Published : 19 May 2018 10:53 AM
Last Updated : 19 May 2018 10:53 AM

காவிரியில் வஞ்சிக்கப்பட்டது தமிழகம்; அரசியல் சாசன அமர்வுக்கு தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்: வைகோ

மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து அரசியல் சாசன அமர்வுக்கு தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “காவிரி நீர் மேலாண்மைச் செயல்திட்டம் - 2018 என்ற பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மே 14 ஆம் தேதி ஒரு வரைவு செயல்திட்டத்தைத் தாக்கல் செய்தது.

காவிரி தொடர்பான அனைத்து அதிகாரமும் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கும் வகையில், வரைவு செயல்திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோரைக் கொண்ட அமர்வு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து, 17 ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்ட வரைவுத் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இறுதி ஆணை பிறப்பித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் எனும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அமைப்பை உருவாக்கினால்தான், இறுதித் தீர்ப்பைச் செயற்படுத்திட முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டி இருக்கிறது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தொகுதி ஏ-ல் பகுதி 8, பிரிவு 14 மற்றும் 15-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வழிகாட்டுதல் உள்ளது.

“எங்கள் கருத்தில், பொருத்தமான செயல் பொறியமைவு அமைப்பது மிக மிக முக்கியம். எந்த வகையில் பொறியமைவு அமைக்கப்பட்டாலும் செயல்படுத்தும் அதிகாரம், அதற்குத் தேவையான அளவு இருக்க வேண்டும். அவ்வாறு அதிகாரம் இல்லையெனில் எங்கள் முடிவுகள் வெறும் துண்டுத் தாளில்தான் இருக்கும்”.

“எனவே, நாங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் போன்று, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கருதுகிறோம்”.

காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு :

தொகுதி V Sec. 8 (15) :

“செயற்படுத்தும் பொறியமைவு தற்சார்பு கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசின் தொழில்நுட்ப அதிகாரிகளும், தொடர்புடைய மாநில அரசுகளின் பிரதிநிதிகளும், பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியத்தில் உள்ளது போன்று இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தந்த மாநிலங்களுக்கு உரிய விகிதத்தில் உள்ள பங்கு நீரைப் பகிர்ந்து அளிக்க முடியும்.”

ஆனால், மத்திய அரசின் வரைவு செயல்திட்டத்தில் தற்சார்பு அதிகாரம் என்ற வார்த்தையே இடம் பெறவில்லை.

காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயரை மட்டும் சூட்டிவிட்டு, அதிகாரம் ஏதுமற்ற வெற்று அமைப்பை உருவாக்குவது என்பது ஏமாற்று வேலை; காவிரி வரைவு செயல்திட்டத்தின் பிரிவு 9 ஆணையத்தின் அதிகாரங்கள், செயல்பாடுகள் மற்றும் கடமைகள் பற்றி குறிப்பிடுகிறது.

காவிரி ஒழுங்குமுறைக் குழு உதவியுடன் அணைகளின் இயக்கம் மற்றும் தண்ணீர் திறப்பதை ஒழுங்குபடுத்தும் பணியையும் காவிரி மேலாண்மை ஆணையம் மேற்பார்வையிடும் என்றுதான் வரைவு செயல்திட்டம் கூறுகிறது. அப்படியென்றால் அணைகளைத் திறந்து தண்ணீரை விடும் அதிகாரம் யாருக்கு? இது பற்றி வரைவு செயல்திட்டம் கூறுவது என்ன?

கேரளாவில் உள்ள பாணாசுர சாகர், கர்நாடகத்திலுள்ள ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜ சாகர், தமிழ்நாட்டின் கீழ் பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில் தண்ணீர் திறந்து விடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் வழங்கும்.”

இதற்கு என்ன பொருள்? காவிரியில் உள்ள அணைகளிலிருந்து தண்ணீரைத் திறந்து விடும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களிடம் தான் இருக்கும் என்று வரைவு செயல்திட்டம் கூறுகிறது.

இதிலிருந்து காவிரியின் அணைகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்காது என்பதை மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

தமிழ்நாட்டின் தண்ணீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு கர்நாடகம் காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று கோரினால் கர்நாடகம் தற்போது போலவே நீர் திறக்க முடியாது என்று சொன்னால் என்ன செய்வது? கர்நாடகத்தைப் பணிய வைக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு இருக்கிறதா என்றால் வரைவு செயல்திட்டத்தின்படி அதற்கு வழியே இல்லை.

இதுகுறித்து வரைவு செயல்திட்டம் பிரிவு 9 (3) உட்பிரிவு (XIV) கூறுவது என்ன?

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் காவிரி நடுவர் மன்றத்தின் முடிவுகளை, வழிகாட்டுதலைச் செயற்படுத்த ஒத்துழைக்காவிடில், ஆணையம் மத்திய அரசின் உதவியை நாடி, உச்ச நீதிமன்றம் 16.02.2018 இல் திருத்தம் செய்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயற்படுத்தும்.

வரைவு செயல்திட்டத்தின்படி, கர்நாடகம் தமிழகத்திற்கு வழக்கம் போல தண்ணீர் திறப்பதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், ஆணையம் மத்திய அரசின் உதவியை நாடுமே தவிர, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஆணையத்திற்கு அறவே இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தொகுதி - V பாகம் 9, பிரிவு XI கீழ்க்காணும் உத்தரவைப் பிறப்பித்து இருக்கிறது.

