Published : 23 May 2018 03:53 PM
Last Updated : 23 May 2018 03:53 PM

துப்பாக்கிச் சூடு விவகாரம்; முதல்வரும் டிஜிபியும் ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின்

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் பேரணி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வரும், காவல்துறை டிஜிபியும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (புதன்கிழமை) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஏறக்குறைய 100 நாட்களாகப் போராடி வரும் அப்பகுதி மக்கள், பேரணியாகச் சென்றபோது அவர்களை தீவிரவாதிகளை சுட்டுத் தள்ளுவதைப் போல, நவீன ரக துப்பாக்கிகள், ஏகே-47 துப்பாக்கிளைக் கொண்டு காவல்துறையினர் சுட்டுத் தள்ளியிருக்கின்றனர். இதில் ஏறக்குறைய 11 பேர் கொல்லப்பட்டு, பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். காட்டுமிராண்டித்தனமான இப்படிப்பட்ட சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்ற காவல்துறையின் அராஜகப் போக்கை கண்டிக்கிறேன்.

காவல்துறையின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஏற்கெனவே குட்கா ஊழல் தொடர்பான சிபிஐ வழக்கில் சிக்கியுள்ளார். அவர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜினாமா செய்வதுதான் முறையானது. அதுமட்டுமல்ல, செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கி இப்போதுவரை அந்தப் பகுதியில் மிகப்பெரிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 11 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர். ஆனால், முதல்வர் அங்கு நேரில் சென்று பார்வையிட முன்வரவில்லை. முதல்வர் செல்லவில்லை என்றாலும், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த, அந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அமைச்சர்களையாவது அனுப்பி வைத்து, அங்கு அமைதியை நிலைநாட்ட, சமாதானத்தை ஏற்படுத்தும் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. எனவே, முதல்வரும் தன்னுடைய தோல்வியை ஒப்புகொண்டு உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணத்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார். அவர் தனது பதவியை காப்பாற்றிக் கொள்ளவும், இந்த ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் எதையோ சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அங்கு பலி கொடுக்கப்பட்டது பல உயிர்கள். பேரணி செல்வது குறித்து முன்கூட்டியே தெரிந்தும், எந்தவித காவல்துறை பாதுகாப்பும் ஏற்பாடு செய்யாமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல், ஆட்சியை நடத்துபவர்கள் இப்படித்தான் உளறிக்கொண்டு இருப்பார்கள்.''

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x