Last Updated : 16 May, 2018 05:19 PM

 

Published : 16 May 2018 05:19 PM
Last Updated : 16 May 2018 05:19 PM

ராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த இரணை தீவில் 26 ஆண்டுகள் கழித்து தமிழ் மக்கள் குடியேற இலங்கை அரசு அனுமதி

இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையினர்களாக வாழும் வட மாகாணத்தில் வரலாற்று பாரம்பரியம் கொண்ட தீவுகளில் இரணை தீவும் ஒன்று. கிளிநொச்சி மாவட்டம் இரணை மாதா மீன்பிடித்துறையிலிருந்து 40 நிமிட படகு பயணத்தின் மூலம் இரணை தீவிற்குச் செல்லாம். இரட்டைத் தீவுகளைக் கொண்டதனால் இதற்கு இரணை தீவு என்ற பெயர் உண்டானது. சுமார் 6 கி.மீ சுற்றளவை கொண்ட இரணைதீவின் தீவுகளில் ஒன்றை சிறுதீவு என்றும் மற்றொன்றை பெருந்தீவு என அவ்வூர் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் இரணை தீவு முத்துக்குளிப்பிற்கும், சங்கு குளிப்பிற்கும் பெயர் பெற்றிருந்தது. போர்ச்சுகீசியர்களின் காலத்தில் 16-ம் நூற்றாண்டில் இரணை தீவில் புனித மேரி ஆலயமும், 1886-ம் ஆண்டில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் இன்னும் அங்கு உள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது 1992 ஆம் ஆண்டில் இரணை தீவில் வசித்து வந்த சுமார் 200 குடும்பங்களும் தீவிலிருந்து வெளியேற்றப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தற்காலிக முகாம்களில் வசித்து வந்தனர்.

கடந்த 01.05.2017 அன்று தொடங்கி கடந்த ஓராண்டுகளாக இரணை தீவில் தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்டத்திலும், கொழும்பிலும் கூட தொடர் போராட்டங்களை இரணை தீவு மக்கள் நடத்தி வந்தனர். இப்போராட்டங்களின் விளைவாக இரணை தீவு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான பல கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தொடர் போராட்டம் ஒரு ஆண்டை எட்டும் தருணத்தில் (359 ஆம் நாள் போராட்டத்தின் போது) கடந்த 23.04.2018 அன்று சுமார் 50 படகுகளில் வெள்ளைக் கொடிகளை ஏந்தி இரணை தீவில் சென்று இறங்கினார்கள்.

1992ம் ஆண்டில் இரணை தீவிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டபோது அங்கு பள்ளி, மருத்துவமனை, நூலகம், தபால் நிலையம், மீன்பிடி இறங்குதளம் ஆகியன இருந்தன. 26 ஆண்டுகள் கழித்து தங்களின் சொந்த மண்ணில் கால் வைத்துள்ள இரணை தீவு மக்கள் தற்காலிக குடில்களிலும், உள்நாட்டுப் போரின் போது குண்டுவீசப்பட்டு சேதமடைந்து கைவிடப்பட்ட கட்டிடங்களிலும் வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

இரணை தீவில் தற்காலிக குடில்களிலும், கைவிடப்பட்ட கட்டிடங்களிலும் வசித்து வரும் மக்கள் தங்கள் சொந்த நிலங்களை மீண்டும் தங்களுக்கு அளிக்க வலியுறுத்தி அங்குள்ள புனித மேரி ஆலய வளாகத்தில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தனர்.

இந்நிலையில் இலங்கை மீள்குடியேற்ற அமைச்சகத்தின் செயலாளர் பி.சுரேஸ், இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்ன் செயலாளர் ஆர்.ராஜபக்ச, இலங்கையின் கடற்படை தளபதி எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இலங்கை மீள்குடியேற்ற அமைச்சகத்தின் செயலாளர் பி.சுரேஸ் கூறுகையில், ''இரணை தீவில் வசித்த வந்த மக்களின் நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனடிப்படையில் விரைவில் அவர்களின் நிலங்களில் 190 குடும்பங்கள் குடியேற்றப்படுவார்கள். இரணை தீவில் கடற்படையினர் 8 ஏக்கர் நிலத்தில் நாட்டின் பாதுகாப்பு, கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைதீவு மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக தொடர்ந்து தங்கியிருப்பார்கள்'' என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x