Last Updated : 28 Jul, 2015 08:23 AM

 

Published : 28 Jul 2015 08:23 AM
Last Updated : 28 Jul 2015 08:23 AM

கலங்கரை விளக்கம் சாய்ந்தது

வெகுளித்தனமாக வேறொரு வகுப்பறைக்குள் நுழைந்துவிட்டான் அந்த மாணவன். வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அந்த மாணவனின் கணக்கு வாத்தியார் ராமகிருஷ்ண அய்யர். அவனைப் பார்த்தவுடனே, கழுத்தைப் பிடித்து, எல்லா மாணவர்களின் முன்னிலையிலும் பிரம்பால் விளாசித் தள்ளிவிட்டார். இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் கழிந்தது. அதே ஆசிரியர், அந்த மாணவனை காலை பிரார்த்தனைக் கூட்டத்தில் வெகுவாகப் பாராட்டினார். காரணம், அவன் கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருந்தான்.

‘என்னிடம் உதைபடுகிற மாணவன், மகத்தானவனாக மாறுவான்’ என்று பெருமிதமாக வேறு பேசினார் அந்த ஆசிரியர். அவரது வாக்கு பொய்க்கவில்லை. ஆம், அவரிடம் அடிவாங்கிய மாணவன், பள்ளிக்கும் ஊருக்கும், தமிழகத்துக்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பெருமை சேர்த்துவிட்டார். அந்த மகத்தான மாணவன் வேறு யாரும் அல்ல.. அவர்தான் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்.

பத்மபூஷன், பத்மவிபூஷன், பாரத ரத்னா என பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். விண்வெளி, தேசப் பாதுகாப்பு, அணு ஆற்றல் என 3 துறைகளிலும் ஒரு சேர உழைத்த ஒரே அறிஞர். இளைய தலைமுறைக்கு கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர்.

தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேசுவரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார். முழுப் பெயர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

பள்ளி விடுமுறை நாட்களில், தனது ஒன்றுவிட்ட சகோதரருக்கு உதவியாக சைக்கிளில் வீடு வீடாய்ச் சென்று நியூஸ் பேப்பர் போடும் வேலையைக்கூட செய்துள்ளார். ராமேசுவரம் மற்றும் ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பி.எஸ்சி இயற்பியலும், அதைத் தொடர்ந்து சென்னை எம்.ஐ.டியில் வானூர்தி பொறியியலும் படித்தார். கல்லூரி கட்டணத்தை கட்ட முடியாமல் கலாம் சிரமப்பட்டபோது , தனது நகைகளை அடமானம் வைத்து அவருக்கு உதவியவர் அவரது சகோதரி ஆசியம்மாள்.

1958-ம் ஆண்டு ரூ.250 சம்பளத்தில் இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 1980-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட ரோகிணி செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக இருந்தார். திரிசூல், அக்னி, பிருத்வி போன்ற ஏவுகணைகள் தயாரிப்பிலும் இவரே திட்ட இயக்குநர்.

அறிவியல் ஹீரோ

1998-ம் ஆண்டு மே 11-ம் தேதி மதியம் 3.45 மணி.. இந்திய நாட்டின் அதிமுக்கியமான நேரம். அமெரிக்க செயற்கை கோள்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, பொக்ரானில் இந்தியா தனது அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.

உலக நாடுகளின் ஒட்டுமொத்த கவனமும் நம் மீது திரும்பியது. இந்தச் சாதனைக்கு காரணகர்த்தா கலாம்தான். அதன்பிறகுதான் இந்திய பத்திரிகைகளில் தலையங்கம், கார்டூன், கவர் ஸ்டோரி என பிரபலமாகிப் போனார் கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடு களின் பத்திரிகைகளிலும் அவரது பெயர் பதிந்தது.

ஏவுகணை அவசியம்

‘நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள் மிக அவசியம். இல்லாவிடில் நாம் அந்நிய நாடுகளின் மிரட்டலுக்கு பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்’ என்று கூறிய கலாம், பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார். போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘பேஸ் மேக்கர்’ போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

எளிமையின் சிகரம்

ஒருமுறை சென்னை குரோம்பேட்டை எம்ஐடியின் பொன்விழா ஆண்டு நிறைவுக்கு அழைக்கப்பட்டிருந்தார் கலாம். தாம் பயின்ற கல்லூரியிலேயே, உரையாற்ற வந்தார் அவர். நெடுஞ்சாலையில் இருந்து எம்ஐடி வளாகத்தினுள் செல்ல, ரயில் தண்டவாளத்தைக் கடந்து செல்ல வேண்டும். அவர் வந்த நேரத்தில், ஏதோ ஒரு ரயிலுக்காக கேட் மூடப்பட்டிருந்தது. அவரது கார் கேட்டுக்கு அந்தப் பக்கமாக நின்றுவிட்டது.

