Published : 21 Jun 2018 09:32 AM
Last Updated : 21 Jun 2018 09:32 AM

வங்கி கணக்கில் ரூ.4.31 லட்சம் மோசடி: கோவை போலீஸில் மூதாட்டி புகார்

கோவை குனியமுத்தூரை சேர்ந்த மூதாட்டியின் வங்கிக் கணக்கில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் ரூ.4.31 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சையது. இவரது மனைவி உசேன் பீவி. தனது வங்கிக் கணக்கில் இருந்த 4.30 லட்சம் பணம் போலி ஏடிஎம் அட்டை மூலம் திருடப்பட்டுவிட்டதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார்.

அவரது மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனது கணவர் சையது கோவை மாநகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றியவர். அவர் காலமாகிவிட்டதால் அவரது ஓய்வூதியத்தை கடந்த 38 ஆண்டுகளாக நான் பெற்றுவருகிறேன். வெரைட்டிஹால் சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஓய்வூதியத்துக்கான கணக்கு உள்ளது.

கணக்கு புத்தகம்

கடந்த ஏப்.2-ம் தேதி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள தகவல் மையம் அருகே வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்காக, விண்ணப்பம் பூர்த்தி செய்து தரும் நபர்களிடம் வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவற்றை கொடுத்தேன். அதை பெற்றுக் கொண்டு 2 நாட்கள் கழித்து வரச் சொன்னார்கள். அதேபோல இரு தினங்களுக்குப் பிறகு சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற்றுக் கொண்டேன். பின்னர், வங்கி கணக்கு புத்தகமும் பெற்றுக் கொண்டேன். ஏப்.5-ம் தேதி சான்றிதழ் பதிவாகிவிட்டது.

இந்நிலையில், மே 16-ம் தேதி வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றபோது, குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருமாறு வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர். அதன்படி குடும்பத்தினரை அழைத்துச் சென்றபோது எனது வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார்கள்.

ஏடிஎம் அட்டை கிடையாது

எனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.4,31,300 எடுக்கப்பட்டுள்ளது. எனக்கு ஏடிஎம் அட்டை ஏதும் இல்லாத நிலையில், எப்படி பணம் எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி இழந்த பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக வங்கி நிர்வாகத்திடமும், பணப் பரிவர்த்தனைகள் குறித்து சைபர் கிரைம் போலீஸார் மூலமாகவும் விசாரிக்கப்படும் என போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x