Published : 24 May 2016 01:25 PM
Last Updated : 24 May 2016 01:25 PM

இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை வேண்டும்: பாமக 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்

'இந்தியாவில் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என்று பாமக வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் ராமதாஸ் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டத்தில், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தலை நடத்த வேண்டும்; மருத்துவ பொது நுழைவுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்; தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை என மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தீர்மானங்கள் விவரம்:

வாக்களித்த மக்களுக்கு நன்றி!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்க வில்லை என்ற போதிலும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி என்ற தகுதியை மக்கள் வழங்கியுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பாமக தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தேர்தலில் 23 லட்சத்து 775 பேர் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர். அதிமுகவும், திமுகவும் போட்டிப் போட்டுக்கொண்டு ஓட்டுக்கு பணத்தை வாரி இறைத்த நிலையில், அவற்றை பொருட்படுத்தாமல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வளவு பேர் ஒரு பைசா கூட வாங்காமல் பாமகவுக்கு வாக்களித்துள்ளனர்.

குறிப்பாக தமிழக நலனில் அக்கறை கொண்ட இளைஞர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு பாமக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தேர்தல் வெற்றி, தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சியாக பாமக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் நலன் சார்ந்த சிக்கல்களுக்காக குரல் கொடுப்பதிலும், போராடுவதிலும் பாமக தான் முதலிடத்தில் உள்ளது. கடந்த காலங்களைப் போலவே இனிவரும் காலங்களிலும் தமிழகம் மற்றும் தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக பாமக தொடர்ந்து போராடும் என்று இந்தக் கூட்டம் உறுதி அளிக்கிறது.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்க

தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் அதிமுகவும், திமுகவும் பணத்தை வெள்ளமாக ஓட விட்டன. தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 232 தொகுதிகளிலும் மக்களின் உண்மையான ஆதரவைப் பெறாமல் பணத்தை வாரி இறைத்து வாக்குகளை விலைக்கு வாங்கியே அதிமுகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. இரு கட்சிகளும் ஓட்டுக்காக மட்டும் ரூ.16,000 கோடி செலவு செய்துள்ளன. கோடிகளை வாரி இறைத்து பெற்ற இந்த வெற்றி உண்மையான வெற்றியல்ல.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு ரூ.10 கோடி அளவுக்கு பணம் கொடுத்ததாகக் கூறி அத்தொகுதிகளில் தேர்தல் இரு முறை ஒத்திவைக்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்ட பெரும் தலைகுனிவு ஆகும்.

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு காரணமான வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தண்டிக்காமல், வாக்குப்பதிவை மட்டும் தாமதமாக நடத்துவதால் எந்த பயனும் இல்லை.

ஜனநாயகத்தை விலை பேசுபவர்கள் தண்டிக்கப் பட்டால் தான் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும். எனவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து மீதமுள்ள வேட்பாளர்களைக் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும் என ஆணையத்தை இக்கூட்டம் கோருகிறது.

ஜனநாயகத்தை வலுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை

மக்களாட்சியின் மகத்துவமே மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசை மக்களே தேர்ந்தெடுக்க முடியும் என்பது தான். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த பல தேர்தல்களாகவே இந்நிலை மாறி வருகிறது. ஓட்டுக்கு பணம் தரும் கலாச்சாரம் தமிழகத்தில் தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பணபலத்தைக் கட்டுப்படுத்தப்போவதாக தேர்தல் ஆணையம் கூறுவதும், பின்னர் அந்த முயற்சியில் படுதோல்வி அடைவதும் வழக்கமாகி விட்டது. இதற்குக் காரணம் தேர்தல் ஆணையத்திற்கு போதிய அதிகாரமும், அதிகாரிகள் பலமும் இல்லாதது தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க வேண்டும் என்றால் தேர்தல் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தேர்தலில் விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அந்த வகையில், ஓட்டுக்கு பணம் தரும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்தல், ஒரு கட்சியின் வேட்பாளர்கள் ஒரு மாநிலத்தில் பத்துக்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளிலோ அல்லது அம்மாநிலத்திலுள்ள 10 விழுக்காட்டிற்கும் கூடுதலான மக்களவை தொகுதிகளிலோ ஓட்டுக்கு பணம் கொடுத்தால் அந்தக் கட்சியை தகுதி நீக்கம் செய்து, அதன் அங்கீகாரத்தை ரத்து செய்தல், தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைவர்கள் ‘‘இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் தர மாட்டோம்’’ என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொள்வதுடன், தங்கள் கட்சியைச் சேர்ந்த எவரும் ஓட்டுக்கு பணம் தரக்கூடாது அறிவுரை வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்கள் மூலம் எல்லா தொகுதிகளிலும் ஒளிபரப்பப்படுவதை கட்டாயமாக்குதல் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து கருத்துக்கணிப்புகளுக்கு தடை விதித்தல், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி, மாவட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக தேர்தல் நடக்கும் மாநிலத்தை சேராத, அந்த மாநிலப்பிரிவைச் சேராத இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை நியமித்தல் உள்ளிட்ட சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை பாமக கேட்டுக் கொள்கிறது.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும்

