Published : 19 Jun 2018 11:38 AM
Last Updated : 19 Jun 2018 11:38 AM

கர்நாடக முதல்வரின் இரட்டை வேடம்: வாசன் கண்டனம்

 தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் உதட்டளவில் பேசினால் மட்டும் போதாது. உள்ளத்தளவில் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரை திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும், இதுகுறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் கூறியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ஏனென்றால் மத்திய அரசு காவிரி நதிநீர் சம்பந்தமாக மேலாண்மை ஆணையத்தை அமைப்பதற்கே காலம் தாழ்த்தியது. அதுவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகே அமைக்கப்பட்டது. அப்படி அமைக்கப்பட்ட மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக அரசின் சார்பில் இன்னும் உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இச்சூழலில் தமிழகம் வந்திருந்த கர்நாடக முதல்வர் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுகிறோம் என்றார். ஆனால் டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது மேலாண்மை ஆணையம் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் தமிழகம் வந்த போது தெரிவித்த கருத்துக்கு மாறாக இரட்டை வேடத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இவை ஏற்புடையதல்ல.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக இறுதியான தீர்ப்பை வெளியிட்டு, இனிமேல் மேல் முறையீடு செய்யக்கூடாது என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தும், இப்போது காவிரி மேலாண்மை ஆணையம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கர்நாடக முதல்வர் கூறியிருக்கிறார். இது எந்தவிதத்திலும் நியாயமில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்ட நிலையில் அதனை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.

சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டிய கர்நாடக முதல்வர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக வெறும் பேச்சளவில் மட்டுமே கூறிவிட்டு, மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக கூறியிருக்கிறார். இப்படி கர்நாடக முதல்வர் பேசியது தமிழக மக்கள் குறிப்பாக விவசாயிகள் மனதில் மிகுந்த வேதனையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்திய இறையாண்மையை காப்பேன் என்றும் சட்டப்படி நடப்பேன் என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்ட கர்நாடக முதல்வர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது. எனவே கர்நாடக முதல்வர் நியாயத்துக்கு உட்பட்டு, நீதிக்கு தலைவணங்கி, மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுக்கு சாதகமாக பேசுவதும், செயல்படுவதும் தான் உகந்தது.

குறிப்பாக கர்நாடக முதல்வர்  தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று உதட்டளவில் பேசினால் மட்டும் போதாது உள்ளத்தளவில் கூட்டாட்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு உரிய காவிரி நதிநீரை திறந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

மேலும், மத்திய அரசு இனியும் பொறுமை காக்காமல் கர்நாடக அரசு மேலாண்மை ஆணையத்துக்கு உறுப்பினரை குறுகிய காலக்கெடுவிற்குள் நியமிக்க கட்டயாப்படுத்தி, மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x