Last Updated : 27 Sep, 2014 02:50 PM

 

Published : 27 Sep 2014 02:50 PM
Last Updated : 27 Sep 2014 02:50 PM

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை; ரூ.100 கோடி அபராதம்: பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, வி.என்.சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், 32 தனியார் நிறுவனங்களையும் உடனடியாக முடக்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395 அளவுக்கு சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ல் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த 18 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதற்காக ஜெயலலிதா, சசிகலா, வி.என்.சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் நேற்று காலை 10.55 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராயினர். நீதிபதி டி குன்ஹா, சரியாக 11 மணிக்கு நீதிமன்றத்தில் வந்து இருக்கையில் அமர்ந்தார். ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். 11.05 மணிக்கு 1,232 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி படிக்கத் தொடங்கினார்.

“ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ள நீங்கள் நால்வரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆகியுள்ளது. உங்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும்” என்று தெரிவித்த நீதிபதி, தண்டனை விவரத்தை பிற்பகல் 1 மணிக்கு அறிவிப்பதாகக் கூறி நீதிமன்றத்தை ஒத்திவைத்தார். தீர்ப்பைக் கேட்டதும் ஜெயலலிதா கண்கலங்கினார்.

அதன்பிறகு பெங்களூர் மாநகர காவல் கூடுதல் ஆணையர் அரிசேகரனை அழைத்து ஒரு கடிதத்தை நீதிபதி அளித்தார். அதில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி நீதிபதி கூறியிருந்தார்.

மீண்டும் பிற்பகல் 1 மணிக்கு நீதிமன்றம் கூடியதும், தண்டனை பற்றி அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் கருத்தை நீதிபதி கேட்டார். “4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையான 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

“அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கு இது. எனவே, 4 பேருக்கும் குறைந்த தண்டனை மட்டுமே வழங்க வேண்டும்” என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, தண்டனை விவரத்தை 4 மணிக்கு அறிவிப்பதாக நீதிபதி கூறினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 3.30 மணிக்கு நீதிமன்றம் கூடியது. “ஜெயலலிதா தமிழக அரசியலில் மிக முக்கிய பிரமுகராக இருப்பதால் குறைந்த தண்டனை வழங்க வேண்டும்” என்று அவரது வழக்கறிஞர் பி.குமார் மீண்டும் கோரினார்.

அதன் பிறகு 4 மணிக்கு தண்டனை விவரங்களை நீதிபதி டி குன்ஹா அறிவித்தார்.

“முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. மற்ற மூன்று குற்றவாளிகளுக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்படும். வழக்கு விசாரணைக்கான செலவுத் தொகையாக கர்நாடக அரசுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி வழங்க வேண்டும்” என நீதிபதி தீர்ப்பில் அறிவித்தார்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வழக்கறிஞர் பி.குமார், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும், அபராதத் தொகையும் மிகவும் அதிகம் என்றும், அதனை குறைக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொண்டார். அதை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

“குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க முடியும். ஆனால் 4 ஆண்டுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, தண்டனையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. மேலும், விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை 1991-96 காலகட்டத்தில் குற்றவாளிகள் 4 பேரும் குவித்த சொத்துக்களின் மதிப்போடு ஒப்பிட்டால் மிகவும் குறைவுதான். ஆகவே, அதனை கண்டிப்பாக செலுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டார். மேலும், குற்றவாளிகள் 4 பேரையும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்குமாறு பெங்களூர் போலீஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது, “ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய், இதய கோளாறு உள்ளிட்ட உடல் ரீதியான பல பிரச்சினைகள் இருப்பதால் தனியார் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட வேண்டும்” என்று வழக்கறிஞர் பி.குமார் கோரினார்.

இதுபற்றி சிறைத் துறையினரிடம் கோரிக்கை வைக்கும்படி நீதிபதி கூறினார்.

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்றத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பிறகு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் சிறையில் சரியாக மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதா அடைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வி.என்.சுதாகரன் ஆண்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை

கடந்த 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்தபோது வருமானத்துக்கு பொருந்ததாக வகையில் ரூ.66.65 கோடி சொத்து குவித்ததாக 1996-ல் ஜனதா கட்சித் தலைவராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

1996 டிசம்பர் 7: இந்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

1997 ஜூன் 4: ஜெயலலிதா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

1997 அக். 1: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த 3 மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2000 ஆகஸ்ட்: இதுவரை 250 அரசுத் தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை முடிக்கப்பட்டது.

2001 மே: தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார்.

2001 செப். 21: உச்ச நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகி ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார்.

2002 மார்ச் 2: ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார்.

2003 சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்துக்கு மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

2003 நவ. 18: சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் பெங்களூருக்கு மாற்றியது.

2005 பிப். 19: சொத்துக் குவிப்பு வழக்கில் பி.வி. ஆச்சார்யாவை அரசு தரப்பு வழக்கறிஞராக கர்நாடக அரசு நியமித்தது.

2011 நவம்பர்/அக்டோபர்: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜராகி 1339 கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

2012 ஆக. 12: அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2013 ஜனவரி: ஆச்சார்யாவின் ராஜினாமாவை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டு பணியில் இருந்து அவரை விடுவித்தது.

2013 பிப். 2: புதிய அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை கர்நாடக அரசு நியமித்தது.

2013 ஆக. 26: பவானி சிங்கின் நியமனத்தை கர்நாடக அரசு திடீரென வாபஸ் பெற்றது.

2013 செப். 30: கர்நாடக அரசின் வாபஸ் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

2014 பிப். 28: ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருள்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு கொண்டு வர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் பவானி சிங் கோரியதை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கை தாமதப்படுத்தும் நோக்கில் பவானி சிங் செயல்படுவதாக நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்தது.

2014 மார்ச்14, 15: இறுதிவாதத்தின்போது உடல்நலக்குறைவு என்று கூறி பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரது ஒருநாள் ஊதியம் ரூ.60 ஆயிரத்தை அபராதமாக விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

2014 மார்ச் 18: சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பவானி சிங் மேல்முறையீடு செய்தார்.

2014 மார்ச் 21: பவானி சிங்கின் மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2014 ஆக. 28: வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20 தேதி அறிவிக்கப்படும், அன்றைய தினம் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

2014 செப். 16: போலீஸாரின் வேண்டுகோளை ஏற்று பாதுகாப்பு காரணங்களுக்காக தீர்ப்பு தேதி செப்.27-க்கு தள்ளிவைக்கப்பட்டது.

2014 செப். 27: சொத்துக் குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x