Published : 16 Jul 2018 06:09 PM
Last Updated : 16 Jul 2018 06:09 PM

விளையாட்டுப் போட்டிக்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற லோடு வேன் கவிழ்ந்து விபத்து: மாணவர் கை துண்டானது; 35 பேர் காயம்

திருப்போரூர் அருகே விளையாட்டுப் போட்டிக்காக, மாணவர்களை குட்டியானை வேனில் (டாடா ஏஸ்) ஏற்றி தானே ஓட்டிச் சென்ற விளையாட்டு ஆசிரியரால் வேன் கவிழ்ந்ததில் மாணவர் கை துண்டானது. 35 மாணவர்கள் காயமடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் பழமையான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக இருப்பவர் அன்பரசு. இப்பள்ளியில் வாலிபால் பயிற்சியில் மாணவர்கள் சிறந்த அணியாக உள்ளனர்.

இன்று மதியம், கல்பாக்கம் அருகே கூவத்தூர் பள்ளியில் காஞ்சிபுர மாவட்ட அளவிலான வாலிபால் விளையாட்டுப் போட்டி நடைபெற இருந்தது. வாலிபால் போட்டியில் கலந்துக்கொள்ள, இப்பள்ளி மாணவர்கள் 32-க்கும் மேற்பட்டோர், உடற்கல்வி ஆசிரியர் அன்பரசுடன் பள்ளியிலிருந்து புறப்பட்டனர்.

உரிய பேருந்து அல்லது சரியான வாகனத்தை தேர்வு செய்து மாணவர்களை அழைத்துச்செல்லாமல், ஆசிரியர் அன்பரசு தனக்கு சொந்தமான குட்டியானை என்று அழைக்கப்படும், டாடா ஏஸ் லோடு வேன் மூலம் அழைத்துச் சென்றுள்ளார். குறைந்த அளவே இடமுள்ள வாகனத்தில் விளையாட்டு வீரர்கள் 35 பேரை திணித்து அடைத்து கொண்டுச்சென்றுள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு பள்ளியிலிருந்து வேன் புறப்பட்டுள்ளது. வாகனத்தை உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் ஓட்டிச்சென்றார். மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பழைய மாமல்லபுரம் சாலை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த பங்களா எதிரே கருங்குழி பள்ளம் என்ற இடத்தின் அருகே வந்தபோது அதிக பாரம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரது மகனான 11-ம் வகுப்பு பயிலும் மாணவன் பரத் மற்றும் 8-ம் வகுப்பு மாணவன் ரூபேஷ் பிரகாஷ், அருண் குமார், உதயா, மனோஜ்குமார் முனீஸ்வரன் லோகேஷ், பிரகாஷ் சந்திப், நந்தகுமார் உள்ளிட்ட 14 மாணவர்களுக்கு கை, கால், தலை, முகம் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

சில மாணவர்கள் சிறிய அளவில் காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக மாணவர்களுக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாமல் சிறு சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் பிரகாஷ்ராஜ் என்ற மாணவனுக்கு மட்டும் வலது கையில் பலத்தகாயம் ஏற்பட்டு கை துண்டானது.

விபத்தில் சிக்கிய மாணவர்களை அப்பகுதி வழியே வந்த பொதுமக்கள் மீட்டு வாகனங்களில் ஏற்றி திருப்போரூர் மற்றும் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மருத்துவமனையிலும், கேளம்பாக்கம் மற்றும் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தினர்.

இதில் வலது கை துண்டான மாணவன் பிரகாஷ்ராஜ் கையில் அறுவைசிகிச்சை செய்யவேண்டி உள்ளதால் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாகனம் விபத்துக்குள்ளான தகவலும் மாணவர்கள் காயம் அடைந்த தகவலும் தீயாகப் பரவ பெற்றோர்கள் பள்ளி முன் திரண்டனர்.

தங்கள் பிள்ளைகள் நிலை என்னவென்று அறிய அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பாதுகாப்பின்றி மாணவர்களை வாகனத்தில் அனுப்பிய பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முற்றுகை குறித்த தகவல் அறிந்த விரைந்து வந்த திருப்போரூர் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோரை சமாதானப்படுத்தினர். விபத்து மற்றும் பெற்றோர் முற்றுகை காரணமாக காலை 11 மணிக்கு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

மாணவர்களைப் பெற்றோருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்தும், ஆசிரியர் ஏன் லோடு வேனில் மாணவர்களை அழைத்துச்சென்றார், அவருக்கு லோடு வேன் ஓட்டும் ஓட்டுநர் உரிமம் உள்ளதா? என்பது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x