Published : 23 May 2018 01:28 PM
Last Updated : 23 May 2018 01:28 PM

ராணுவ வீரர்கள் போல் குறிபார்த்து சுட்ட கமாண்டோ வீரர்கள்; துப்பாக்கிச் சூட்டில் விதிகள் மீறப்பட்டதா?-ஓர் அலசல்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கிச் சூடு என்றால் விதிகளைப் பின்பற்றி என்னென்ன செய்திருக்க வேண்டும், என்ன வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்?

ஒரு கலவரம் திடீரென உருவாவதில்லை. பல நாட்கள் அதன் கொதிநிலை அதிகரித்து ஏதோ ஒரு சின்ன சம்பவத்தில் அது கலவரமாக வெடிக்கும். இந்தக்  கொதிநிலையை போலீஸின் உளவுத்துறை தொடர்ந்து கண்காணிக்கும், அரசுக்கு அறிக்கையாக அனுப்பும். அரசு எந்திரம் தேவையான நடவடிக்கை எடுக்கும்.

பல போராட்டங்கள் திறமையான காவல் அதிகாரிகளால் தந்திரமாகக் கையாளப்பட்டு அமைதியாக நடந்த வரலாறு உண்டு. நடைமுறை அறிவுகூட இல்லாமல் சிறிய போராட்டத்தையும் பெரும் கலவரமாக மாற்றி உயிரிழப்பு, சொத்து சேதம் ஏற்படக் காரணமாக அமைந்த சந்தர்ப்பமும் அமைந்தது உண்டு.

அப்படிப்பட்ட நிகழ்வுதான் நேற்றைய தூத்துக்குடி சம்பவம். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு என்பது ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையே முடக்குவது ஆகும். அதனால்தான் அப்படிப்பட்ட துப்பாக்கிச் சூட்டை இறுதிக்கட்டமாக அதுவும் குறிப்பிட்ட விதிகளின் கீழ்தான் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாரோ சில அதிகாரிகள் ஆத்திரத்தில் அப்போதுள்ள உணர்வுகளை வைத்து எடுப்பதல்ல துப்பாக்கிச் சூடு என்பது. அது அரசின் கொள்கை முடிவு என்று கூட சொல்லலாம். அதனால் தான் காவல் அதிகாரிகள் முடிவெடுக்காமல் ( சென்னை போன்ற இடங்கள் தவிர) ஆட்சியர்கள் முடிவெடுக்கிறார்கள்.

அப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நேற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பத்தை தாண்டியுள்ளது. 7க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் இது போராட்டக்காரர்களின் ஆவேசத்தைக் கட்டுப்படுத்தி அமைதி ஏற்படுத்த நடந்தது என்று டிஜிபி சார்பில் சொல்லப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டதாக அனைவரும் கூறுகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த விதத்தைப் பார்க்கும் போது கமாண்டோ வீரர்கள், செல்ஃப் லோடிங் ரைபிள் எனப்படும் வகையான துப்பாக்கியை உபயோகப்படுத்தியுள்ளது இது முதல் முறை ஆகும். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தும்போது சில விதிமுறைகள் உள்ளன. அவை கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

போலீஸ் வேன் மீது ஏறிய கமாண்டோ படை வீரர்கள் பொதுமக்களை ராணுவ வீரர்கள் போல் குறிவைத்துச் சுடுவது இதுவரை இல்லாத ஒன்று என போலீஸ் அதிகாரிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.

 

 

பாய்ண்ட் 303 வகை துப்பாக்கியை உபயோகப்படுத்துவதுதான் வாடிக்கை. அந்தத் துப்பாக்கியில் ஒரு முறைதான் சுட முடியும். அடுத்து புல்லட் ஆபரேட் செய்து பிறகு சுட வேண்டும். அந்தத் துப்பாக்கியில் அதிகபட்சம் 6 குண்டுகள் நிரப்ப முடியும். அதை ஒவ்வொரு முறையும் லோடு செய்ய வேண்டும்.

