Published : 17 May 2018 01:15 PM
Last Updated : 17 May 2018 01:15 PM

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்பு: ஆன்லைன் மூலம் விண்ணப்பம், கலந்தாய்வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி

 பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் விண்ணப்பம், ஆன்லைன் கலந்தாய்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. ஆன்லைன் மூலம் மட்டுமே கலந்தாய்வு நடத்தப்படும் என்ற உத்தரவு சரியானதே என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டுமென்ற நடைமுறையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன், பொன்.பாண்டியன், முரளி ஆகியோர் வழக்கு தொடர்திருந்தனர். ஆன்லைன் முறையினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆன்லைன் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு, கிரேடிட் கார்டு, நெட் பேங்கிங் ஆகிய முறைகளுடன் டிடியாகவோ அல்லது பல்கலைக்கழக வங்கிக் கணக்கிலோ பெற முடியுமா என அண்ணா பல்கலைகழகம் விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

மீண்டும் மே.11 அன்று நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைகழகம் தரப்பில் 42 உதவி மையங்களில் ஆன்லை நடைமுறைக்காக 2580 கணினிகள் வைக்கப்பட்டு, தலா ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மையத்துக்கும் கவுன்சிலிங் நடைமுறை குறித்து முழுமையாக தெரிந்த அண்ணா பல்கலைக்கழக பணியாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறையில் ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் டிடி முறையில் செலுத்த முடியாது என்று தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் குறுக்கிட்டு, கணினியில் இணையதள வசதி இல்லாதவர்கள், 42 மையங்களுக்கு வருபவர்கள், டெபிட் கிரெடிட் கார்டு, இணைய வங்கி சேவை இல்லாதவர்களின் நிலை என்ன ஆகும் என கேள்வி எழுப்பினர்.

கட்டணம் செலுத்த முடியாததால் விண்ணப்பிக்க முடியாத நிலை யாராவது ஒருவருக்கு கூட ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை அண்ணா பல்கலைக்கழகம் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் நீதிபதிகள் தெரிவித்த யோசனையில், மாணவர்களிடம் டிடி-யாக ஏற்றுக்கொண்டு, அதை அண்ணா பல்கைகழக கரன்ட் அக்கவுண்ட் மூலம் நெட் பேங்கிங்கில் பரிமாற்றம் செய்யலாமே என கேள்வி எழுப்பியதுடன், உடனடியாக விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டனர்.

அரைமணி நேர அவகாசத்துக்குப் பின்னர் மீண்டும் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், விண்ணப்பக் கட்டணத்துக்கான தொகையை டிடி-யாக பெற்றுக்கொள்கிறோம் என உத்தரவாதம் அளித்தார். மேலும் அதற்காக மென்பொருள் மாற்றியமைக்க ஒருவார கால அவகாசம் தேவைப்படும் என்பதால், மே 18 ஆம் தேதிக்குள் செய்துவிடுவதாக தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதியான இந்த நிலைப்பாட்டை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தங்கள் உத்தரவைப் பிறப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ள ஆன்லைன் விண்ணப்ப முறை மற்றும் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

அண்ணா பல்கலைக்கழக விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிப்பது தொடர்பாக, கடந்த 2 ஆண்டுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. 2018-19 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு என்பது தகுதியான மாணவர்கள் விண்ணப்பிப்பதில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்கிறது.

மாவட்டந்தோறும் பயிற்சி பெற்ற உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. 2 லட்சம் மாணவர்கள் எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யும்போது ஏற்படும் நேர விரயத்தை ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை குறைக்கிறது. எனவே ஆப்லைன் விண்ணப்பம் ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.

மாணவர்கள் மனதில் அச்சத்தை நீக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையுடன் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை பின்பற்றப்படும் என்றும், நீதிமன்றம் அதை கண்காணிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மாணவர்கள் சந்திக்கக்கூடிய சிக்கல்களை அடையாளம் கண்டு மனுதாரர்கள் தெரிவிக்க வேண்டும்.

1. விண்ணப்பக் கட்டணத்தை டிடி-யாக பெற்றுக்கொள்ள ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.

2. உதவி மையங்களில் பயிற்சிபெற்ற ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3. மூத்த கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார் 

இவை மூன்றையும் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜூன் 8-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x