Published : 21 Jun 2018 12:46 PM
Last Updated : 21 Jun 2018 12:46 PM

ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்; மத்திய அரசு மீட்டு வர வேண்டும்: ஜி.கே.வாசன்

 

ஈரானில் தவிக்கும் 21 தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘தமிழகத்தில் இருந்து ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்ற சுமார் 21 மீனவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கும் உடனடி நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள் மீன்பிடித்தொழிலுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள ஒரு தனியார் டிராவல் ஏஜென்சி மூலம் ஈரான் நாட்டிற்குச் சென்றிருந்தனர். அங்கு சென்ற அவர்களுக்கு தனியார் விசைப்படகு வைத்திருக்கும் ஒருவர் மூலம் வேலை கொடுக்கப்பட்டது.

அப்படி கொடுக்கப்பட்ட மீன்பிடித்தொழிலில் ஈடுபட்ட தமிழக மீனவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் மீனவர்கள் தங்குவதற்கு இடவசதி கொடுக்காததோடு, உணவும் மறுக்கப்பட்டது. இந்நிலையில் மீனவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு, உடல் நலன் பாதிக்கப்பட்டது. இச்சூழலில் இவர்கள் தங்களுக்கு உரிய சம்பளம், உணவு, தங்குமிட வசதி போன்றவற்றை வழங்கிட விசைப்படகு உரிமையாளரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்த விசைப்படகின் உரிமையாளர் மீனவர்களின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி அனுப்பிவிட்டார்.

மேலும் ஈரான் நாட்டில் தனியாரின் விசைப்படகில் மீன்பிடித்தொழிலுக்காக சென்ற தமிழக மீனவர்களை கடத்தல் தொழிலில் ஈடுபட கட்டாயப்படுத்துவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் பயந்த நிலையில் இருந்த மீனவர்கள் தாங்கள் நாடு திரும்பினால் போதும் என்ற சூழலில் தங்களது குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டு நடந்த பிரச்சனைகளை கூறியுள்ளனர்.

எனவே மத்திய அரசு ஈரான் நாட்டோடு உடனடியாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை மீட்பதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது மட்டுமல்ல மீனவர்கள் வேலை செய்த நாட்களுக்கான சம்பளத்தையும், பாஸ்போர்ட்டையும் ஈரான் நாட்டிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும். மேலும் வேலை செய்த நாட்களுக்கு உண்டான உணவுக்கும், தங்குமிட வசதிக்கும் உரிய பணத்தையும் பெற்றுத்தர வேண்டும்.

தமிழக மீனவர்கள் ஈரான் நாட்டில் பட்ட கஷ்டங்களுக்கு அந்நாட்டின் தனியார் விசைப்படகு உரிமையாளர் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்த வேண்டும். குறிப்பாக நம் நாட்டில் எந்த மாநிலத்தில் இருந்தும் வெளிநாட்டிற்கு செல்லும் மீனவர்களுக்கு உரிய பணிபாதுகாப்பு அங்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதை அந்நாட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து உறுதி செய்துகொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை.

மேலும் தமிழக அரசும் நமது மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மீனவர்களை எந்த தனியார் ஏஜென்சி அனுப்புகிறதோ அந்த தனியாருக்கும் இதில் பொறுப்பு இருக்கிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே இப்போது ஈரான் நாட்டில் வேலையின்றி, பாதுகாப்பின்றி தவிக்கின்ற தமிழக மீனவர்கள் 21 பேரையும் இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டுவர மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x