Published : 21 Jun 2018 06:42 PM
Last Updated : 21 Jun 2018 06:42 PM

மதுபோதையில் தலைமைக் காவலருக்கு பாட்டில் குத்து: பீட்சா இளைஞர் கைது

கொரட்டூரில் மதுபோதையில் பிடிபட்ட இளைஞர் ஒருவர்  தலைமைக் காவலரை பாட்டிலால் குத்தி காயப்படுத்தியதால் கைது செய்யப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கம் பாரதிநகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (24). இவர் கொளத்தூர் பகுதியில் உள்ள பீட்சா விற்பனைக் கடையில் வீடுகளுக்கு பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு 10.30 மணிக்கு வேலையை முடித்துவிட்டு மது அருந்திய மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். பாடி மேம்பாலம் அருகில் வந்த போது வாகன சோதனையில் இருந்த கொரட்டூர் போலீஸார் அவரை மடக்கினர். மணிகண்டனை சோதனை செய்த போது அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து மணிகண்டனை கொரட்டூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். குடிபோதையில் இருந்த அவர் தொடர்ந்து தன்னை அழைத்துச் சென்ற தலைமைக் காவலர் சித்துராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

போலீஸார் மணிகண்டனின் வாகனத்தைப் பறிமுதல் செய்து பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அப்போதும் போதையில் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை வீட்டுக்குச் செல்லும்படி கூறிய போலீஸார் காலையில் வந்து அபராதம் கட்டிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொள்ளுமாறு கூறி அனுப்பினர்.

தொடந்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மணிகண்டன் திடீரென காவல் நிலையத்திற்கு வெளியே கிடந்த உடைந்த பாட்டிலை எடுத்து வந்து தலைமைக் காவலர் சித்துராஜ் (45) முகத்தில் குத்தினார். இதில் சித்துராஜுக்கு முகம் ,மற்றும் உதட்டில் காயம் ஏற்பட்டது. அவரது உதடு கிழிந்தது. உடனடியாக போலீஸார் மணிகண்டனை கைது செய்தனர். அவர் மீது தரக்குறைவாக பேசி பணியிலிருந்த போலீஸாரை தாக்கியதாக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.

தாக்குதலுக்கு உள்ளான தலைமை காவலர் சித்துராஜுக்கு உதட்டில் நான்கு தையல் போடப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x