Published : 16 May 2018 04:04 PM
Last Updated : 16 May 2018 04:04 PM

சாலையில் திடீரென பற்றி எரிந்த மின் பெட்டி: 101-க்கு விடுமுறை விட்ட தீயணைப்புத்துறை

சாலையில் திடீரென மின்சாரப்பெட்டி தீப்பிடிக்க அதைப்பார்த்து பயந்துபோன பொதுமக்கள் திரும்ப திரும்ப தீயணைப்புத்துறையின் அவசர எண் 101-க்கு அடித்தபோதும் யாரும் போனை எடுக்கவில்லை.

சென்னை திருவல்லிக்கேணியில் ஹபீபுல்லா தெரு உள்ளது. எந்நேரமும் பொதுமக்கள் அதிகமாக புழங்கும் இடம் இது. பள்ளி விடுமுறை காலமானதால் பள்ளிக் குழந்தைகளும் அதிகம் விளையாடி கொண்டிருந்த நேரம். மதியம் 2.30 மணி அளவில் அங்குள்ள மின் இணைப்புப் பெட்டி வெடிக்க ஆரம்பித்தது. பின்னர் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

இதைப்பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ அணையாமல் வெடித்தபடி மேலும் திகுதிகுவென எரிய ஆரம்பித்தது. மின் இணைப்பு பெட்டியை தண்ணீர் ஊற்றி அணைக்க முடியாது என்பதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்தனர்.

சிலர் அவசர அவசரமாக தீயணைப்புத்துறை அவசர எண் 101-க்கு போன் செய்தனர். ஆனால் போன் ரிங் போயும் போனை யாரும் எடுக்கவில்லை. மாற்றி மாற்றி போன் செய்தும் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டறை எண் 101-க்கு பலரும் போன் செய்தும் போனை யாரும் எடுக்கவில்லை.

இதனிடையே தீ மளமளவென எரிந்து பக்கத்தில் இருந்த தெருவின் பெயர் பலகையும் சேர்ந்து எரிய ஆரம்பித்தது. இதன் பின்னர் பொதுமக்களில் சிலர் வாகனங்களில் நேரடியாக வாலாஜா சாலையில் அமைந்துள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று புகார் அளித்தவுடன் தீயணைப்புத் துறையினர் புறப்பட்டுச்சென்று தீயை அணைத்தனர்.

இது குறித்த தகவல் பெற்ற நாம், 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் தீயணைப்புத்துறையின் கட்டுப்பாட்டறை எண் 101-க்கு தொடர்பு கொண்டபோது கடைசிவரை யாரும் போனை எடுக்கவில்லை. பொதுமக்கள் அவசரத் தேவைக்காக அழைக்கப்படும் தீயணைப்புத்துறையின் அவசர கால எண் செயல்படாவிட்டால் அதற்கு மாற்று எண் அளிக்க வேண்டியது முக்கியம்.

இது குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ’’தீயணைப்புத்துறை தலைமை அலுவலகம் அருகே கேபிள் பதிக்கும் வேலை நடப்பதால் பிஎஸ்என்எல் கேபிள் துண்டிக்கப்பட்டுள்ளது. சரி செய்யும் பணி நடைபெற்று வருவதால், விரைவில் சரியாகிவிடும்'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x