Published : 23 May 2018 03:48 PM
Last Updated : 23 May 2018 03:48 PM

துப்பாக்கிச் சூடு விவகாரம்; ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்: தமிழக அரசு உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு முற்றிலும் தடை விதிக்கக் கோரியும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தூத்துக்குடி, குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் போராட்டத்தின் 100-வது நாளையொட்டி பொதுமக்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, பொதுமக்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

இது தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை எனவும், துப்பாக்கிச் சூடு குறித்து உரிய விசாரணை நடைபெற வேண்டும் எனவும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 144 தடை உத்தரவை மீறி பல்லாயிரக்கணக்கான நபர்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை மிஸ் பண்ணாதீங்க:

நான் அவுட்டா? இல்லையா?- ஐசிசி உதவியை நாடிய பாகிஸ்தான் தெருவோர சிறுவர்கள்

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x