Published : 10 Oct 2016 02:05 PM
Last Updated : 10 Oct 2016 02:05 PM

உடல் பருமன் பெருக்கத்தை தடுக்க உடனடி நடவடிக்கைகள் வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அக்டோபர் 11 ஆம் நாள் 'உலக உடல்பருமன் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய உலகின் மிகப்பெரிய பேராபத்துகளில் ஒன்றாக உடல்பருமன் மாறியுள்ளது என்கிறார் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

அக்டோபர் 11 ஆம் நாள் 'உலக உடல்பருமன் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய உலகின் மிகப்பெரிய பேராபத்துகளில் ஒன்றாக உடல்பருமன் மாறியுள்ளது. இதனால், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கீழ் 2011 ஆம் ஆண்டில் உலக நாடுகள் ஒன்று கூடி, உடல்பருமன் பாதிப்பு அளவை 2010ஆம் ஆண்டின் அளவுக்கு 2025 ஆம் ஆண்டிற்குள் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன.

உலக சுகாதார நிறுவனத்தின் இந்த இலக்கு தமிழ்நாட்டுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் உடல்பருமனால் பாதிக்கப்பட்டோர் அளவு 10% அதிகரித்துள்ளது. 2005-2006 ஆம் ஆண்டில் தமிழக ஆண்களில் 14.5%, பெண்களில் 20.9 % அளவினர் உடல்பருமனால் பாதிப்படைந்திருந்தனர். 2015-2016 ஆம் ஆண்டில், இது முறையே 28.2%, பெண்களில் 30.9% என அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது. இது மிக மிக ஆபத்தானதாகும்.

நீரிழிவு, இருதய நோய்கள், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல தொற்றா நோய்களை (Non-Communicable Diseases - NCDss) உடல்பருமன் உருவாக்குகிறது. உடல்பருமன் மற்றும் அதுதொடர்பான தாக்குதல்களால் தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சென்னை நகரில் மட்டும் நான்கில் ஒரு குழந்தை உடல்பருமனால் பாதிப்படைந்துள்ளது. தவறான உணவுப் பழக்கம், அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு உணவுகள், மென்பானம், அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்த்தல், உடற்பயிற்சியின்மை, பள்ளிகளில் விளையாட்டு குறைவு ஆகியவையே உடல்பருமனுக்கு காரணமாகும்.

எனவே, உடல்பருமனை தடுப்பது, குறிப்பாக குழந்தைகளையும் இளம்பருவத்தினரையும் உடல்பருமன் பேராபத்திலிருந்து காப்பது அவசரத் தேவை ஆகும். இதற்காக பின்வரும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்:

1. அதிக கொழுப்பு, அதிக சர்க்கரை, அதிக உப்பு கொண்ட மென்பானங்கள், பீட்சா, பர்கர் வகைகள், கொழுப்பு மிகுதியான பொட்டல உணவு முறைகளை (Junk Food) கட்டுப்படுத்துதல் வேண்டும். இதற்காக, கேரளத்தில் 14.5% கொழுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தும் தில்லியும் கொழுப்பு வரியை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளன. இதே போன்று, தமிழகத்திலும் உடல்பருமனை ஏற்படுத்தும் உணவுப் பொருட்கள் மீது 'கொழுப்பு வரியை' விதிக்க வேண்டும்.

2. மத்திய அரசு கொண்டுவரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் (GST) கீழ், உடல் பருமனை ஏற்படுத்தும் மென்பானங்கள், பீட்சா, பர்கர் வகைகள், கொழுப்பு மிகுதியான பொட்டல உணவுகள் மீது 40% வரிவிதிக்க வேண்டும் என்றும் ஜிஎஸ்டி வரிக்கான அரவிந்த் சுப்பிரமணியன் குழு (Report on the Revenue Neutral Rate and Structure of Rates for the GST 2015) அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த 40% வரி விதிப்பு பரிந்துரையை மத்திய அரசு உறுதியாக நிறைவேற்ற வேண்டும்.

3. பள்ளிகளிலும் பள்ளிகளுக்கு அருகிலும் நொறுக்குத் தீனி, மென்பானம் மற்றும் பெருந்தீனி (Junk Food) வகைகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

4. பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகளை கட்டாயமாகவும், போதுமான நேரமும் நடத்த வகை செய்தல் வேண்டும்.

5. தெருக்களிலும் சாலைகளிலும் வாகனப் போக்குவரத்தை மட்டுப்படுத்தி, நடக்கவும், மிதிவண்டியில் செல்லவும், வாய்ப்புள்ள இடங்களில் மக்கள் ஒன்று கூடவும், விளையாடவுமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்..

மேற்கண்ட நடவடிக்கைகள் அனைத்தும், உலக சுகாதார நிறுவனத்தின் குழந்தைகள் உடல்பருமனை தருப்பதற்கான ஆணையத்தின் (WHO Report of the commission on ending childhood obesity 2016) பரிந்துரைகளின் படி அவசியமானவை ஆகும்.

தமிழக மக்களின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, குறிப்பாக, குழந்தைகளின் எதிர்காலத்தைக் காப்பாற்ற, இந்த நடவடிக்கைகள் அவசரகால நோக்கில் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x