Published : 23 May 2018 09:14 PM
Last Updated : 23 May 2018 09:14 PM

துப்பாக்கி சூடு எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் எஸ்பி மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலத்த எதிர்ப்பும் பொதுமக்கள் கோபாவேசத்தையும் அடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி மாற்றப்பட்டனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள், போராட்டக்குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஆலை விரிவாக்கம் என்ற முடிவை கண்டித்து ஆலையை அகற்ற கோரி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நேற்று ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்ற போது போலீஸார் தடுக்க கலவரம் மூண்டது.

இதில் முன்னெச்சரிக்கை இல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் இரண்டாம் நாளான இன்றும் வன்முறை வெடித்தது. இன்றும் போலீஸார், பொதுமக்கள் மோதல் கலவரமாக மாறியதில் போலீஸார் மீண்டும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த கலவரத்துக்கு காரணம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் யாதவ், தூத்துகுடி எஸ்.பி. மகேந்திரன் உள்ளிட்டோரின் நிர்வாக குறைபாடுகளே என்று அரசியல் கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். காவல் அதிகாரிகள் பொதுமக்களை கையாண்ட விதம் பலத்த கண்டனத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் கையிலெடுத்துள்ளது. உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுக்க உள்ளது. பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் சர்வ சிக்‌ஷ அபியான் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் வடசென்னை போக்குவரத்து துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் கீரிஜா வைத்தியநாதனும், உள்துறைச்செயலர் நிரஞ்சன் மார்டியும் பிறப்பித்துள்ளனர். மாற்றப்பட்டவர்கள் விபரம்.

1.தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன் சென்னை போக்குவரத்து துணை ஆணையர்(வடக்கு) மாற்றப்பட்டுள்ளார். 2. நீலகிரி மாவட்ட எஸ்பி முரளிரம்பா தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். 3. சென்னை போக்குவரத்து துணை ஆணையராக (வடக்கு) உள்ள சண்முகப்பிரியா நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார்.

1. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருக்கும் வெங்கடேஷ் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் இயங்கும் சமர சிக்‌ஷா அபியான் திட்ட மாநில கூடுதல் திட்ட இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். 2. நெல்லை மாவட்ட ஆட்சியராக இருக்கும் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

3. தமிழ்நாடு தொழில் வழிகாட்டு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி துறையின் நிர்வாக துணைத்தலைவராக இருக்கும் சில்பா பிரபாகர் சதீஷ் நெல்லை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். 4. ஆசிய வளர்ச்சி வங்கியின் மேலாண் இயக்குநரின் முன்னாள் ஆலோசகராக இருந்த ஆஷிஸ் வச்சானி மீண்டும் தமிழகம் திரும்புவதை ஒட்டி திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலராக நியமிக்கப்படுகிறார்.

இது தவிர மேலும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x