Published : 10 Feb 2016 12:56 PM
Last Updated : 10 Feb 2016 12:56 PM

சின்ன பையனும் அப்பாவின் அரசியலும்: ஜெயலலிதா சொன்ன நம்மை நாமே குட்டிக்கதை!

சின்ன பையன் - அப்பா அரசியல் என்ற மையக்கருவுடன் 'நம்மை நாமே' என்று முடியும் வகையில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும் ஜெயலலிதா ஒரு குட்டிக் கதை கூறினார்.

அமைச்சர்கள், அதிமுக எம்.பி., எம்எல்ஏக்கள் உட்பட 14 பேரின் இல்லத் திருமணங்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இன்று நடத்தி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா கூறிய குட்டிக் கதை:

"அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக் கொடுக்கும். ஒரு சின்னப் பையன் தன் தந்தையிடம் சென்று "அப்பா எனக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடு" என்றான்.

உடனே தந்தை தனது மகனைப் பார்த்து "மகனே அரசியல் பணி என்பது ஆபத்தானது. இதில் தந்தை, தனயன் என்றெல்லாம் உறவுகளுக்கு இடம் இல்லை. வலிமை உள்ளவரே வெல்ல முடியும். எனவே உனது அரசியல் பாடத்தை நீயே தான் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

தந்தை சொல்லை மகன் கேட்கவில்லை. அரசியல் பாடம் கற்பதில் பிடிவாதமாக இருந்தான். மகன் "தந்தையே உங்களைப் பார்த்தே நான் அரசியலில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். இருந்தாலும் எனக்கு நீங்கள் பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும்" என்றான்.

வேறு வழியின்றி தந்தையும் மகனுக்கு அரசியல் பாடம் கற்றுக் கொடுக்க சம்மதித்தார். மகனை அழைத்து "ஓடிப்போய் ஒரு ஏணி எடுத்துக் கொண்டு வா" என்றார். "எதற்கு ஏணி?" என்று கேட்டான் மகன். "இப்படியெல்லாம் கேட்கக் கூடாது நான் சொல்வதைச் செய்ய வேண்டும்" என்றார் தந்தை. மகன் ஏணியை எடுத்துக் கொண்டு வந்தான்.

"இந்த சுவற்றிலே ஏணியை சாத்தி வை. பிறகு ஏணியின் மீது ஏறி உச்சிக்கு செல். மேலே பரணியில் நான் என்னென்ன ஏமாற்று வேலைகளைச் செய்து அரசியலில் நிலைத்து நிற்கிறேன் என்பது பற்றி நெஞ்சைத் திறந்து எழுதி வைத்துள்ளேன். அரசியல் பற்றிய அனைத்து பாடங்களும் அவற்றில் உள்ளன. அதை கற்றுத் தேர்ந்தால் நீயும் அரசியலில் பெரிய ஆளாக ஆகலாம்" என்றார்.

"அப்பா நான் ஏணியிலே ஏறி மேலே போகிறேன். நீ கீழே இருந்து ஏணியை கெட்டியாக பிடித்துக் கொள்" என்றான் மகன். "அதைப் பற்றி நீ கவலைப்படாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார் தந்தையார். மகன் மெதுவாக ஏணியின் மேலே போனான். அவன் உச்சிக்குப் போனதும் தந்தை ஏணியின் மேல் இருந்த கையை எடுத்து விட்டார். ஏணி சரிந்து விழுந்தது. மகனும் கீழே விழுந்து விட்டான். வலி தாங்காமல் இடுப்பைப் பிடித்துக் கொண்டே எழுந்தான் மகன்.

"என்னப்பா இப்படி ஏணியிலிருந்து கையை எடுத்துட்டியே! உன்னால் தான் எனக்கு இடுப்பில் இப்போது அடிபட்டு இருக்கிறது" என்று கூச்சலிட்டான். தந்தை சிரித்துக் கொண்டே "எல்லாவற்றையும் நீ இப்போதே தெரிந்து கொண்டால் என்னை யார் மதிப்பார்கள்?" என்று கேட்டார். இது தான் அரசியலில் முதல் பாடம் என்று தெரிந்து கொண்ட மகன், "அப்பனாக இருந்தாலும் நம்பக் கூடாது! நம்மை நாமே தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று முடிவெடுத்தான்.

சரி. எவ்வளவு தூரம் தான் இவன் தன்னை வளர்த்துக் கொள்கிறான் என்று பார்ப்போம் என நினைத்த தந்தை சிறிது விட்டுப் பிடித்து பின்னர் மகனுக்கு கடிவாளம் போட்டுவிட்டார். அரசியல் எவ்வளவு ஆபத்தானது என்பதற்காகத் தான் நான் இந்தக் கதையை இங்கு கூறினேனே தவிர, நீங்கள் யாரையாவது கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல" என்றார் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x