Published : 22 May 2018 04:47 PM
Last Updated : 22 May 2018 04:47 PM

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு; 17 வயது மாணவியும் பலியான பரிதாபம்

 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு தடை விதிக்கவும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரரெட்டியாபுரம், திருவைகுண்டம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர் மாசடைவதாகவும், அதிலிருந்து வெளியேறும் மாசடைந்த புகையால் பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் 100-வது நாளை எட்டுவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, போராட்டத்தைக் கட்டுப்படுத்த திங்கள்கிழமையே தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி இன்று காலை 9 மணிமுதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பனிமய மாதா கோயிலில் இருந்து பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திரண்ட பொதுமக்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைக்க முற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு மேலும் பொதுமக்கள் கூடிய வண்ணம் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதையடுத்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களை கலைக்க முற்பட்டனர்.

மேலும், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 6 பேர் பலியானதாக தகவல் வெளியானது. தற்போது பலியானவர்கள் எண்ணிககி 9 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு பெண்கள் உட்பட 9 பேர் பலியாகினர். பலியானவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

வெனிஸ்டா, அந்தோனி, கிளாஸ்டன், வினிதா, ஜெயராம், மணிராஜ், சண்முகம், தமிழரசன், கந்தய்யா இறந்தவர்கள் ஆகியோர் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் ஆவர். இதில், வெனிஸ்டா 17 வயது மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், காயமடைந்தவர்கள் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் தெருத்தெருவாக காவல்துறையினர் சுற்றி வருவதால் கோரம்பள்ளம், அய்யனடைப்பு, சோரிஸ்புரம், மடத்தூர் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

ஸ்டெர்லைட் போராட்டம்; துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது: அமைச்சர் ஜெயக்குமார்

துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் பலி; சட்டம் ஒழுங்கை காக்காத அரசு கலைக்கப்பட வேண்டும்: விஜயகாந்த்

அமைதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு: சர்வாதிகார தமிழக அரசு: டிடிவி தினகரன் கண்டனம்

ஸ்டெர்லைட் போராட்டம்; அசம்பாவிதத்திற்கு முழு காரணம் உளவுத்துறையின் தோல்வி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x