Published : 26 Apr 2016 02:41 PM
Last Updated : 26 Apr 2016 02:41 PM

சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?- அரசு மருத்துவர் ஆலோசனை

கொளுத்தும் கோடை வெயிலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பழங்கள், நீர்சத்து மற்றும் நார்சத்து உள்ள காய்கறிகளையும் உட்கொள்ள வேண்டும் என அரசு மருத்துவர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்ற பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் எஸ்.கண்ணுசாமி கூறியதாவது:

கோடைக்காலத்தில் உணவு எளிதில் செரிமனம் ஆக நீர்சத்து குறைவதால் ஏற்படும் சோர்வினை போக்கவும் பழங்களே சிறந்த உணவாகும். கோடையில் வெளிப்புற வெப்பநிலை அதிகமாகிறது. வெளிப் புற வெப்பநிலையுடன், உடலின் உட்புற வெப்பத்தை சமநிலைப்படுத் தும் வகையில் வியர்வை சுரப்பி களை எப்போதும் உடல் திறந்து வைக்கிறது. இதனால், உடல் மேல் தொடர்ந்து லேசான ஈரப்பதம் இருந்து வரும். அதிக வியர்வை தொடர்ந்து வெளியேறுவதால், உடலின் நீர் சமநிலை பாதிக்கப்பட்டு, மயக்கம், அதிக தாகம், நீர் சுருக்கு, நீர் கடுப்பு ஏற்படுவதுடன், சிறுநீரக தொற்று நோயும் ஏற்படுகிறது.

வியர்வை அதிக சுரப்பு காரணமாக உடலானது எப்போதும் ஈரமாக இருப்பதால், வியர்குரு, பூஞ்சை தொற்றினால் ஏற்படும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன. அதிகமாக நீர் அருந்துவதால் மலக்கட்டு, பசியின்மை ஏற்படுகிறது. உடலில் கபம் அதிகரித்து சளி, ஆஸ்துமா, தும்மல், மூக்கு நீர் ஒழுகுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தவிர்க்கவேண்டியவை

கோடைக்காலத்தில் காரம், புளிப்பு, உப்பு, எண்ணெய் பலகாரங் கள், மசாலா உணவுகளை தவிர்க்க வேண்டும். இருக்கமான உடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்த்தல், காற்றோட்டமான சூழ்நிலையை இருக்குமிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

செய்ய வேண்டியவை

பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உடல் எடை அடிப்படையில் 20 கிலோவுக்கு ஒரு லிட்டர் நீர் என்ற அடிப்படையில் குறைந்தபட்சம் நீர் அருந்த வேண்டும். அதாவது ஒருவர் 80 கிலோ இருந்தால், 4 லிட்டர் நீர் கட்டாயம் குடிக்க வேண்டும். நீர்சத்துள்ள இளநீர், மாதுளை, தர்பூசணி, வெள்ளரி ஆகியவற்ற அதிக அளவில் எடுக்க வேண்டும்.

உணவில் நீர் காய்களான புடலங்காய், பீர்க்கங்காய், வெண்பூசணி, சுரைக்காய் அதிக அளவில் எடுக்கலாம். எளிதில் செரிமானமாகும் நார்சத்து மிக்க கருணைக்கிழங்கு, அவரைக்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை உணவில் சேர்க்கலாம். புரோட்டா போன்ற மாவுச்சத்து உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

காலை வெறும் வயிற்றில் கால்கிலோ வெண்பூசணி காயை மேல் தோல் சீவி, துண்டுகளாக்கி அரைத்து, அதில் பனங்கற்கண்டு கலந்து குடிக்கலாம். இதன் மூலம் நீர் சத்து குறைவால் ஏற்படும் சோர்வை நீக்குவதோடு, நாள்முழுவதும் புத்துணர்வுடன் இருக்கலாம்.

சோற்றுக்கற்றாலையில் 50 கிராம் வெட்டி, சுத்தம் செய்து, தோலுடனோ, தோல் நீக்கியோ சாப்பிடலாம். இதன் மூலம் வயிறு சார்ந்த நோய்கள், சீறுநீரக சம்மந்தமான நோய்கள், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குறையும்.

அரை டம்ளர் பசுந்தயிரில் இரண்டு லிட்டர் நீர் கலந்து, நீர் மோராக மாற்றி, காலை முதல் மாலை வரை குடிக்க உடல் தாதுக்களில் ஏற்படும் வெப்பத்தை சமன் செய்யலாம்.

இப்படி குடிப்பதால், வயிற்றில் ‘அனலப்பித்தம்’ மாறுபாட்டினால் ஏற்படும் மூல நோயை குணப்படுத்தவும், வராமல் தடுக்கவும் முடியும். நன்னாரியை கொண்டு தயார் செய்யப்பட்ட குளிர்பானம் நாள் ஒன்றுக்கு இரண்டு டம்ளர் குடிக்கலாம்.

உடல் சூடு, தலைச்சூட்டில் இருந்து விடுபட சித்த மருத்துவத்தில் சொல்லப்படும் சந்தனாதி தைலம், சீரக தைலம், சோற்றுக்கற்றாலையை அடிப்படையாக கொண்டு செய்யப்படும் குமரித்தைலம், பொன்னாங்கன்னி தைலம் ஆகியவற்றை தினமும் தலைக்கு தேய்த்து வரலாம்.

வாரத்தில் இரு நாட்கள் உடல் சூட்டை தடுக்க எண்ணெய் குளியல் செய்யலாம். வியர்வை அதிகமாக சுறப்பதால் ஏற்படும் நோய் தொற்றை தவிர்க்க தினமும் இரு வேளை குளிக்கலாம். வெப்பத்தால் ஏற்படும் கண் சூட்டை தடுக்க, இரவில் சுத்தமான விளக்கெண்ணையை இரு சொட்டுக்களை கண்களில் விடலாம்.

உடலில் உள்ள ஏழு தாதுக்களில் ஏற்படக்கூடிய வெப்பத்தை குறைக்க திரிபலாசூரணம் (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்தது) காலை, மாலை, இரவு மூன்று வேளையும் சாப்பிடும் முன் சாப்பிடலாம். தலையில் தேய்ப்பதற்கு திரிபலா தைலத்தையும் பயன் படுத்தலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x