்மானத்தின் நகலை வழங்கினேன்.

குறிப்பாக, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இரண்டாவதாக, தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும். மூன்றாவதாக, தமிழகத்தில் இருக்க கூடிய அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க நிர்வாகிகள் என அத்தனைபேரையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்து, அவர்களுக்கு அழுத்தம் தர வேண்டும் என்கிற மூன்று தீர்மானங்களை வலியுறுத்தி, நேற்றைக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிதியமைச்சரிடத்திலே வழங்கியிருக்கிறோம்.

நிதியமைச்சர் மட்டுமல்ல, பொதுப்பணித்துறை அமைச்சரிடத்திலும், தலைமை செயலாளரிடத்திலும் தீர்மானங்களின் நகலை வழங்கியிருகிறோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக நிதி அமைச்சரும், பொதுப்பணித்துறை அமைச்சரும் எங்களிடத்தில் உறுதிமொழி அளித்திருக்கிறார்கள்.

தலைமை செயலாளரை பார்க்கவில்லை. தீர்மானங்களில் நகலை தலைமை செயலாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.

மேலும், முதல்வரின் அனைத்து இலாகாக்களும் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டிருக்க கூடிய நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. தமிழக அரசு சீராக இயங்குகிறதா என செய்தியாளர்கள் கேட்டபோது, "இப்போது அந்த பிரச்சனைகள் குறித்து பேசவில்லை. நேற்று விவசாயிகள் கூட்டமைப்புகளுடன் கூடி பேசி எடுத்த முடிவுகள் அடிப்படையில்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது" என்றார்.

விவசாயக் கூட்டத்தின் தீர்மானம்:

காவிரி பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விவசாய அமைப்புகளுடன் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

காவிரி பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள் என்பதை உணர்த்த தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவற்ற வேண்டும். அதன்பிறகு அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்த வேண்டும்.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு ஆகியவற்றை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. விரிவான செய்திக்கு: > | காவிரி பிரச்சினை: விவசாய அமைப்புகளுடன் ஸ்டாலின் ஆலோசனை- அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வலியுறுத்தல் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x