Last Updated : 17 May, 2018 07:38 PM

 

Published : 17 May 2018 07:38 PM
Last Updated : 17 May 2018 07:38 PM

இந்திய அரசின் நிதி உதவியுடன் மடு தேவாலயத்தில் பக்தர்களின் வசதிக்காக 300 வீடுகள் கட்ட இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

இந்திய அரசின் ரூ.12.84 கோடி நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு அன்னை மரியாள் தேவாலயத்தில் பக்தர்களின் வசதிக்காக 300 வீடுகளை கட்டுவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டத்தில் மடு என்றும் இடத்தில் அன்னை மரியாள் தேவாலயம் அமைந்துள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள கத்தோலிக்கரின் புனித வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மடு அன்னை மரியாள் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும் லட்சக்கணக்காண பக்தர்கள் சாதி, மத பேதமின்றி கலந்து கொள்வார்கள். இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் இந்த ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. யுத்த காலகட்டத்தில் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆயிரக்கணக்காணோருக்கு இந்த ஆலயம் புகலிடமாகவும் விளங்கியது.

2008-ம் ஆண்டு இலங்கை ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்த ஆலயத்தின் வளாகம் சேதமடைந்தது. இதனால் இந்த ஆலயத்தில் தஞ்சமடைந்த மக்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தனர். தேவாலயத்தில் இருந்த அன்னை மரியாளின் திருவுருவச் சிலையினை பாதுகாப்பதற்காக மன்னார் மாவட்டம் தேவன்பிட்டியில் உள்ள புனித சவேரியர் ஆலயத்துத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்த பின்னர் ஆலயத்தின் சேதமடைந்த பகுதிகள் செப்பனிடப்பட்டு மீண்டும் அன்னை மரியாளின் திருவுருவச் சிலை இங்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஆலயத்திற்கு கடந்த 14.01.2015 அன்று கத்தோலிக்கத் திருச்சபையின் போப் பிரான்சிஸ் வருகை தந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை கொழும்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கையின் சுற்றுலா மேம்பாடு மற்றும் கிறிஸ்தவ மத விவகாரத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்திய அரசின் (இந்திய ரூபாய் மதிப்பில்) ரூ.12.84 கோடி நிதியை பயன்படுத்தி மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு அன்னை மரியாள் தேவாலயதின் பக்தர்களின் வசதிக்காக 300 வீடுகளைக் கட்டுவதற்கு ஆவணங்களை தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை இலங்கை அமைச்சரவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் வழங்கியது.

இந்தியாவின் நிதி உதவி மூலம் மடு தேவாலயத்தின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் ஆகஸ்ட் மாதம் மரியாள் தேவாலயதில் நடைபெறும் திருவிழாவில் மீண்டும் இந்தியாவிலிருந்து அதிகளவில் பக்தர்களை கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x