ஆனால், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் செல்ப் லோடட் ரைபிள் என அழைக்கப்படும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கியை உபயோகப்படுத்தியுள்ளனர். இதன் கொள்ளளவு 32 புல்லட்டுகள். ட்ரிக்கரை அழுத்திப் பிடித்தால் அடுத்தடுத்து குண்டுகள் சீறிப்பாயும். தனித்தனியாக லோடு செய்ய வேண்டியது இல்லை. இவைகளை தீவிரவாதிகள், பெரும் கொள்ளை சம்பவங்களில், ராணுவத்தில் பயன்படுத்துவார்கள்.

ஆனால் வேன் மீது ஏறி நின்று கைதேர்ந்த கமாண்டோ படை வீரர்கள் பலநூறு மீட்டர் சீறிப்பாயும் எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முறையாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல் இல்லை.

துப்பாக்கிச் சூட்டில் விதிகள் மீறப்பட்டதா என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர்(ஓய்வு) கருணாநிதியிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? விதிகள் மீறப்பட்டதாக பரவலாக சொல்லப்படுகிறதே?

விதிமீறல் என்பது விசாரணையில் தான் தெரியவரும். துப்பாக்கிச் சூட்டுக்கு சில விதிமுறைகள் உண்டு. கூட்டம் அதிகமாக அத்துமீறும் போது அவர்களுக்கு ஓப்பன் மைக்கில் எச்சரிக்கை விடுவார்கள். என்ன செய்யப் போகிறோம் என்று அறிவுறுத்துவார்கள். கண்ணீர் புகை குண்டை வீசுவோம் என்று கூறி வீசுவார்கள்.

அடுத்தும் வன்முறை அதிகமாகி, கூட்டம் கலையவில்லை என்றால் அடுத்து எச்சரிக்கை விடுத்து லத்தி சார்ஜ் என்று எச்சரித்து லத்திசார்ஜ் நடத்தப்படும். அப்போதும் கூட்டம் கலையவில்லை என்றால் மீண்டும் மைக்கில் எச்சரித்து துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என்று எச்சரிக்க வேண்டும். அதன் பின்னும் கூட்டம் கலையவில்லை என்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று எச்சரிப்பார்கள்.

அதையும் மீறி வன்முறையில் ஈடுபட்டால் வன்முறையில் ஈடுபடும் முக்கியமான நபரை குறிவைத்து பஸ்ஸுக்கு தீ வைக்கிறான் பார். அவனைக் குறி பார்த்து சுடு என்று குழு தலைவர் ஆணையிடுவார். அப்போது சுடுவார்கள். அவன் ஓடிக்கொண்டிருப்பான், அவன் மீதுதான் குண்டு பாயும் என்றும் சொல்ல முடியாது. இடுப்புக்குக் கீழ் சுட வேண்டும், கால் முட்டிக்குக் கீழ் சுடவேண்டும் என்பதெல்லாம் விதி அல்ல.

ஆனால் வன்முறையில் அதிகம் ஈடுபடும் ஒரு நபரைக் குறி வைப்பார்கள், பொதுமக்களை அல்ல. அந்த குண்டு உடலில் எங்கு வேண்டுமானாலும் பாய வாய்ப்பு உண்டு. அதனால் எங்கு பட்டாலும் குற்றமாகாது. நான் மேற்சொன்ன விதிகளை நேற்றைய சம்பவத்தில் கடைபிடிக்கவில்லை என்றால் அது விதிமீறல்தான்.

வேன் மீது ஏறி சுடுவது, எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது சரியா? இதற்கு முன்னர் பயன்படுத்தியுள்ளனரா?

எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கிகளை உபயோகப்படுத்த மாட்டார்கள். அது அதிமுக்கியமான இடங்களில் தீவிரவாதிகள் ஆபரேஷனில் தான் பயன்படுத்துவார்கள். துப்பாக்கிச் சூடு என்றால் சாதாரணமாக ஒரு ரவுண்டு தான் சுடுவது வழக்கம். எஸ்.எல்.ஆர் வகை துப்பாக்கி ஒரு வேலை பயன்படுத்தியிருந்தால் ஒரு ரவுண்டு மட்டுமே சுட வேண்டும். அப்படிச் சுடுவது ஒரு நபரைக் குறிவைத்து தான் இருக்கும்.

