Published : 16 May 2018 05:44 PM
Last Updated : 16 May 2018 05:44 PM

பகலில் ஆட்டோ ஓட்டுநர்கள்; இரவில் வழிப்பறி திருடர்கள்: டபுள் ஆக்‌ஷன் இளைஞர்கள் 4 பேர் கைது

பகலில் ஆட்டோ ஓட்டுநர்களாக உழைத்து, வேவு பார்த்துவிட்டு இரவில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த நான்கு இளைஞர்களை அண்ணாநகர் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்தனர்.

சென்னை அண்ணாநகர் 6-வது அவென்யூவில் பாண்டியன் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை நான்கு இளைஞர்கள் வழிமறித்தனர். அவர் என்ன என்று கேட்டபோது நான்கு பேரும் திடீரென கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனைப் பறிக்க முயன்றுள்ளனர். அவர்களிடம் செல்போனைக் கொடுக்க மனமில்லாத பாண்டியன் போராடியுள்ளார்.

உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார். பாண்டியனின் கூச்சல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.

கத்தியைக் காட்டி மிரட்டிக்கொண்டிருந்த 4 இளைஞர்களையும் பிடித்து பாண்டியனை அவர்களிடமிருந்து மீட்டனர். பின்னர் அந்த நான்கு பேரையும் அண்ணாநகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நான்கு இளைஞர்களையும் போலீஸார் சாதாரணமாக விசாரணை நடத்தினர். ஆனால் விசாரணையில் 4 பேரும் கூறிய தகவல்கள் போலீஸாரைத் திடுக்கிட வைத்தன.

பிடிபட்ட நான்குபேரும் பேரிடம் விசாரணை செய்த போது போலீஸாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. பிடிப்பட்டவர்கள் பெயர் தினேஷ்குமார் (22), பிரசாந்த் (23), கார்த்திகேயன் (21), தினேஷ் (23) எனபதும் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இவர்கள் நான்கு பேரும் நண்பர்கள், பெரம்பூர் பகுதிகளில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருபவர்கள். ஷேர் ஆட்டோவில் போதிய வருமானம் இல்லாததால் பணம் சம்பாதிக்க குறுக்குவழியைத் தேர்வு செய்துள்ளனர்.

100 

பகலில் ஆட்டோ ஓட்டிவந்த நான்குபேரும் இரவில் வாடகை காரில் சென்னை முழுவதும் சுற்றி வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனர். சென்னை முழுவதும் வலம் வரும் இவர்கள் சாலையில் யாராவது தனியாகச் சென்றால் அவர்களை மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, செல்போனை பறித்துவிட்டு தப்பிச்செல்வது வழக்கம்.

அம்பத்தூர், அண்ணாநகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் தெருக்களில் நிற்கும் புல்லட், பல்சர், எஃப் இசட் போன்ற விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் இருப்பதைக் கண்டால் அவற்றையும் திருடிச்செல்லும் வேலையும் செய்து வந்துள்ளனர்.

முக்கியமாக இவர்களின் இலக்கு இரு சக்கர வாகன ஓட்டிகள் தான். இருசக்கர வாகன ஓட்டிகளைத் தொடர்ந்து சென்று தனியான இடத்தில் மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன், இருசக்கர வாகனத்தைப் பிடுங்கிச் சென்றுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

பிடிபட்ட 4 இளைஞர்களிடமிருந்து 15 இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரவில் சுற்றித் திரிந்து வழிப்பறிக்குப் பயன்படுத்திய வாடகை காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x