Published : 18 May 2018 01:17 PM
Last Updated : 18 May 2018 01:17 PM

குட்கா வழக்கு- அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது வெட்கக்கேடு: ராமதாஸ்

குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அட்டைப் பூச்சியைப் போல பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதும், அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதித்துக் கொண்டிருப்பதும் வெட்கக்கேடானது என, பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சுகாதார அதிகாரி சிவக்குமார் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் குட்கா ஊழல் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதை உச்ச நீதிமன்றத்தின் இன்றையத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது. குட்கா ஊழலை மூடி மறைப்பதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஏராளமான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் போதிலும் அவற்றை நீதிமன்றங்கள் முறியடித்து வருகின்றன.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயரதிகாரிகள் சிலர் உட்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கு குட்கா நிறுவனம் கோடிக்கணக்கில் லஞ்சத்தை வாரி வழங்கியதற்கான ஆதாரங்கள் வருமான வரித்துறை சோதனையின்போது கைப்பற்றப்பட்டு, தமிழக அரசிடமும், காவல்துறையிடமும் ஒப்படைக்கப்பட்டன.

அவ்வளவுக்குப் பிறகும் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியலில் இருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளை தவிர்த்துவிட்டு, சாதாரண அதிகாரிகள் மீது மட்டும் தமிழக லஞ்சத் தடுப்புப் பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரைக் காப்பாற்ற அரசு முயன்றதால் தான் இவ்வழக்கை உயர் நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றியது. ஆனாலும் இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்க்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய தமிழக ஆட்சியாளர்கள், சிவக்குமார் என்ற இளநிலை அதிகாரியை பினாமியாக மாற்றி அவர் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததிலிருந்தே குட்கா ஊழல் வழக்கைக் கண்டு தமிழக ஆட்சியாளர்கள் எந்த அளவுக்கு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர முடியும்.

குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதற்காக கூறியுள்ள காரணங்கள் முக்கியமானவை. குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், காவல்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிப்பது தான் முறையாக இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய கருத்துக்குப் பிறகும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அட்டைப் பூச்சியைப் போல பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதும், அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதித்துக் கொண்டிருப்பதும் வெட்கக்கேடானது ஆகும். இந்த அவலம் தொடரக்கூடாது.

குட்கா ஊழலில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் சிபிஐ அமைப்பு இனியும் தாமதிக்காமல் விசாரணையை தொடங்க வேண்டும்.

குட்கா நிறுவனங்களிடம் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவரை கைது செய்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவு முன்வர வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x