அதுவும் வன்முறையில் ஈடுபடும் நபர்களை குறிவைத்து சுடுவார்கள் ஆனால் இந்த சம்பவத்தில் 17 வயது பெண் சுடப்பட்டு இறந்துள்ளார். அவர் வன்முறையைத் தூண்டவா வந்திருப்பார்?

அணிவகுத்து நான்கைந்து பேரை நிற்கவைத்து தானே எச்சரித்து சுடுவார்கள்?

ஆமாம், அதற்கென ரைபிள் ஸ்குவாட் உண்டு. அணிவகுத்து நின்று எச்சரித்த பின்னர் தான் சுடுவார்கள்.

ஆனால் இந்த சம்பவத்தில் கமாண்டோ வீரர்களைப் பயன்படுத்தி வேன் மீது எல்லாம் ஏறி நின்று சுடுகிறார்களே?

அது பொசிஷன் எடுப்பது எங்கிருந்து வேண்டுமானால் நின்று சுடுவார்கள். அதற்கென உள்ள ரைபிள் வீரர்களைப் பயன்படுத்துவார்கள்.

என்ன வகையான துப்பாக்கி பயன்படுத்துவார்கள்?

303 வகை துப்பாக்கியைத்தான் பயன்படுத்துவார்கள். பால் அமினேஷன் என்பார்கள் ( ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுடுவது) அப்படி சுடுவார்கள். பிளாங்க் எனப்படும் மேல் நோக்கி அடித்து எச்சரிப்பதற்காக அடிப்பார்கள். பக் ஷாட்டும் அடிப்பார்கள், அது கூட்டம் அதிகமாகி கலவரம் ஏற்பட்டால் பயன்படுத்துவார்கள்.

பக் ஷாட் என்றால் என்ன?

அது கூட்டத்தைக் கலைக்கப் பயன்படுத்தும் குண்டு. சின்ன சின்ன பெல்லட்ஸ் இருக்கும் அதில். அப்படியே சிதறிச் செல்லும். கூட்டத்தில் அதிகமான நபர்கள் மீது குண்டு பாய்ந்து காயத்தை மட்டும் ஏற்படுத்தும். ஆனால் கண், தலை என்று முக்கியமான இடத்தில் குண்டு பாயும்போது உயிரிழப்பும் ஏற்படும் என்பதால் அதைப் பயன்படுத்த யோசிப்பதில்லை. பெரும்பாலும் பால்மினேஷன் என ஒரு ரவுண்டு சுடுவதுதான் வழக்கம்.

ரப்பர் குண்டுகளை ஏன் பயன்படுத்துவதில்லை?

அப்படி ஒன்று காவல்துறையில் உள்ளதா என்றே தெரியவில்லை. எங்கள் காலத்திலேயே சொல்லிக் கொண்டிருந்தார்களே தவிர நடைமுறைக்கு வந்ததில்லை. ஏன் வஜ்ரா எனப்படும் வாட்டர் கேனை உபயோகப்படுத்தியே கூட்டத்தைக் கலைத்திருக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சட்ட விரோத கும்பல்களை எப்படி கலைக்க வேண்டும் என்று "தமிழ்நாடு காவல் நிலை ஆணைகள் பிரிவு 703-லும், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, கவாத்து மற்றும் பயிற்சி கையேடு பிரிவு 123-லும் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பாக, உயிரிழப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும். கும்பலின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கொம்பொலி பயன்படுத்த வேண்டும். கலவரக் கொடி கட்டாயம் ஏற்றப்பட வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பான் வாயிலாக எச்சரிக்கை செய்ய வேண்டும்.

குறி வைப்பது கும்பலை பயமுறுத்துவதற்காக இருக்க வேண்டும். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் காவல்துறைக்கு இருக்கவே கூடாது. ஆனால் துணை ராணுவப்படை தீவிரவாதிகள் ஆபரேஷனில் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பொதுமக்கள் மீது பிரயோகப்படுத்தப்பட்டிருப்பது சரியா தவறா? என்பது விசாரணையின் முடிவில் வெளிவந்து தக்க வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x