Published : 23 May 2018 02:45 PM
Last Updated : 23 May 2018 02:45 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வரும் 25-ம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து வரும் 25-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதில் திமுகவின் 8 ஆதரவுக் கட்சிகளும் பங்கேற்கின்றன.

இதுதொடர்பாக திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருவதற்கு ஏற்கெனவே பல மாதங்களாக பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக ஜனநாயக ரீதியில் அமைதியாகப் போராட்டம் நடத்தி வந்த மக்கள் செவ்வாய்க்கிழமை பேரணி ஒன்றை நடத்தினர். அந்தப் பேரணி மீது அராஜகமாகவும் கண்மூடித்தனமாகவும், ஏகே-47 போன்ற துப்பாக்கிகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி இளம்பெண் ஒருவர் உள்ளிட்ட 11 பேரை கடுகளவும் மனிதநேயமோ பரிதாப உணர்வோ இல்லாமல், குருவிகளை சுட்டுக் கொல்வது போல் சுட்டு வீழ்த்தியிருக்கும் வெகுமக்கள் விரோத தமிழக அரசுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

மலர் கண்காட்சிகளைத் திறந்து வைப்பதிலும், குளுகுளு உதகைக்கும் கொடைக்கானலுக்கும் சென்று ஓய்வெடுப்பதிலும், ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டுவதற்கு, சம்பிரதாயத்திற்கு மாறாக மயிலை கபாலீஸ்வரர் கோயில் குருக்கள்களை வரவழைத்து பூமி பூஜை நடத்துவதிலும் தீவிரம் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் மக்களை அழைத்துப் பேசி பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வு காண முன் வரவில்லை.

முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு நடைபெற்ற பேரணியில் சட்டம் ஒழுங்கிற்கு பாதிப்பு வராமலிருக்க அதற்கு தேவையான எண்ணிக்கையில் காவல்துறையினரை அங்கு நிறுத்தி முன்னெச்சரிக்கையாக எவ்வித தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அங்குள்ள உயர் காவல்துறை அதிகாரிகளோ மாவட்ட அதிகாரிகளோ போராட்டக்காரர்களை அழைத்துப் பேசி அமைதியான சூழலை உருவாக்கி ஒரு தீர்வு காணவும் எவ்விதத்திலும் முயற்சிக்கவில்லை. உயர் நீதிமன்றமே மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியும், மக்களின் நியாயமான போராட்டத்திற்கு தீர்வு காண எந்த மட்டத்திலும் உள்ள அதிகாரிகளோ அல்லது தென் மாவட்டங்களில் உள்ள அமைச்சர்களோ முயற்சி செய்யவே இல்லை.

தொடர்ந்து போராடி வரும் மக்கள் மீது ஆணவத்தோடு பழிவாங்கும் எண்ணத்தில் மனிதாபிமானமற்ற தாக்குதல் நடத்தவே தமிழக அரசும், மாவட்ட அதிகாரிகளும், உயரதிகாரிகளும் காத்திருந்து, அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இப்படியொரு கொடூரமான துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார்கள் என்றே அனைவரும் சந்தேகிக்கிறார்கள்.

ஆகவே தமிழக அரசின் அலட்சியத்தாலும் அரவணைப்பற்ற அராஜக அணுகுமுறையினாலும் நிகழ்ந்துள்ள இந்த விபரீதமான அரச பயங்கரவாதத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக உடனே மூடக் கோரியும் வரும் வெள்ளிக்கிழமை (25.05.2018) அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக, இந்திய தேசிய காங்கிரஸ், திராவிடர் கழகம், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஜனநாயக ரீதியாக அறவழியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை மிஸ் பண்ணாதீங்க:

இலங்கை அரசின் இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்திய படுகொலைக்கும் என்ன வேறுபாடு? - திருமாவளவன்

பெட்ரோல் விலையில் ரூ.25 வரை குறைக்க முடியும்; மக்களை ஏமாற்றுகிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் சாடல்

போராட்டங்கள் ஏன் கலவரங்களாகின்றன?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x