Last Updated : 19 May, 2018 07:14 PM

 

Published : 19 May 2018 07:14 PM
Last Updated : 19 May 2018 07:14 PM

கஜமான்: 3டி மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட முதல் இலங்கை படம்

3டி மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் முழுநீள இலங்கைத் திரைப்படமான 'கஜமான்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இலங்கையின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் கமிலஸ் பெரேரா. இவரால் உருவாக்கப்பட்ட கஜமான், தெக்கொத் பத்மாவதி, தேபானிஸ், கொட்வின் ஐயா, தொங் சேத்தங், மகொடிஸ்துமா, டிக்கா, சிரிபிரிஸ், சுவீற்றி, மிஸ்டர் லவாரிஸ் ஆகிய கதாபாத்திரங்கள் மிகவும் பரிச்சயமானவை. இதில் சிறியவர் முதல் பெரியவர் வரையிலும் கவர்ந்த கஜமன் கதாபாத்திரத்தை 1972-ம் ஆண்டு உருவாக்கினார்.

இலங்கையின் பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரமான 'கஜமான்' முழுநீள 3டி திரைப்படமாக வருவதற்கு தற்போது தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த தொழில்முறை 3டி அனிமேட்டரான சானக பெரேரா இயக்கி உள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ஸ்வின்ன்பர்னி பல்கலைக்கழகத்தில் மல்டிமீடியாவில் பட்டம் பெற்றவர்.

2009-ம் ஆண்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'அவதார்' மற்றும் 2011-ம் ஆண்டில் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான 'அட்வஞ்சர்ஸ் ஆஃப் டின் டின்' போன்ற படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட 3டி மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் முழு நீள இலங்கை திரைப்படமாக 'கஜமான்' திரைப்படத்தின் ட்ரெய்லர் யூடியூப் இணையப் பக்கத்தில் கடந்த வாரம் இலங்கையில் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த படம் ஸ்டுடியோ 101 தயாரிப்பில் இலங்கை ரூ.7.5 கோடி மதிப்பில் (இந்திய ரூ. 3,23,26,867 மதிப்பு) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான தயாரிப்புப் பணிகள் 2010-ல் தொடங்கியது. சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டுள்ள 'கஜமான்' திரைப்படம் இலங்கையில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3டி மோஷன் கேப்சர் டெக்னாலஜியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட முதல் முழு நீள இந்தியத் திரைப்படமான ரஜினிகாந்த் நடித்த 'கோச்சடையான்' கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x