Published : 16 Jul 2018 05:52 PM
Last Updated : 16 Jul 2018 05:52 PM

மதுரையில் மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்படத் தொடங்கியது; பார்வையிட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் உற்சாகம்

 மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்ட மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் இன்று முதல் செயல்படத் தொடங்கியது. இதைப் பார்வையிட்ட இந்திய நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

தமிழகத்தில் தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் துறை அண்மையில் வழங்கியுள்ளது. தற்போது அடுத்தகட்டமாக மத்திய வன உயிரின வாரியம் அனுமதிக்காக இந்திய நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடம் காத்திருக்கிறது.

கேரளா மாநிலம் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அந்த அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு வாரத்தில் கிடைத்துவிடும் என்றும், அதன்பிறகு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியைப் பெற்று கட்டுமானப் பணியை உடனே தொடங்கிவிடுவோம் என்று இந்திய நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்தைப் பற்றிய சர்ச்சைகள், எதிர்மறை விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மதுரை மாவட்டம் வடபழஞ்சியில் மாதிரி நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்துள்ளனர். இந்த மையம் திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த மையத்தை இந்திய நியூட்ரினோ அறிவியல் ஆய்வுக்கூடம் திட்ட இயக்குநர் விவேக் ததார், மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், நியூட்ரினோ கூட்டு விஞ்ஞானி ஸ்டீபன் இன்பநாதன் (அமெரிக்கன் கல்லூரி இயல்பியல்துறை பேராசிரியர்) மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பார்வையிட்டு, அதன் செயல்பாட்டைக் கண்டு உற்சாகமடைந்தனர்.

 

இந்த மையத்தை பொதுமக்கள், மாணவர்கள் சென்று பார்வையிட்டு தங்களுடைய சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளலாம் என்று நியூட்ரினோ ஆய்வு மையத்தின் திட்ட இயக்குநர் விவேக் ததார் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இந்த வடபழஞ்சி ஆய்வு மையத்தை தேனி பொட்டிபுரம் ஆய்வு மையத்தில் அமைக்கப்படவுள்ள கருவியின் மாடல் என்றே சொல்லலாம். அதில், நியூட்ரினோ உணர் கருவியின் தொடக்க நிலைக் கருவி ஒன்றை அமைத்துள்ளோம். இக்கருவி முழுவதும் உள்ளூர் தொழில்நுட்பத்திலும், இங்கு கிடைக்கும் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. இது நியூட்ரினோ ஆய்வுப் பயணத்தில் ஒரு மைல் கல்லாகும்.

85 டன் எடையுள்ள இரும்பைக் கொண்டு இந்த உணர் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக தேனி மாவட்டம் பொட்டிப்புரத்தில் உருவாக்கப்படவிருக்கும் அந்த உணர் கருவி இதைக்காட்டிலும் 200 மடங்கு பெரியதாக இருக்கும். தற்போது இந்தக் கருவி இம்மையத்தில் வெளியே அமைக்கப்பட்டிருப்பதால் நியூட்ரினோவை உணர முடியாது. ஆனால் வளிமண்டலத்தில் நியூட்ரினோவுடன் சேர்ந்து இயங்கக்கூடிய மியோன் என்ற துகளை இந்தக் கருவி உணரும்.

பொட்டிபுரத்தில் நியூட்ரினோ துகள்களைப் பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்படும் பெரிய காந்த சக்தி கொண்ட கருவிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வு உள்ளது. ஆனால் அதுபோன்ற எந்த அச்சமும் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தக் கருவியின் காந்தப் புலம் அதன் உள்ளேதான் இயங்கும், வெளியில் அதை யாரும் உணரமுடியாது. அக்கருவியிலிருந்து ஒரு அடிக்கு உள்ளேதான் அதுவினை புரியும்.

இது இந்திய மாணவ, மாணவியரின் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தியே இந்த காந்த உணர் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களோ அல்லது பொருட்களோ இறக்குமதி செய்யப்படவில்லை என்பதே இந்தத் திட்டத்தின் மிகப் பெரும் வெற்றியாகும்” என்றார்.

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில், ”நியூட்ரினோ குறித்து பல்வேறு தவறான தகவல்கள் பொதுவெளியில் பரப்பப்பட்டு வருகின்றன. பொட்டிபுரம் மலையின் பக்கவாட்டில் குகை போன்று உருவாக்கப்படும் அந்தப் பகுதியில்தான் உலகின் மிகப்பெரிய காந்த உணர் கருவி வைக்கப்படுகிறது. ஆனால் இதனுடைய ஆற்றல் என்பது மிகக் குறைவான விசையைக் கொண்டதாகும்.

அப்பகுதியில் ஒரு மரம் கூடவெட்டப்படாது. யாருடைய நிலமும் கையப்படுத்தப்படாது. 66 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில்தான் இது அமைகிறது. நூறு குடும்பங்கள் வசிக்கும் அபார்ட்மென்ட்டுக்கு ஆகும் தண்ணீர் செலவுகூட இங்கு இல்லை. உலகில் 40 இடங்களில் நியூட்ரினோ குறித்த ஆய்வுகள் நடைபெற்று வந்தாலும்,வடபழஞ்சியிலும், தேனி பொட்டிபுரத்திலும் நடைபெறக்கூடிய ஆய்வுகள்தான் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகஅமையும். காரணம். நியூட்ரினோவுக்கு எதிராக இயங்கக்கூடிய துகள்கள் இருக்கிறதா, இல்லையா? என்பதுகுறித்த ஆய்வினை வடபழஞ்சியிலுள்ள உணர்கருவியே வெளிப்படுத்தும். இதனால் இந்த பிரபஞ்சம் குறித்த முழு புரிதலும் ஏற்பட வாய்ப்பு உருவாகும். வளிமண்டலத்தில் உருவாகக்கூடிய நியூட்ரினோக்கள் குறித்தே இங்கு ஆய்வு மேற்கொள்ளப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x