Published : 18 Sep 2014 02:43 PM
Last Updated : 18 Sep 2014 02:43 PM

இலங்கை அரசியல் மாநாட்டில் பாஜக பங்கேற்பது மன்னிக்க முடியாத துரோகம்: வைகோ ஆவேசம்

இலங்கையில் நடைபெறும் ஆசிய அரசியல் கட்சிகள் மாநாட்டில், பாரதிய ஜனதா கட்சி பங்கேற்பது மன்னிக்க முடியாத துரோகச் செயல் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மனித குல வரலாற்றில் மிகக் கொடூரமாக நடைபெற்ற பேரழிவுகளுள் ஒன்றாக இலங்கைத் தீவில் ராணுவத்தை ஏவியும், உலகம் தடை செய்த நாசகாரக் குண்டுகளை வீசியும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை ஈவு இரக்கம் இன்றிப் படுகொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்.

அவரது அழைப்பை ஏற்று, ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகள் மாநாட்டில், பாரதிய ஜனதா கட்சி பங்கேற்பது, தாய்த் தமிழகத்திலும், ஈழத்திலும், உலகெங்கும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சுகின்ற அக்கிரமம் ஆகும்.

ஈழத்தமிழர் படுகொலைக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ராணுவ உதவிகள் செய்து துரோகம் இழைத்தது. காமன்வெல்த் நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தபோது, அதில் இந்தியா பங்கு ஏற்கக் கூடாது என்று தமிழகத்தில் எதிர்ப்பும், கொந்தளிப்பும் ஏற்பட்டதால், அதில் பங்கு ஏற்க இருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டார்.

ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் மரணத் தீயை அணைத்து உயிர்த்தியாகம் செய்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் வேதனையையும், துயரத்தையும் துச்சமாக எண்ணி, கிள்ளுக்கீரையாகக் கருதி, பாரதிய ஜனதா கட்சி கொழும்புக்கு அக்கட்சியின் தேசியச் செயலாளர் முரளிதர் ராவ், அக்கட்சியின் அயலக உறவுகளுக்கான அமைப்பாளர் விஜய் ஜோலி ஆகியோரைப் பங்கு ஏற்க அனுப்பி இருப்பது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். மாநாட்டில் பங்கு ஏற்காமல் உடனடியாக அவர்களை இந்தியாவுக்குத் திரும்ப அழைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

ஈழத் தமிழ் இனக்கொலைகார ராஜபக்ச உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவ நடத்துகின்ற ஓர் அரசியல் மாநாட்டில் பாரதிய ஜனதா கட்சி பங்கேற்பதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x