இந்தியாவில் இப்போதுள்ள தேர்தல் முறையில் அதிக வாக்கு பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். இதனால் தோல்வியடைந்த கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. உதாரணமாக 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 4 கோடியே 28 லட்சத்து 78,674 வாக்காளர்கள் வாக்களித்தனர். அவர்களில் ஒரு கோடியே 76 லட்சத்து 17,060 வாக்குகள் (40.80) பெற்ற அதிமுகவுக்கு 134 சட்டமன்ற உறுப்பினர் பதவிகளும், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பும் கிடைத்துள்ளது.

தமிழக வாக்காளர்களில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 59.20 விழுக்காட்டினர் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்துள்ள போதிலும் அக்கட்சி ஆட்சி அமைப்பது உண்மையான ஜனநாயகமாக இருக்காது.

அதேபோல், அதிமுக, திமுக கூட்டணி தவிர மீதமுள்ள கட்சிகள் 22% வாக்குகளை அதாவது சுமார் 95 லட்சம் வாக்குகளை பெற்றுள்ள போதிலும் அவர்களுக்கு ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி கூட கிடைக்கவில்லை. இது வாக்களித்த மக்களை புறக்கணிக்கும் செயலாகும். இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டுமானால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று இந்திய சட்ட ஆணையம் பலமுறை பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில் அனைத்து மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க விகிதாச்சார பிரதிநிதித்துவம் தான் சிறந்த வழியாகும். இந்த முறையில் தேர்தல் செலவும் தேர்தலில் பணபலம் பயன்படுத்தப்படுவதும் குறையும். எனவே, இந்தியாவில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்ய வேண்டும்; இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசை பாமக வலியுறுத்துகிறது.

மருத்துவப்படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்க

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளித்து குடியரசுத் தலைவர் அவசர சட்டம் பிறப்பித்துள்ளார். இது தமிழக மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய வரவேற்கத் தக்க நடவடிக்கை ஆகும். ஆனால், இது போதுமானதல்ல.

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி வழங்கப்படாத நிலையில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்த முயல்வது முறையல்ல. அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமத்துப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களால் தனிப்பயிற்சி வகுப்புகளில் படித்து இத்தகைய நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்பது சாத்தியமல்ல. அதனால் அவர்களின் மருத்துவப்படிப்பு கனவு சிதைந்து விடக்கூடும். எனவே பொது நுழைவுத் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 1984 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நுழைவுத்தேர்வு நடைமுறையில் இருந்தபோது கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு எட்டாக்கனியாக இருந்தது. பாமக நடத்திய சட்டம் மற்றும் அரசியல் போராட்டங்களின் பயனாக நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட பிறகு தான் மருத்துவப்படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை பறிக்கும் வகையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படக்கூடாது. இதற்கு ஏற்றவகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரும்படி மத்திய, மாநில அரசுகளை பாமக வலியுறுத்துகிறது.

குறுவைப் பாசனத்திற்கு காவிரியில் தண்ணீர் பெற நடவடிக்கை தேவை

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவைப் பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். 2012 ஆம் ஆண்டு முதல் கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில் காவிரியிலிருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்பதால் காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக தொடர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களால் இன்னொரு வறட்சியை தாங்கிக் கொள்ள முடியாது. ஆனால், மேட்டூர் அணையிலும், கர்நாடக அணையிலும் குறைந்த அளவில் தான் தண்ணீர் இருப்பு உள்ளது என்பதால் இந்த ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி குறுவைப் பாசனத்திற்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்புகள் தென்படவில்லை.

எனவே, இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறைப்படி கர்நாடக அணைகளில் உள்ள நீரில் ஒரு பகுதியை பெறவும், அடுத்தமாதத் தொடக்கத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கினால் அதன்மூலம் கிடைக்கும் தண்ணீரில் தமிழகத்தின் பங்கை பெறவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை பாமக கேட்டுக் கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x