Published : 05 Aug 2016 12:47 PM
Last Updated : 05 Aug 2016 12:47 PM

தமிழ் சமூகத்தின் வேர்களைத் தேடிய பயணம் தொடரும்: இலங்கை பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை பேராசிரியர்

தமிழில் படிப்பதும், பேசுவதும் தெரிந்தே தவிர்க்கப்பட்டுவரும் சூழலில், இலங்கையில் இருந்து கோவை வந்துள்ள தமிழ்த் துறை மாணவர்கள், தமிழ் பாரம்பரியத்தையும், தமிழ்ச் சமூகத்தின் பழமையையும் அறிந்து பெருமிதம் கொள்கிறார்கள்.

இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை மாணவர்கள், தமிழ் சங்க இலக்கியங்கள், தமிழின் பாரம்பரியங்களை அறிந்துகொள்வதற்காக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வந்துள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த் துறையும், தஞ்சைப் பல்கலைக்கழக அயல்நாட்டு தமிழ் கல்வித் துறையும் இணைந்து நடத்தும் இந்த பயிலரங்கில் தமிழ், தமிழ்ச் சமூகத்தின் விழுமியங்களை அவர்கள் அறிந்துகொள்ள இருக்கின்றனர்.

பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வி.மகேஸ்வரன் கூறும்போது, "தமிழ் இனக் குழு மக்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய கடமை உள்ளது. ஏனென்றால், எங்களின் இனக்குழு எச்சங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. அவர்களை நேரில் சென்று பார்க்காமலும், அவர்களை அறிந்துகொள்ளாமலும் எப்படி தமிழின் பாரம்பரியத்தை உள்வாங்கிக்கொள்ள முடியும்?.

எங்களின் வேர்களைத் தேடிய பயணமாகவே இந்த பயிலரங்கைப் பார்க்கிறோம். தஞ்சைப் பல்கலைக்கழகமும், பாரதியார் பல்கலைக்கழகமும் உறுதுணையாக இருக்கின்றன. நீலகிரி மாவட்டத்திலுள்ள ‘சாலு குரும்பா’ பழங்குடி மக்களை சந்தித்தோம்; அவர்களது வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு ஆகியவற்றை அறிந்து வியந்தோம்.ஒரு மொழி வாழ முடியாத சூழல் ஏற்பட்டால், அந்த மொழியை நம்மால் வேறொரு தளத்துக்கு கடத்த முடியாது. அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டுவிட்டால், அந்த மொழியே அழிந்துவிடும். அப்படியான ஒரு நிலையில் இருந்து நாங்கள் மெல்ல, மெல்ல மீண்டு வருகிறோம்.

இலங்கையைப் பொருத்தவரை, தமிழ் மொழியை உணர்வு ரீதியாக அணுகுவதைக் காட்டிலும், புத்திஜீவிகளின் அறிவுசார்ந்த ரீதியில் முன்னேற்ற வேண்டும். தர்க்க ரீதியாக ஏற்படும் மாற்றமே, எங்களது தமிழ்ச் சூழலுக்கு நிரந்தர மாற்றத்தைக் கொடுக்கும்.

தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தமிழ் பேச முடியும்; இதுதான் சுதந்திரமான வழி. அந்த வகையில் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள். ஆனால், இலங்கையில் எங்களது இருப்பை வெளிப்படுத்திக் கொள்வதற்குக்கூட தமிழ் தான் தேவைப்படுகிறது.

தமிழ் மொழி தான் எங்களது அடையாளம். எனவே மொழி அடையாளத்தையும், மொழி வழி சமூகத்தையும் கட்டமைத்து, அதை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்ல வேண்டிய கடமை உள்ளது. அதைச் செய்துகொண்டு இருக்கிறோம். இலங்கையில் இளநிலைப் பட்டப் படிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஒரு பருவத்தில் தமிழின் பொருண்மையை மாணவர்கள் முழுமையாக அறிய முடியாது என்பதால், முதல் முறையாக இந்த பயிலரங்கம் நடத்தப்படுகிறது. இதில், சங்க இலக்கியத்தின் அடிப்படைத் தன்மைகளை உள்வாங்கிக்கொண்டு, புதிய வாசிப்புகளை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

வரும் காலங்களில் தமிழகப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, எங்களது தமிழ் ஆய்வுகள் மேன்மேலும் தொடரும்" என்றார்.

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சித்ரா கூறும்போது, ‘இந்தப் பயிலரங்கில் தமிழ் படிக்கும் 15 மாணவ, மாணவிகள், 8 பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். சங்க இலக்கிய ஆய்வு மட்டுமின்றி, தமிழகத்தின் தமிழ் சமூகச் சூழலையும் நேரில் சென்று பார்த்து வியக்கிறார்கள். அதேபோல், அவர்களது வாசிப்பு பழக்கம் வியப்பளிக்கிறது. அங்குள்ள இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களது முன் தயாரிப்பு, இங்குள்ள முனைவர் பட்ட மாணவர்களுக்கு இணையாக உள்ளது. தமிழ் ஆர்வமும், மொழி அடையாளமும் இலங்கை தமிழ் மக்களிடம் அதிகமாக இருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x