Published : 01 Jun 2018 08:22 AM
Last Updated : 01 Jun 2018 08:22 AM

இரு முறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற தமிழறிஞர் ம.லெ.தங்கப்பா காலமானார்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உடல் தானம்

இரு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், தமிழறிஞருமான ம.லெ.தங்கப்பா (84) நேற்று புதுச்சேரியில் காலமானார். அவரது உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு தானமாக அளிக்கப்பட்டது.

ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழர்களின் வாழ்வுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட எழுத்தாளர் தங்கப்பா, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கடந்த 29-ம் தேதி புதுச்சேரியில் உள்ள அவ்வை நகரில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பினார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக காலமானார்.

அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது.

அவரது கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. நேற்று மாலை அவரது உடல், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

தங்கப்பாவுக்கு விசாலாட்சி என்ற மனைவியும், செங்கதிர், விண்மீன் பாண்டியன் என இரு மகன்களும், இளம்பிறை, மின்னல் என இரு மகள்களும் உள்ளனர். இதுவரை 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் தங்கப்பா.

தலைவர்கள் இரங்கல்

தமிழறிஞர் ம.லெ.தங்கப்பா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: மறைந்த தங்கப்பா, பாரதிதாசன், கண்ணதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோரின் நண்பர். தமிழுக்கு தமது படைப்புகளாலும், மொழிபெயர்ப்புகளாலும் பெருமை சேர்த்தவர். எனது நெருங்கிய நண்பர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழறிஞர் தங்கப்பா மறைவு செய்தியறிந்து துயரம் அடைந்தேன். தனித்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட அவர் சங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்தவர். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்ற அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகுக்கு பேரிழப்பு.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: இலக்கியம் மட்டுமல்ல சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் ஆர்வம் காட்டியவர் தங்கப்பா. சிந்தனை தளத்தில் மட்டுமின்றி நடைமுறையிலும் தமிழ் மொழி, இனம் காக்கும் போராட்டங்களில் களப்பணியாற்றியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x