Last Updated : 16 Jul, 2018 07:53 AM

 

Published : 16 Jul 2018 07:53 AM
Last Updated : 16 Jul 2018 07:53 AM

மக்கள் ஆதரவை திரட்ட தீவிர முயற்சி: ஊழியர்களை அழைக்கும் ஸ்டெர்லைட்- இன்றுமுதல் குடியிருப்பில் விழிப்புணர்வு வகுப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் இன்று (ஜூலை 16) முதல் குடியிருப்புக்கு வந்து, வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்களின் ஆதரவை திரட்டவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்து, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். இதையடுத்து, தமிழக அரசு கடந்த மே 28-ம் தேதி அரசாணை வெளியிட்டு, அன்றைய தினமே ஆலையை மூடி சீ்ல் வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான பணிகளை வேதாந்தா குழுமம் தொடங்கியுள்ளது. தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து, ஆலை இயங்க அனுமதி அளிக்கக் கோரி ஸ்டெர்லைட் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 18-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் ஸ்டெர்லைட் நிறுவனம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக ஊழியர்கள், அலுவலர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட அறிவுறுத்தியுள்ளது.

“ஸ்டெர்லைட் ஆலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதை நம்ப வேண்டாம். இந்த ஆலையால் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாது” என மக்களிடம் விளக்க இந்த குழுக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகள் குறித்து எடுத்துக் கூறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்குழுவினர் தற்போது மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருவதோடு, மக்களுக்கு மேலும் என்ன தேவை என்பதையும் கேட்டறிந்து வருகின்றனர். குறிப்பாக ஆலைக்கும், மக்களுக்கும் இடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சி பலன் தர தொடங்கியிருக்கிறது என்கின்றனர், ஸ்டெர்லைட் தரப்பினர். இந்த முயற்சியின் பயனாகவே கடந்த சில வாரங்களாக கிராம மக்கள், ஒப்பந்தக்காரர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், லாரி உரிமையாளர்கள் என, பல்வேறு தரப்பினரும் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி வருகின்றனர் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

3 மாதமாக சம்பளம்

ஸ்டெர்லைட் ஆலையில் நிரந்தர ஊழியர்கள் 1,000 பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த மே 22-ம் தேதி வன்முறை, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுங்கள் என ஆலை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெரும்பாலான ஊழியர்கள் தூத்துக்குடியை காலி செய்துவிட்டு வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். தூத்துக்குடியில் வசிப்போரும் வெளியே தலை காட்டாமல் வாழ்ந்து வந்தனர். ஆலை இயங்காத போதிலும் இந்த ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டும் வேதாந்தா குழுமத்தின் பிற ஆலைகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் ஜூலை 16-ம் தேதி முதல் தாமிரா 1, தாமிரா 2 ஆகிய ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்புக்கு வர வேண்டும். தூத்துக்குடி நகருக்குள் இருந்து வருவதற்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மதிய உணவு, டீ போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் இயந்திரங்கள் குடியிருப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் பயோ மெட்ரிக் வருகை பதிவு இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் இமெயில் மற்றும் சமூக ஊடகம் மூலம் தகவல் தரப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு வகுப்பு

இதுகுறித்து ஆலை தரப்பில் கேட்டபோது, “ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக எந்தவித வருகை பதிவும் இல்லாமல் ஊதியம் வழங்கப்படுகிறது. இதை முறைப்படுத்தவே இந்த ஏற்பாடு. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் வேலை செய்ய வாய்ப்பில்லை. அதேநேரத்தில் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x