ரயில் வர எப்படியும் இன்னும் சிறிது நேரம் ஆகும். காலம் தவறக் கூடாதே, குறித்த நேரத்தில் மேடையில் இருந்தாக வேண்டுமே என்ற எண்ணத்தில், காரை விட்டு இறங்கினார். கேட்டுக்குக் கீழே குனிந்து , தண்டவாளத்தைத் தாண்டி நடக்கலானார். உடன் வந்த கருப்புப் பூனைப் படைகள் இதை எதிர்பார்க்கவில்லை. சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் அவரை அடையாளம் கண்டுகொண்டு, ‘டாக்டர் கலாம் போறார்...’ என்று அவர் பின்னாடியே ஓடிவந்தார்களாம். மறுநாள் பத்திரிகைகளில் இதுதான் சிறப்புச் செய்தி.

இசைப்பதும் ரசிப்பதும்

உண்மையில் விஞ்ஞானி கலாம் ஒரு சிறந்த இசைஞானி. ரசிப்பதில் மட்டுமல்ல, வாசிப்பதிலும். வீணை வாசிப்பதில் தேர்ந்த கலைஞானி. தமது சொந்த ஊரான ராமேசுவரம் வரும்போதெல்லாம் பாதுகாப்பு அதிகாரிகளைத் தவிர்த்துவிட்டு , பால்ய சிநேகிதர்களுடன் கடற்கரையில் அமர்ந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கும் வழக்கமுடையவர். தான் படித்த சுவார்ட்ஸ் மேனிலைப் பள்ளிக்குச் சென்று தனது வகுப்பறையைப் பார்த்து விட்டுத் திரும்பும் பழக்கமும் இன்னும் அவரிடம் இருந்தது. இலக்கியத்திலும் ஈடுபாடு உண்டு. அவர் எழுதிய புத்தகங்கள் பல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேறியது.

வாருங்கள் இளையோரே

‘நமது நாடு ஏழ்மையானது அல்ல. நமது எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அதை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அதன்மூலமே சாதனைகள் படைக்க முடியும். நாடு சுயச்சார்பு அடைய, அறிவியல் அறிஞர்களும் இளைய தலைமுறையினரும் அயராது உழைக்க வேண்டும்’ என்று இளைய தலைமுறைக்கு கோரிக்கை விடுத்தவர் கலாம்.

நிறைவேறாத கனவு

உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கலாமின் சொந்த வீடு ராமேசுவரம் பள்ளிவாசல் தெருவில் உள்ளது. தனக்கென்று எதையும் சேர்த்துக்கொள்ளாத அவர், எளிமையான தனது இல்லத்தையும் இன்று அருங்காட்சியகமாக மாற்றி இருக்கிறார். கலாமுக்கு நிறைவேறாத கனவு ஒன்று உண்டு.

பணி ஓய்வு பெற்றதும் திறமையான குழந்தைகளுக்கு கல்வி நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்று அக்னிச் சிறகுகள் என்ற சுயசரிதையில் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

ராமேசுவரம் தீவில் 10 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. 12-ம் வகுப்பை முடித்துவிட்டு ஆண்டுதோறும் 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பள்ளிகளில் இருந்து வெளியேறு கிறார்கள். அவர்கள் மேல்கல்விக்காக ராமநாதபுரம் அல்லது மதுரைக்குதான் செல்ல வேண்டும். மீனவர்கள் பெரும்பான்மையினராக வாழும் ராமேசுவரம் தீவில் கல்லூரி இல்லாததால் பெரும்பான்மையான மீனவ மாணவர்கள் 12-ம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு கடலுக்கு செல்கின்றனர்.

அப்துல் கலாமின் விருப்பத்துக்கேற்ப அவரது பெயரில் ராமேசுவரத்தில் அரசு கல்வி நிறுவனத்தை திறந்தால் மீனவ மாணவர்கள் பலர் கல்லூரி செல்வதற்கு வழிபிறப்பதுடன், இந்த கல்லூரியிலிருந்து ஆயிரக்கணக்கான கலாம்கள் உருவாவார்கள். இதுவே அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x