Published : 23 May 2014 12:00 AM
Last Updated : 23 May 2014 12:00 AM

மொழியியல் பின்னணியில் படித்தால்தான் ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம், எழுதலாம்

இன்றைய இளைஞர்களுக்கு ஆங்கிலத்தில் சுயமாக எழுதத் தெரியாததற்கு பயன் பாட்டு அடிப்படையில் கற்பிக்காததுதான் காரணம் என்கின்றனர் மொழியியல் பேராசிரியர்கள்.

இப்போது இன்ஜினீயரிங், கலை, அறிவியல் பட்டப்படிப்பு முடித்தவர்களால் கூட சுயமாக ஆங்கிலத்தில் பேச. எழுத முடியவில்லை. மொழியியல் படித்தவர்களின் துணையோடு தான் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்கின்றனர் பேராசிரியர்கள்.

இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழக தமிழ்மொழித் துறை முன்னாள் தலைவர் ந.தெய்வசுந்தரம் ‘தி இந்து’விடம் கூறியதாவது: எல்லா மொழிகளைப் பற்றியும் பொதுவாகப் படிப்பது மொழியியல் பாடமாகும். இப்பாடத்தைப் படித்தால் எந்த ஒரு மொழியையும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய முடியும். மொழியியல் படிப்புக்கு உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு உள்ளது. மொழியியலைக் கொண்டு தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்தைச் சரியான முறையில் கற்பிக்க முடியும்.

எம்.ஜி.ஆர். உடல்நலக் குறைவு காரணமாக பேச்சுத்திறனை இழந்தபோதுதான் மருத்துவ மொழியியலின் முக்கியத்துவம் தெரியவந்தது. அப்போது நரம்பியல் மருத்துவருடன் கலந்து பேசி எம்.ஜி.ஆருக்கு மொழிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயோ-லிங்குஸ்டிக்ஸ், ஜெனடிக் லிங்குஸ்டிக்ஸ் என மொழியியலில் பல படிப்புகள் உள்ளன. உலகில் எல்லா பல்கலைக்கழகத்திலும் எல்லாத் துறைகளிலும் மொழியியல் பாடம் உள்ளது. ஆனால், மொழியியலின் முக்கியத்துவத்தைத் தமிழகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2005-ம் ஆண்டு எம்.ஏ. கணினி மொழியியல் பாடம் கொண்டு வரப்பட்டது. பின்னர் எம்.பில், பி.எச்டி ஆய்வு படிப்பும் அறிமுகம் செய்யப்பட்டது. பி.இ., எம்.சி.ஏ. முடித்தவர்கள்கூட இப்படிப்பில் சேர்ந்து பி.எச்டி ஆய்வுப் பட்டம் பெற்றனர்.

ரூ.20 லட்சம் செலவில் மென்பொருள் உருவாக்குவதற்காக மொழி தொழில்நுட்ப ஆய்வுக்கூடம், நூலகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இப்பாடத்தை எடுத்து விட்டனர். கணினி மொழியியல் என்ற தனித்துறையை உருவாக்கும் முயற்சியும் கைவிடப்பட்டது.

நம் குழந்தை ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி சாதிக்க வேண்டும் என்றுதான் பெற்றோர் செலவு செய்து ஆங்கில மீடியத்தில் சேர்க்கின்றனர். பிள்ளைகளும் பாடத்தை மனப்பாடம் செய்து தேர்வில் 90 சதவீத மதிப் பெண்கள் வாங்குகின்றனர். பயன்பாட்டு நோக்கில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதில்லை. அதனால் தான் 90 சதவீத மதிப்பெண்கள் வாங்கினாலும் மாணவர்களால் சுயமாக ஆங்கிலத்தில் பேச, எழுத முடியவில்லை.

மொழியியல் பின்னணியில் ஆங்கிலம் கற்பித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இதற்கு கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளைக் கற்பிக்க மொழியியல் கல்வி பயின்றவர்களை பணியமர்த்துவது பெரிதும் பயனளிக்கும்.

இதுதொடர்பாக சென்னை அடையாறில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் கணினி மொழியியல் ஆய்வு மையம் தொடங்க முயற்சி மேற்கொண்டிருப்பது நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தெய்வசுந்தரம் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x