Published : 22 Jun 2018 01:51 PM
Last Updated : 22 Jun 2018 01:51 PM

நிஜ ‘சாட்டை சமுத்திரகனி’ ஆசிரியர் பகவானுக்கு குவியும் பாராட்டு: ஹிர்த்திக் ரோஷன், ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பாராட்டு

பணி மாறுதல் பெற்று சென்றபோது மாணவர்கள் கதறி அழுது செல்லவிடாமல் தடுத்த சம்பவத்தால் பிரபலமான ஆசிரியர் பகவானுக்கு பாராட்டுகள் குவிகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபல பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன் உள்ளிட்டோர் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டம், வெளியகரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்படும் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் குறைப்பு முடிவை மாவட்ட கல்வி நிர்வாகம் எடுத்ததால் பணியில் இளையவராக இருந்த ஆசிரியர் பகவான், சுகுணா என்ற இரண்டு பேரை இடமாற்றம் செய்தது மாவட்ட கல்வித்துறை.

வழக்கமாக நடக்கும் இடமாற்றம் தான். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கலந்தாய்வு மூலம் இடமாற்றம் நடந்துகொண்டுத்தான் இருக்கிறது. ஆனால் ஆசிரியர் பகவானின் இடமாற்றம் மாணவர்களின் அன்பினால் இன்று தமிழகம் தாண்டியும் பிரபல செய்தியாக வலம்வரத் தொடங்கியுள்ளது.

ஒரு ஆசிரியர் இடமாற்றத்தைக் கண்டித்துப் பெற்றோர்களும் மாணவ, மாணவிகளும் பள்ளி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்களா? பள்ளிக்குப் பூட்டு போட்டார்களா? பள்ளிக்கு குழந்தைகளை இனி அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் சபதமெடுத்தார்களா? என்ற செய்தி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ஆசிரியர் பகவான் இடமாறிச் செல்வதை மாணவ மாணவியர் தடுத்து நிறுத்தி கதறி அழுவதையும், அவரை கட்டிப்பிடித்து போகாதீர்கள் என கெஞ்சுவதையும், இதனால் ஆசிரியர் பகவான் அழுவதையும் காணொலியில் கண்ட பலரும் நெகிழ்ந்தனர். இவரல்லவா நல்லாசிரியர் என்றெல்லாம் புகழ்ந்தனர்.

ஆசிரியர் இடமாற்றத்தால் இரண்டு நாள், பள்ளியில் வகுப்புகள் சரிவர நடைபெறவில்லை. இதனால், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளுடன் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தினர். இடமாறுதல் 10 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது.

வெளியகரம் அரசு பள்ளி ஆசிரியர் பகவான் பணியிட மாற்றத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி அருட்செல்வன் பள்ளியில் இன்று ஆய்வு செய்தார். மாணவர்கள் போராட்டம் தொடர்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் அருட்செல்வன் விசாரணை நடத்தினார்.

கடந்த மூன்று நாட்களாக ஆசிரியர் பகவான் செய்திகளில், ஊடகங்களில், வலைதளங்களில் பிரபலமானவராக ஆகிவிட்டார். அவரைப்பற்றிய செய்தியை படித்த சினிமா பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ளனர். ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகர் ஹிர்திக் ரோஷன், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் பகவான் குறித்து ஆங்கில வெப்சைட்டுகளில் வந்த செய்தியை படித்துவிட்டு நெகிழ்ந்துபோய் பாராட்டியுள்ளனர்.

ஹிர்த்திக் ரோஷன் ஆசிரியர் பகவான் குறித்து வந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் உள்ள இந்த பாசப்பிணைப்பு, இந்த நிகழ்வு என் நெஞ்சை உருக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் மேற்கண்ட செய்தியை பதிவிட்டு குரு சிஷ்யர்கள் என்று பூங்கொத்து போட்டு வாழ்த்தியுள்ளார். பிரபலங்கள் பாராட்டியதன் மூலம் ‘நிஜ சாட்டை சமுத்திரகனி’ பகவானின் சேவை இந்தியா முழுதும் பிரபலமாகி உள்ளது. உயரிய சேவைக்கு என்றும் அங்கீகாரம் உண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x