Published : 20 Jun 2018 07:22 PM
Last Updated : 20 Jun 2018 07:22 PM

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனத்தில் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு

ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 'டெக்பீ' என்ற 15 மாத கால டிப்ளமோ பயிற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'டெக்பீ' திட்டம், ஆரம்ப கால வேலை மற்றும் உயர் கல்விக்கான திட்டமாகும். இந்த ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக ஊக்கத்தொகையுடன் கூடிய டிப்ளமோ பயிற்சியை ஹெச்.சி.எல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள திறமைமிக்க மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்தப் பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இந்த 'டெக்பீ' திட்டத்தில் சேர்வதற்கு அடிப்படைத் தகுதியாக மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதத்துடன் சேர்த்து 85 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பயிற்சியில் பங்கு பெறுபவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.10,000 வழங்கப்படும். இந்த டிப்ளமா பயிற்சிக்கான கட்டணம் ரூ.2 லட்சம், ஆனால் இந்தக் கட்டணத்தை முதலில் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சி முடித்து வேலைக்கு சேர்ந்த பின்பு அதாவது 3-வது ஆண்டு முதல் செலுத்தினால் போதும். கல்விக்கடன் அல்லது இ.எம்.ஐ மூலமாக செலுத்தும் சலுகையும் அளிக்கப்படுகிறது.

மேலும் பயிற்சி முடிவில் நடத்தப்படும் தேர்வில் 90 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படாது. 85 முதல் 90 சதவீத மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஹெச்.சி.எல். நிறுவனத்தின் முதன்மை துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் கூறுகையில், இன்ஜினீயரிங் படித்தவர்கள் அல்லது கணினி சார்ந்து படித்தவர்களுக்குத்தான் ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற கருத்து உள்ளது. அந்த எண்ணத்தை மாற்றும் வகையில் டிப்ளமோ படிக்கும் திறமை மிகுந்த மாணவர்களுக்கு நல்வாய்ப்பை வழங்கும் வகையில் நாங்களே பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தில் சேர பிரத்யேக ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வுகள் மாணவர்களுக்காக நடத்தப்படுகின்றன.

தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல், அப்ளிகேஷன் டெவெலப்மென்ட், சாப்ட்வேர் / புராடக்ட் டெஸ்டிங் மற்றும் அப்ளிகேஷன் சப்போர்ட் ஆகிய துறைகளில் 15 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்'' என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாணவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய இலவச எண் 1800-200-1117

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x