Published : 22 May 2018 06:15 PM
Last Updated : 22 May 2018 06:15 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலி; தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை: இதற்கு முன் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச பலி என்ற தகவல் வருகிறது.

போராட்டம் ஏன்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் பொதுமக்களை நேரடியாக களத்தில் இறக்கிய போராட்டம் ஆகும். நாசகார ஆலையின் நச்சினால் பொதுமக்கள் கேன்சர் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாக தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தன்னெழுச்சியாக பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ச்சியாக சட்டப் போராட்டம் நடத்தி தடை வாங்கினார். ஆனாலும் தமிழக அரசு ஸ்டெர்லைட்டுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு ஸ்டெர்லைட் போராட்டத்தை நசுக்க முயன்றனர். அதற்கு மதச்சாயமும் பூசப்பட்டது.

100-வது நாளை நோக்கிய போராட்டம்

ஆனாலும் தூத்துக்குடி மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காமல் தமிழக அரசு செயல்பட்டது. போராட்டம் 25 நாள், 50 நாள் என கடந்து 100-வது நாளை எட்டியது.

இதையடுத்து தங்கள் கோரிக்கையை மனுவாக மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்தனர். பேரணியாகச் சென்று மனு அளிக்க அனுமதி கேட்டனர். ஆனால் சாதாரணமாக அனுமதி கொடுத்து போராட்டப் பாதையை வகுத்துக் கொடுத்து மனுவைப் பெற வேண்டிய மாவட்ட நிர்வாகம் தலைகீழாக நடந்துகொண்டு போராட்டத்தை கடுமையாகக் கையாண்டது.

பேரணியைக் கையாளத் தெரியாத மாவட்ட நிர்வாகம்

ஏதோ பேரணிக்கு தடைவிதித்த மாவட்ட நிர்வாகம், பெரும் கலவரம் நடப்பது போல் 144 தடை உத்தரவைப் போட்டது. இதனால் போராட்டம் மேலும் சூடு பிடித்தது. பேரணியாக வந்து ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்கும் மக்களை வரைமுறைப்படுத்தி மனுவை வாங்குவதில் அலட்சியம் காட்டி முடக்க நினைத்ததன் விளைவு பொதுமக்கள் தன்னெழுச்சியாக தடையை மீறி பேரணியாகப் புறப்பட்டனர்.

உளவுத்துறை தோல்வி?

“ஆயிரக்கணக்கில் கிராமங்களிலிருந்து தன்னெழுச்சியாக வந்த மக்களை சில நூறு போலீஸாரை வைத்து தடுக்க நினைத்த காவல்துறை செயலிழந்து விட்டது என்றே கூற வேண்டும். மாநில அளவில் உளவுத்துறை உள்ளது. மாவட்ட அளவிலும் உளவுத்துறை உள்ளது, ஒரு பிரச்சினை எதை நோக்கிச் செல்கிறது என்பதை அலட்சியமாகப் பார்த்ததன் நிகழ்வு இது.

மக்கள் நூறு நாட்களாக நாளுக்கு நாள் போராட்டக் குணம் அதிகரித்து கொந்தளிப்பான மன நிலையில் உள்ளனர் என்பதைக் கூட கணிக்க முடியாத நிலையில் மாநில உளவுத்துறையும், மாவட்ட நுண்ணறிவுப்பிரிவும் இருந்ததே இன்றைய நிகழ்வுக்கு முக்கியக் காரணம் என முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.”

காவல் அதிகாரிகளின் அலட்சியம்

மாவட்ட அளவிலான மக்கள் எழுச்சியை அதன் பின்புலத்துடன் பார்க்கத் தவறிய காவல் உயர் அதிகாரிகளின் நிர்வாகத் திறனின்மை காரணமாக போராட்டத்தில் எவ்வளவு மக்கள் பங்கேற்பார்கள் என்ற கணக்கு கூட இல்லாமல் சொற்ப அளவிலேயே போலீஸாரைக் கொண்டு பேரணியைத் தடுக்க முயன்றனர்.

மேலும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களிலிருந்து பொதுமக்கள் திரண்டு வர அப்போது சூழ்நிலையைப்  புரிந்துகொள்ளாமல் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பேரணியை அனுமதித்து, ஆட்சியரைச் சந்திக்க வைத்து சுமுகமாக முடிக்க அதிகாரிகள் யாரும் இல்லாத நிலை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன் இல்லாத உயிரிழப்பு

இதன் விளைவு பேரணி சொற்ப எண்ணிக்கையில் இருந்த போலீஸாரையும் மீறி ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

காற்றில் பறந்ததா விதிகள்?

