Published : 25 Jun 2018 07:30 AM
Last Updated : 25 Jun 2018 07:30 AM

சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை திட்டம் குறித்து 5 மாவட்ட மக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு உத்தரவு: பொதுமக்கள், விவசாயிகளின் விருப்பத்துக்கேற்ப திட்டத்தில் மாற்றம் செய்யவும் வாய்ப்பு

சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இச்சாலை அமைக்கப்பட உள்ள காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களிலும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் கூறும் கருத்துகளுக்கேற்ப, இத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

‘பாரத்மாலா பரியோஜனா’ என்ற மத்திய அரசின் நெடுஞ்சாலை திட்டம் மூலம் நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் கி.மீ தூரத்துக்கு நெடுஞ்சாலைகள் அமைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் சென்னையில் இருந்து சேலத்துக்கு பசுமைவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், சென்னையில் இருந்து சேலம் வரை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பசுமைவழிச் சாலை மூலமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை இணைத்து, வணிக, பொருளாதார வழித்தடங்களை மேம்படுத்த முடியும். இதனால் புதிய தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்து வருகிறது.

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இந்த பசுமைவழிச் சாலை அமைகிறது. இதில் 23 பெரிய பாலங்கள், 156 சிறிய பாலங்கள், 9 மேம்பாலங்கள், வாகனங்களுக்காக 22 கீழ்வழிப் பாதைகள், பாலங்களுடனான 2 கீழ்வழிப் பாதைகள், வனப்பகுதியில் 3 சுரங்கப் பாதைகள், 8 சுங்கச்சாவடிகள், பேருந்து மற்றும் லாரிகளுக்கான 10 நிறுத்தங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருக்கும் தகவல்களின்படி, இத்திட்டத்துக்காக சுமார் 2,560 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக நிலத்தை அளவிடும் பணியும் தொடங்கியுள் ளது.

இதற்கிடையில், பசுமைவழிச் சாலைக்காக இந்த வழிநெடுகிலும் விளைநிலங்கள், காடுகள், மரங்கள், மலைகள், கிராமங்கள் பாதிக்கப்படும் என்று கூறி பொதுமக்கள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பயண நேரத்தைக் குறைக்கவும், பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிப்பதா? என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே, விளைநிலங்களை பாதிக்காமல், மாற்றுப் பாதையில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

இதற்கிடையே, இந்தப் பசுமைவழிச் சாலை அமைய உள்ள மாவட்டங்களில் மக்களிடம் முழுமையாக கருத்துகளை கேட்டறியுமாறு தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. ‘‘சென்னை - சேலம் இடையிலான 277 கி.மீ. தூர பசுமைவழிச் சாலைத் திட்டத்துக்கான மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி தொடர்பாக முழு அறிக்கையை தாக்கல் செய்யவேண்டி உள்ளது. எனவே, காடுகள் மற்றும் சுற்றுச்சூழலில் இத்திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இந்தச் சாலை அமையவுள்ள மாவட்டங்களில் பொதுமக்களிடம் முழுமையாக கருத்து கேட்டு, அதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை - சேலம் பசுமைவழிச் சாலை தொடர்பாக காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களிலும் மக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மக்களிடம் கருத்துகளை கேட்க தமிழக அரசு உத்தரவிடும். கருத்துக் கேட்பு பணி அடுத்த 3 மாதங்களில் முடிந்துவிடும். மக்களின் கருத்துகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆய்வுக்கு உட்படுத்தி, அந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும். பெரும்பான்மை யான மக்கள் பசுமைவழிச் சாலையை எதிர்க்கவில்லை. விவசாய நிலங்களை பாதிக்காமலும், கிராமங்கள், மலைப் பகுதிகளை அழிக்காமலும் மாற்றுப் பாதையில் இப்பாதையை அமைக்க வேண்டும் என்றுதான் வலியுறுத்தி வருவதாக அறிகிறோம். ஆனாலும், பெரும்பான்மையான மக்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கேற்ப, இத்திட்டத்தில் தேவையான மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x