Last Updated : 20 Mar, 2015 09:35 AM

 

Published : 20 Mar 2015 09:35 AM
Last Updated : 20 Mar 2015 09:35 AM

குழந்தைகளை சீரழிக்கின்றனவா சிறார் சீர்திருத்த இல்லங்கள்?- சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆதரவற்ற குழந்தை களை பாதுகாக்கவும், குற்றம் சாட்டப்பட்ட சிறார்கள் மற்றும் குற்றங் களுக்கு தண்டனை பெற்ற குழந்தைகளைப் பாதுகாக்கவும் இல்லங்கள் செயல்பட்டுவருகின்றன. நிர்வாக சீர்கேடு காரணமாக இந்த இல்லங்கள் சிறுவர்களை சீரழிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் சார்பில் எட்டு ‘கூர் நோக்கு இல்லங்கள்’ செயல்படு கின்றன. இந்த இல்லங்களில் வழக்குகள் முடியும் வரை குழந்தைகள் தங்கவைக்கப்படுவார்கள். தண்டனை பெற்ற குழந்தைகள் ‘சிறப்பு இல்லங்களுக்கு’ அனுப்பப்படுவார் கள். இத்தகைய இல்லங்களிலிருந்து குழந்தைகள் தப்பி ஓடுவதும், உள்ளுக்குளேயே வன்முறையில் ஈடுபடுவதுமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் சில இல்லங்களில் குழந்தைகளே கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம் நடக்கிறது. அவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் சுகா தாரமற்றதாக உள்ளது.

இந்நிலையில் இந்த இல்லங்கள் குழந்தைகளை குற்றவாளிகளாக்கும் சூழல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுபற்றி ‘மாற்றம் இந்தியா’வின் இயக்குநர் மற்றும் கல்வி செயல் பாட்டாளரான ‘பாடம்’ நாராயணன் கூறியதாவது:

குழந்தை இல்லங்களில் உள்ள குழந்தைகளின் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. மாதம் இரு முறை பெற்றோர்கள் குழந்தை களை பார்க்க அவர்கள் அனுமதிக் கப்படுவதில்லை. மேலும் அவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவ தால் தற்கொலை அல்லது வன் முறைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் கோபம், பயம், நம்பிக்கையின்மை மற்றும் குழப்ப மான மன நிலையோடு வெளியே வருகின்றனர். இது அவர்கள் மீண்டும் குற்றங்களைச் செய்ய தூண்டுகின்றன.

குழந்தை இல்லங்களில் போது மான பாதுகாப்பு அலுவலர்களும் உளவியல் ஆலோசகர்களும் இல்லை. பல இடங்களில் மேற்பார்வை யாளர்களே மாவட்ட குழந்தை பாது காப்பு அலுவலர்களாக உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் அஜிதா கூறும் போது, “பெரும்பாலான இல்லங் களில் குழந்தைகள் எதிர்கால குற்றவாளிகளாகத்தான் பார்க்கப்படு கிறார்கள். ஒரே குழந்தை மீது பத்து அல்லது பதினைந்து வழக்கு கள் போடப்படுகின்றன. பல கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. ஒரு முறை சிறார் தப்பிச் சென்ற வழக்கை விசாரித்தபோது, அந்த இல்லத்தின் பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்காததால் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்களே சிறாரை தப்பிக்க தூண்டியிருந்தது தெரியவந்தது. வசதியான குழந்தைகளுக்குத்தான் சட்ட உதவிகள் கிடைக்கின்றன. ஏழைக் குழந்தைகளுக்கு அரசு உதவி கிடைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன” என்றார்.

இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது , "குழந்தை இல்லங்களில் அரசு விதிகள் பின்பற்றப்படுகின்றன. ஒரு கோழி வளர்ப்பதற்கு 4 சதுர அடி வேண்டும், நாய் வளர்ப்பதற்கும் விதிகள் உள்ளன.

அதே போன்று ஒரு குழந்தைக்கு 40 சதுர அடி இடம் என்ற விதி குழந்தை இல்லங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது" என்றனர். அலுவலர்கள் பற்றாக்குறை பற்றி கேட்டபோது "இங்கு எல்லோருக் குமே கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அதனை நேர்த்தியாக செய்து வருகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x