தமிழக அரசியல் வரலாற்றில் சுதந்திரத்திற்கு முன்பும் அதன் பின்னரும் நடைபெற்ற அனேகப் போராட்டங்களில் இவ்வளவு பெரிய உயிரிழப்பு துப்பாக்கிச் சூட்டில் நிகழ்ந்தது இதுவே முதன்முறை. துப்பாக்கிச் சூடு எச்சரிக்கையாக நடத்தப்பட வேண்டும், வானை நோக்கி சுடுவது, காலுக்கு கீழ் சுடுவது போன்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

உயிரிழந்த பலரும் மார்பிலும் தோளிலும் , தலையிலும் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நோக்கி சூழ்நிலை சென்றபோது அதற்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கு முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

இதற்கு முன்னர் 1980-ம் ஆண்டு டிசம்பர் 31 அன்று குருஞ்சாக்குளத்திலேயே விவசாயப் போராட்டத்தில் 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதே அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் உரிமைப் போராட்டத்தின் போது திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதன்பின் தூத்துக்குடி, சங்கரன்கோவில் வட்டாரங்களில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் 1972-ம் ஆண்டு கோவில்பட்டி நகரத்தில் 3 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1970-லிருந்து 1993 வரை ஏறத்தாழ 48 விவசாயிகள் தமிழக காவல் துறையால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர்.

2011 நவம்பர் 11 அன்று இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வில் ஏற்பட்ட கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலியாகினர்.

அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 5 பேர் பலியானார்கள்.

1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பல்வேறு காலக்கட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

சென்னையில் 1985-ல் மீனவர் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானார்கள்.

வரலாற்றில் முதல் பதிவு; தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பலி

ஆனால் இவை அனைத்தும் மாநிலந்தழுவிய பிரச்சினை, இடம் மீட்பு போராட்டம், சாதிய மோதல்கள் போன்றவை ஆகும். சாதாரண தனியார் ஒருவரால் நடத்தப்படும் ஒரு ஆலையை அகற்ற பொதுமக்கள் மாவட்டம் முழுதும் போராட, போராட்டத்தை அலட்சியமாக கையாண்டு 11 பொதுமக்கள் துப்பாக்கி சூட்டில் பலியானது இதுவே தமிழக அரசியல் வரலாற்றில் முதன் முறையாகும்.

மெரினாவில் காட்டிய வேகம் ஸ்டெர்லைட்டில் எங்கே போனது?

“மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் வெடிப்பதற்கு முன் மதுரையில் எஸ்பி விஜேந்திர பிடாரி சாதாரணமாக காளைகளை அவிழ்த்துவிடும் ஒரு போராட்டத்தை கிராம மக்களுடன் பேசி  முடிவுக்கு கொண்டு வராமல் கடுமையாக நடந்துகொண்டதால் போராட்டம் பெரிதானது.

அதன் விளைவு மெரினாவிலும் பெரும் போராட்டமாக மாறிப்போனது. அதை அடுத்து மெரினாவில் போராட்டம் என்று சாதாரணமாக ஒரு புரளி கிளம்பினால் கூட நூற்றுக்கணக்கில் போலீஸாரைக் குவித்து அலர்ட்டாக இருக்கும் காவல்துறை ஸ்டெர்லைட் போராட்டத்தின் தன்மை, மக்களின் கோபாவேசம் பேரணியை எப்படிக் கையாள்வது என்பதை அறியாமல் போனது ஏன்? என்ற கேள்வியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது காவல்துறை” என்று கேட்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர்.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் துப்பாக்கிச் சூடு

பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை செவிமடுக்காமல், அடக்குமுறையைக் கையாளும் அரசும் அதை நியாயப்படுத்தும் அமைச்சர்களும் பொதுமக்களின் கோபத்திலிருந்து தப்ப முடியாது. தற்போது இந்தியா முழுவதும் ஸ்டெர்லைட் போராட்டம் பெரிய அளவில் பேசப்படும் நிகழ்வாகி விட்டது. இது தமிழக அரசின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ட்விட்டரில் இந்திய அளவில் தமிழகத்தின் செயலற்ற தன்மையும் அதனால் ஏற்பட்ட உயிர் பலியும் எதிரொலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x