Published : 23 May 2018 04:06 PM
Last Updated : 23 May 2018 04:06 PM

தூத்துக்குடி போராட்டக்காரர்களின் மனித நேயம்: காயம்பட்டு மயக்க நிலைக்குச் சென்ற போலீஸாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நெகிழ்ச்சி நிகழ்வு

 போலீஸார் துப்பாக்கிச் சூட்டைப் பரிசாகக் கொடுத்தபோதும் போராட்டக்காரர்கள் காயம்பட்ட போலீஸாருக்கு மனிதநேயத்துடன் உதவிய நெகிழ்ச்சி நிகழ்வு வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடி போராட்டத்தில் நடந்த வன்முறையும், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. பொதுவாக போராட்டம், வன்முறை போன்ற சமயங்களில் பாதுகாப்புக்காக வரும் போலீஸார் சில நேரம் வன்முறையாளர்களிடம் சிக்கிக் கொள்கின்றனர். அப்போது அவர்கள் கடுமையாக தாக்கப்படுவதுண்டு.

நேற்று தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் உயர் அதிகாரிகள், உளவுத்துறை தோல்வி காரணமாக போராட்டம் வன்முறையாக வெடித்ததாக மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டித்துள்ளனர். போதுமான எண்ணிக்கையில் போலீஸாரை குவிக்காமல், போராட்டக்காரர்களுடன் முன் கூட்டியே பேச்சுவார்த்தை நடத்தாமல், 144 தடை உத்தரவு போட்டு தவறாகக் கையாண்டதால் கலவரம் மூண்டு 10க்கும் மேற்ப்பட்டோர் பலியானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால் போராட்டக்காரர்களிடம் சிக்கிக்கொண்டனர். தாங்கள் தப்பிக்க வழியின்றி ஒரு கடைக்குள் சென்று பதுங்கினர், போராட்டம் நடத்தியவர்களில் சில இளைஞர்கள் அவர்களைத் தாக்கினர். ஆனால் போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அவர்களைத் தாக்க விடாமல் காத்து நின்று மீட்டனர். அவர்களை போலீஸார் கையெடுத்துக் கும்பிட்டனர்.

இன்னொரு இடத்தில் கல்வீச்சில் காயம்பட்டு தலையில் ரத்தம் வழிய மயங்கிக் கிடந்த காவலர் ஒருவரை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். இன்னொரு இடத்தில் போராட்டத்தில் சிக்கி மயக்க நிலைக்குச் சென்ற 5-க்கும் மேற்பட்ட பெண் காவலர்களை பத்திரமாக மீட்டு அவர்களை ஒரு அறையில் ஓய்வெடுக்க வைத்து தண்ணீர் கொடுத்து உபசரித்த மனித நேய நிகழ்வும் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

துப்பாக்கிக் குண்டுகளையும், உயிரிழப்பையும் பரிசாகத் தந்த காவல்துறைக்கு மனித நேயத்தைப் பரிசாக அளித்து நீங்கள் எங்களுக்கு எதிரியல்ல, எங்கள் சந்ததியின் உயிர்காக்கப் போராடுகிறோம் என்று மனித நேயத்தை உணர்த்திய தூத்துக்குடி மக்களின் மனித நேயம் போற்றத்தக்கதே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x