மேல் பாசன மாநிலம் கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு அட்டவணையில் ஒதுக்கி உள்ள தண்ணீரின் அளவைப் பாதிக்கும் செயலைச் செய்யக் கூடாது. ஆனால், தொடர்புடைய மாநிலங்கள் தங்களுக்குள் கலந்து பேசி - ஒழுங்குமுறைக் குழுவின் ஒப்புதலைப் பெற்று மேல் பாசன மாநிலம் தண்ணீர் திறந்து விடும் முறையில் மாறுதல் செய்து கொள்ளலாம்.

நடுவர் மன்றம் வழங்கியுள்ள மேற்கண்ட தீர்ப்பின்படி கர்நாடக மாநிலம் தம் விருப்பப்படி புதிய அணைகள் கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

ஆனால், மத்திய அரசின் வரைவு செயல்திட்டத்தில் கர்நாடக மாநிலம் காவிரியின் குறுக்கே புது அணைகள் கட்டுவதைத் தடை செய்யும் அதிகாரம் எதுவும் ஆணையத்திற்கு அளிக்கவில்லை.

கர்நாடக மாநிலம், நடுவர் மன்றத்தின் தீர்ப்பு தொகுதி V, பாகம் 9-இல் பிரிவு XIII இல் கூறப்பட்டுள்ளதைத் தனக்குச் சாதகமாகக் காட்டிக் கொண்டு, புதிய அணைகள் கட்டுவதை நடுவர் மன்றம் தடுக்கவில்லை என்று கூறி வருகிறது.

ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் தண்ணீர் பயன்பாட்டை ஒழுங்குப்படுத்திக் கொள்ளவும், தன் மாநிலத்திற்குள் தண்ணீரைப் பயன்படுத்தி அனுபவித்துக் கொள்ளவும், இந்தத் தீர்ப்பாயத்தின் ஆணை இடையூறு செய்யவில்லை. ஆனால், அவ்வாறான பயன்பாடுகள் அனைத்தும் இந்தத் தீர்ப்பாயம் ஏற்கனவே வழங்கியுள்ள ஆணைக்கு முரணாக இருக்கக் கூடாது.

மேற்கண்ட பிரிவை மட்டும் கர்நாடக மாநிலம் தனது வாதத்தில் எடுத்து வைத்து, அணை கட்டும் திட்டத்தைச் செயற்படுத்த முனைகிறது. ஆனால், பிரிவு XI, கீழ்ப்பாசன மாநிலங்களுக்குத் தண்ணீர் அளவைப் பாதிக்கும் வகையில் எந்தத் திட்டத்தையும் செயற்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி இருப்பதை கர்நாடகா மறைக்கிறது.

இந்நிலையில், புதிய அணைகள் கட்டுவதைத் திட்டவட்டமாக தடை செய்யும் உத்தரவை உச்ச நீதிமன்றம் இறுதி உத்தரவில் வழங்கவில்லை. இதனால் தமிழ்நாடுதான் மோசமான பாதிப்புக்கு உள்ளாகும்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கூறப்படாத சிலவற்றை, மத்திய அரசு வரைவு செயல்திட்டத்தில் வரம்பு மீறி சேர்த்துள்ளது.

காவிரி படுகை மாநிலங்கள் என்னென்ன பயிர் செய்ய வேண்டும் என்பதையும், சொட்டு நீர்ப் பாசனம் உட்பட என்னென்ன பாசன முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மேலாண்மை ஆணையம் முடிவு செய்யும்,” என்று வரைவு செயல்திட்டத்தின் பிரிவு XVI, மற்றும் பிரிவு XVII இல் கூறப்பட்டு இருப்பது மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் நடவடிக்கை ஆகும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 7 ஆவது அட்டவணையில் 17 ஆவது பிரிவு, பட்டியல் II-ன்படி வழங்கப்பட்டுள்ள மாநில உரிமையில், காவிரி மேலாண்மை ஆணையம் தலையிடுவதாக கேரள மாநிலம் எதிர்ப்பு தெரிவித்ததையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

மத்திய அரசு தாக்கல் செய்த வரைவுத் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் 18.05.2018 அன்று வழங்கியுள்ள இறுதி உத்தரவில் காவிரி மேலாண்மை ஆணையத்தை மட்டும் அணுகினால் போதும்; ஆணையத்திற்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது என்று தெரிவித்து இருக்கிறது. ஆனால், வரைவு செயல்திட்டத்தில் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது கண்டனத்துக்கு உரியது.

உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு ஏற்பு வழங்கி பிறப்பித்துள்ள இறுதித் தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குத்தான் அதிகமான இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்துள்ள மத்திய அரசின் வரைவு செயல்திட்டம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து அரசியல் சாசன அமர்வுக்கு மேல் முறையீடு செய்வது ஒன்றுதான் தற்போது தமிழ்நாட்டிற்கு இருக்கும் ஒரே வழி.

தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து தமிழகத்தின் உயிராதாரமான காவிரி உரிமையைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று” வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதை மிஸ் பண்ணாதீங்க:

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x