Published : 23 May 2018 02:08 PM
Last Updated : 23 May 2018 02:08 PM

இலங்கை அரசின் இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்திய படுகொலைக்கும் என்ன வேறுபாடு? - திருமாவளவன்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “அரச பயங்கவாதத்தின் கொடுந்துயர நாளாக மே 22-ம் தேதி அமைந்துவிட்டது. காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பெண்கள் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும், பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து கவலைக்கிடமான வகையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 50-க்கும் மேலானோர் காயமுற்று மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்தப் பெருந்துயர வன்கொடுமைகளைக் காவல்துறையினர் அரங்கேற்றியிருப்பது சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதற்காகத் தான் என்று சொன்னால் அது ஏற்கக்கூடியதில்லை. இது திட்டமிட்ட கொடூரமான அரச பயங்கரவாத ஒடுக்குமுறை. இனி எப்போதும் பொதுமக்கள் ஓரிடத்தில் பல்லாயிரக் கணக்கில் ஒன்றுகூடும் எண்ணம் எழவே கூடாது என்கிற வகையில் முடிவெடுத்து நடத்தப்பட்ட பெருந்திரள் படுகொலை.

ஜல்லிக்கட்டு உரிமைக்காக மெரினாவில் மக்கள் கட்டுக்கடங்காத அளவில் குவிந்ததைப் போல, கட்சி சார்பற்ற பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் ஓரிடத்தில் திரளுவது, அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை வெகுவாக அச்சுறுத்தியுள்ளது. அவ்வாறு தூத்துக்குடியில் பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டெழுந்தது ஆளும் வர்க்கத்தினருக்குக் கடும் எரிச்சலை மூட்டியுள்ளது. அன்று மெரினா, இன்று தூத்துக்குடி நாளை எங்கோ என்கிற வகையில் அடுத்தடுத்து பெருந்திரள் எழுச்சித் தொடர்ந்துவிடக் கூடாதென்கிற ஒரு தீர்க்கமான முடிவுக்கு அதிகார வர்க்கம் வந்துள்ளது. தூத்துக்குடியோடு இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே ஆளும் வர்க்கம் திட்டமிட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில்தான் அவர்கள் அரங்கேற்றியுள்ள இந்தக் கோழைத்தனமான, காட்டுமிராண்டித்தனமான துப்பாக்கிச் சூடு.

முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலைக்கும் தூத்துக்குடியில் தமிழக அரசு நடத்தியுள்ள இந்தப் படுகொலைக்கும் என்ன வேறுபாடு? காலத்தாலும் மன்னிக்க முடியாத இக்கொடுஞ்செயலுக்குப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலகுவதுதான் தற்போதைக்கு ஆறுதலளிப்பதாக அமையும்.

படுகொலை செய்துவிட்டு பின்னர் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதுதான் ஒரு மக்களரசின் அணுகுமுறையாகுமா? உயிர் கொடுத்தேனும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் எனப் போராடிப் பலர் களப்பலி ஆகியுள்ள நிலையில், அரசு உடனடியாக அந்த ஆலையை நிலையாக மூடுவதுதான் மக்களுக்கான அரசின் நடவடிக்கையாக அமையும்.

இவ்வளவு கொடூரமான படுகொலைகளுக்குப் பின்னரும் அந்த ஆலை இயங்க அரசு அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் தன்னியல்பாக மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும். அது காலத்தால் தவிர்க்க முடியாததாகும்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x