Published : 01 Feb 2016 08:40 AM
Last Updated : 01 Feb 2016 08:40 AM

பழமையான பாலங்கள், கட்டிடங்களின் வலிமையை வானிலிருந்து ஆளில்லா வாகனம் மூலம் ஆராயும் புதிய திட்டம்: கனடா பல்கலை.யுடன் இணைந்து ஆவடி வேல் டெக் பல்கலை. மேற்கொள்கிறது

இந்தியாவில் உள்ள பாலங்கள், பழமையான கட்டிடங்களின் வலிமையை வானிலிருந்து ஆளில்லா வாகனம் மூலம் ஆராயும் திட்டத்தை ஆவடி வேல் டெக் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

சென்னை ஆவடியில் உள்ள வேல் டெக் பல்கலைக்கழகம் பல் வேறு பட்டப் படிப்புகளை வழங்கிவருவது மட்டுமின்றி, பல ஆய்வுப் பணிகளையும் மேற் கொண்டு வருகிறது. பல்கலைக் கழக நிறுவனர் ஆர்.ரங்கராஜன், நிறுவனர் தலைவர் சகுந்தலா ரங்கராஜன் ஆகியோரின் முயற்சி யால் கல்வி திட்டங்கள் மேம்படுத் தப்பட்டு வருகின்றன. தற்போது கனடாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஐசி-இம்பாக்ட்ஸ் என்ற சர்வதேச அமைப்பின் வழிகாட்டுதலின்படி புதுமையான திட்டம் தொடங் கப்பட்டுள்ளது.

இது குறித்து வேல் டெக் பல்கலைக்கழக இணை துணை வேந்தர் யு.சந்திரசேகர், விக்டோரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரிஷி குப்தா ஆகியோர் கூறியதாவது:

இந்தியா மற்றும் கனடா நாட்டு மக்களின் நலனை காக்கும் வகையில் நீர் மேலாண்மை, பொது சுகாதாரம், பாதுகாப்பான உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் ஆய்வுப் பணிகளில் இந்த இரு பல்கலைக்கழகங்களும், ஐசி-இம்பேக்ட்ஸ் அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளன.

இந்தியாவிலும் கனடா நாட்டி லும் உள்ள ரயில் பாதைகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. அவற்றில் பல 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வயதுடையவை. அவற்றின் உறுதித் தன்மையை அவ்வப்போது ஆராய்ந்து அறிந்துகொள்வது முக்கியமான தேவையாகும். தற்போது பாலங்களின் உறுதித் தன்மை பார்வையால் உறுதிப் படுத்தப்படுகிறது. இது போதாது; இந்த முறை நம்பகமானது என்றும் கூற முடியாது. அதுமட்டுமின்ற பல இடங்களில் மனிதர்கள் எளிதில் சென்று ஆய்வு செய்ய முடியாத நிலை உள்ளது. அதேபோல பாரம்பரியம் மிக்க கட்டிடங்களின் உறுதித் தன்மையையும் ஆராய்ந்து அறிந்துகொள்வது அவசியம்.

எனவே பல்வேறு சென்சார்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா பறக்கும் வாகனம் மூலம் இந்த பாலங்களை கண்காணிக்க முடியும். இந்த நவீன வாகனத்தில் உள்ள சென்சார்கள், மின்னணு கருவிகள் கட்டுமானங்களின் உறுதித் தன்மையை துல்லியமாக கணக்கிட முடியும். செலவும் பெருமளவு குறையும். இதற்கான ஆய்வுப் பணிகளில் இரு பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற ஆய்வை மேற்கொள்வது நாட்டிலேயே இதுவே முதல் முறை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x