Published : 26 Sep 2016 09:35 AM
Last Updated : 26 Sep 2016 09:35 AM

பொதிகை, நெல்லை விரைவு ரயில்களில் எல்எச்பி சொகுசு பெட்டிகள் விரைவில் இணைப்பு: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

பொதிகை, நெல்லை விரைவு ரயில்களில் பாதுகாப்பு வசதிகள் நிறைந்த, அதிர்வு இல்லாமல் செல்லும் எல்எச்பி சொகுசுப் பெட்டிகள் விரைவில் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள எல்எச்பி பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, ஒரு ரயில் பெட்டி 51.7 டன் எடை கொண்டது. அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வசதியுள்ளது. சொகுசு இருக்கைகள், செல்போன் சார்ஜ் போடும் வசதி உட்பட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.

வழக்கமாக செல்லும் விரைவு ரயில் பெட்டியில் 72 படுக்கைகள், ஏசி பெட்டியில் 64 படுக்கைகள் இருக்கும். எல்எச்பி பெட்டிகளில் 80 படுக்கைகள், ஏசி பெட்டியில் 72 படுக்கைகள் உள்ளன. ரயில்வேத் துறையில் முக்கிய விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டிகள் படிப்படியாக இணைக்கப்பட்டு வருகின்றன.

ரயில்வே அதிகாரி தகவல்

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘பயணிகள் விரைவாகவும், சொகுசாகவும் செல்லும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் எல்எச்பி பெட்டிகள் அமைக் கப்பட்டுள்ளன. அதன்படி, நாடுமுழுவதும் முக்கிய விரைவு ரயில்களில் தற்போதுள்ள பெட்டிகள் நீக்கப்பட்டு, புதிய எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. தற்போது, பாண்டியன், ராக்போர்ட் விரைவு ரயில்களில் எல்எச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் அடுத்த 2 மாதங்களில் எல்எச்பி பெட்டிகள் இணைக் கப்படவுள்ளன” என்றார்.

ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள எல்எச்பி பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x